Friday, December 26, 2014

திருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .


மாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, "கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு  ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான்  ஸ்ரீ பாலமுருகன்  ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் 

திருவெம்பாவை மூலம் மணிவாசகப் பெருமான் நமக்குக் கூறும் உறுதியான அறவுரை மற்றொன்றும் உண்டு. இப்பாடல்களில் வரும் பெண்கள் என்ன செய்கிறார்கள்?  ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள். அவர் தம் மனத்து இல்லம் தோறும் இறைவன் எழுந்தருளி இருப்பதால் என்ன குறையும் இல்லாதவர்கள். எனினும் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியைச் சுமக்கின்ற பரந்த மனமுடைய அவர்கள், இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவித்து, அவருடைய உறுதியின்மையால் தாம் தளர்வுறாது, இறைவன் பால் ஒருமைப்பட்ட தம் மனத்தால் அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானைப் பாடத் தேற்றுகின்றனர். 


திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பிகை உடனுறை  ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி

இதுவே நமது இன்றைய தேவை. நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத்தை அண்டை அயலவர் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், "எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே !" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.


பெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே. "எது எமைப் பணிகொளும் ஆறு ? அது கேட்போம்." எனத் தலை நிற்போம்.

"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே"


திருவெம்பாவை

திருவண்ணாமலையில் அருளியது 

திருப்பள்ளியெழுச்சி

திருப்பெருந்துறையில் அருளியது
ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''