|
ஆவணி சதுர்த்தி என்பது ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்தில் வரும் சதுர்த்தியில் (வளர்பிறை நான்காம் நாள்) அநுட்டிக்கப்படும் விநாயக சதுர்த்தி விரதமாகும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே.
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே.
ஆவணி மாதம் வரும் 'சதுர்த்தி' திதியை 'விநாயகர் சதுர்த்தி' என்று அழைக்கின்றோம். அன்றைய தினம் நாம் விரதமிருந்து முறையாக ஆனை முகனை வழிபட்டு அருகிலிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு கணபதியைக் கொண்டாடினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.
எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத் தான் நாம் தொடங்குவது வழக்கம். 'பிள்ளையார் சுழி' போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கிறது. எனவே, தான் 'மூல கணபதி' என்று அவரை நாம் வர்ணிக்கின்றோம்.
கணங்களுக்கு எல்லாம் அதிபதியாவதால் அவரை 'கணபதி' என்று சொல்கின்றோம். எனவே, நாம் 'தேவ' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'மனித' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், 'அசுர' கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப் பெருமானாகும்.
அந்த ஆனைமுகனுக்கு உகந்த மாதம் தான் 'ஆவணி' மாதமாகும். அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எதில் கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார்.
மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். சாணத்திலும் காட்சி கொடுப்பார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கும் சென்று வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை முழு நம்பிக்கையோடு நாம் வழிபட்டால், இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும்.
அன்றைய தினம் அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல் பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப் பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்கு பிடித்த மலர்கள் தும்பைப் பூ மல்லிகைப் பூ, செண்பகப்பூ, செம்பருத்திப் பூ, எருக்கம் பூ ஆகியவையாகும்.
அவருக்கு முன்னால் தோப்புக் கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். 'தோர்பிகர்ணம்' என்பதே 'தோப்புக் கரணம்' ஆயிற்று. 'தோர்பி' என்றால் கைகளினால் என்று பொருள். 'கர்ணம்' என்றால் 'காது' என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் முழுப் பொருளாகும்.
விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்த திதியாகும். அவருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது. மோதகம் படைப்பதன் காரணம், மோதும் அகங்கள் (மனங்கள்) இருக்கக் கூடாது.
எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித் தான் மோதகத்தைப் படைக்கிறோம். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமலிருக்க மோதக நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும்.
கொய்யாப் பழம் என்றாலும், அது மரத்திலிருந்து கொய்த பழம் தான். விளாம் பழம் என்றாலும் அது விழுந்த பழம் தான். கடினமான ஓட்டிற்குள் இனிய கனியிருக்கும். கடினமான உழைப்பிற்கு பிறகு கனிவான வாழ்க்கை இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
'அவல்' குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே, அவல் பொரி கடலையை ஆனைமுகனுக்கு அர்ப்பணித்து கணபதி கவசம் பாடினால், மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும். மக்கள் போற்றும் செல்வாக்கும் வந்து சேரும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த் தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள் கொடுப்பவர் ஆனைமுகப் பெருமானாகும்.
சனி அவரைப் பிடிக்க வரும் பொழுது, 'இன்று போய் நாளை வா' என்று எழுதி வைக்க சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகனாகும். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரமிருந்து அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கட்பேறு கிட்டும். காரிய வெற்றி உண்டாகும்.
புத்தி கூர்மை ஏற்படும். நல்ல வாழ்க்கை அமையும். எள்ளுருண்டையை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பிலிருந்து விடுபட இயலும். தோப்புக்கரணம் போடுவதால் மூட்டுகால் வலிமை பெற்று ஆரோக்யத்தை வழங்கும்.
எனவே தான் 'வேழ முகத்து' விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும் என்றும், 'வெற்றி முகத்து' வேழவனைத் தொழ புத்தி மிகுந்து வரும்... என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.