Wednesday, June 18, 2014

திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !


திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோயில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் காவிரி வட கரையில் விளங்கும் தலம். இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரினைக் குறிக்கிறது. இறைவரின் திருப்பெயர்: நீர்த்திரள்நாதர். இத்திருப்பெயரை இவ்வூர்த் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருந்தகையார் ``செழுநீர்த் திரளைச் சென்று ஆடினேனே`` என எடுத்து ஆண்டுள்ளார். இதுவன்றி ஜம்புகேசுவரர் என்று வேறு திருப்பெயரும் உண்டு. வெண்ணாவல் மரத்தின் அருகில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர் பெற்றார். (ஜம்பு -நாவல்) இறைவி திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி


தல வரலாறு :

திருச்சியில் உள்ள தலம் திருவானைக்கா. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம் தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.

இங்கு முன்னர் ஜம்பு முனிவர் பூசை செய்த லிங்கத்துக்கு மேலே அங்கிருந்த சிலந்தி தினமும் விதானம் போல வலை பின்னி அதையே தன் வழிபாடாகச் செய்து வந்தது. அங்கு ஓர் யானையும் தினமும் நீரினால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. யானையின் நித்திய வழிபாடு சிலந்தி பின்னிய வலையைத் தினமும் சிதைத்தது. இதனால் ஆற்றாது கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையில் துதிக்கையினுள் புகுந்து கடிந்துவிட்டது. வலி தாங்காத யானையும் துதிக்கையை அடித்து மோதி இறந்தது. அதனுள் இருந்த சிலந்தியும் மாண்டது. இச் சிலந்தியே அடுத்த பிறப்பில் சோழ இராஜ குடும்பத்தில் பிறந்தது.

இவன் தாய் இவனைப் பிரசவிக்கும்போது சோதிடர்கள் காலம் கணித்து இன்னும் சில நாழிகை காலம் தாழ்த்திப் பிறந்தால் இவன் சக்கரவர்த்தியாக உலகாள்வான் என்று கூறினர். இதனால் பிரசவத்தை இயற்கைக்கு மாறாக தள்ளிப்போடுவதற்கு தாய் சம்மதித்தாள். அவளை தலைகீழாக்க் கட்டித் தூக்குமாறு பணித்தாள். இதனால் பிரசவமும் தாமதமாகி ஆண் குழ்ந்தை பிறந்தது. காலந் தாழ்த்திப் பிறந்ததனால் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. இன்றைய மருத்துவத்தில் காலந்தாழ்த்திப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இச் செங்கண்ணை Sub-conjunctival haemorrhage என்று கூறுகின்றனர். இவ்வாறு சிவந்த கண்ணுடன் பிறந்த காரணத்தால் இக் குழந்தைக்கு கோச் செங்கணான் என்று பெயரிட்டனர். சமஸ்கிருதத்தில் இவனை 'ரெக்தாக்ஷ சோல' என்று அழைப்பர். தாயும் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு இறந்துவிட்டாள். 

இவனே பின்னால் கோச்செங்கட் சோழன் என்ற பெயருடன் அரசாட்சியேறி சோழ நாட்டை ஆண்ட மன்னன். இவன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானை ஏற முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை. இந்த கட்டட அமைப்புக் கோவில்களை மாடக்கோவில்கள் என்று அழைப்பர். இவன் விஷ்ணு ஆலயங்களும் கூட அமைத்துள்ளான். வைணவ ஆழ்வார்களினால் பாடப்பட்ட ஒரேயொரு சைவ நாயன்மார் இந்த கோச்செங்கட் சோழனே.

முருங்கிலங்கு கனித்துவர் வாய்ப் பின்னைக்கேள்வன்
மன்னெல்லாம் முன்னவியச் சென்று வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் சென்ற வேந்தன்
சிரந்துணித்தான் திருவடிநும் சென்னி வைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவாய் எண்டோள் ஈசற்கு
எழில்மாடம் எழுபதுசெய்து உலகம் ஆண்ட
திருக்குளத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே
- பெரியாழ்வார் திருமொழி 6;6;8-

என்று பெரியாழ்வார், நாச்சியார் கோயில் (திரு நறையூர்) பெருமாளைப் பாடும்போது எழுபது சிவாலயங்கள் எழுப்பிய சோழனால் கட்டப்பட்ட ஆலயம் என்று சிறப்பித்துப் பாடுகின்றார். இவ்வாறு பல வேறு வகையான கோவில் கட்டட அமைப்புகளைப் பற்றி பின்வரும் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடலும் கூறுகின்றது.

பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங் கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்(டு) ஏத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே
- திருநாவுக்கரசர் தேவாரம்-

                                        


தலபெருமை:

கோயில் ஐந்துபிராகாரம் கொண்ட பெரியகோயில், ஆயிரங்கால் மண்டபம் உண்டு. முதல் மண்டபம் மிகச் சிறந்தது. சுவாமி சந்நிதி மேற்கு, அம்மன் சந்நிதி கிழக்கு. சுவாமி பிராகார மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி நிஷ்டாதேவி உருவம் இருக்கிறது. இதனை, சனீஸ்வரர் என்று தவறாக எழுதி இருந்தார்கள். நான்காவது மதில் (திருநீற்றுமதில்) மிகப்பெரியது. இது பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்தலம் ஆகும். (அப்பு- தண்ணீர்) சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தில் நீர் ஊறி வருவது இன்றும் காணத்தக்கது. முற்பிறப்பில் சிலந்தியாயிருந்து சிவபெருமானை வழிபட்ட புண்ணியத்தின் பயனாய் அரசனாய்ப் பிறந்த கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. வெளிப்புறத்து மதிலுக்குத் திருநீறு இட்டான் திருமதில் என்று பெயர். 



இறைவர் சித்தராய் எழுந்தருளித் திருநீற்றைக் கூலியாகக் கொடுத்து எடுப்பித்த காரணத்தால் அம்மதில் அப்பெயர் பெற்றது. திருக்கயிலையிலிருந்து எழுந்தருளி இறைவி இங்குத் தவஞ்செய்து ஞானோபதேசம் பெற்ற காரணத்தால் ஞானஸ்தலம் எனவும் இது வழங்கப்படும்.



உறையூர்ச்சோழர் மணியாரம் தரித்துக்கொண்டு காவிரியில் நீராடினார். அது ஆற்றில் விழுந்துவிட்டது. உடனே அவர் ``சிவபெருமானே கொண்டருளும்`` என வேண்டினார். அந்த மணியாரம் திருமஞ்சனக்குடத்தில் புக, அதனை இறைவருக்கு அபிடேகிக்கும் போது அவர் அதனை ஆரமாக ஏற்றுக்கொண்டு சோழனுக்கு அருள் புரிந்ததும் இப்பதியேயாகும்.


இச்செய்தியை, 


சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூர்ப்பதிகத்தில்,

``தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து

நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே

ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்`` 

எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்,

``ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே``

எனவும் சேக்கிழார்பெருமான், ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்தில்,

``வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்

கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற

அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி

தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்``
எனவும், போற்றுவாராயினர்.



தலத்தைப் பற்றிய நூல்கள்: 


கச்சியப்பமுனிவர் இத்தல புராணத்தையும் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அகிலாண்ட நாயகி மாலையையும் பாடியுள்ளனர். இவைகள் இரண்டும் அச்சேறி வெளிவந்துள்ளன.



தலத்தின் பெருமையை உணர்த்தும் புராணப்பாடல் ஒன்று பின்வருமாறு:- 


``மேதகைய பயன்விழைவோர் ஞானதலத்

துறைகுவது மேவாதாயின்

ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே

லுரைப்பக்கேட்க

காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங் 

கடந்துமேலாம்
போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை 
பொலங்கொம்பன்னாய்.``
-திருவானைக்காப் புராணம் - தலவிசேடப் படலம்.



தலகல்வெட்டு: 


இக்கோயிலில் பிற்காலத்துச் சோழ மன்னர்கள், பாண்டியர்கள், ஹொய்சலர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பெற்ற நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் சரித்திர சம்பந்தமான உயரிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.

இக்கோயில் சிவபெருமான் திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர் என்னும் திருப்பெயர்களாலும், அம்பிகை அகிலாண்டநாயகி என்னும் பெயரா லும் குறிக்கப்பெற்றுள்ளனர். இக்கோயில் முதற் பிராகாரத்துத் துவார பாலகர் இருவரையும் எழுந்தருளுவித்தவர் இருங்கொளப்பாடி வளநாட்டுக் கருப்பூரில் இருந்த இளைய நயினார் மகனார் தெய்வங்கள் பெருமாள் ஆவர். இச்செய்தி அத்துவார பாலகர்களின் அடிப்பீடங்களில் பொறிக்கப்பட்டிருக்கின்றது.



நான்காம் பிராகாரத்தில் அகிலாண்டநாயகி அம்மன் கோயிலின் முன் உள்ள பசுபதீஸ்வரம் உடையாரை எழுந்தருளு வித்தவர் நீலகண்ட நாயக்கராவர். இச்செய்தி ஹெய்சால வம்சத்தைச் சேர்ந்த வீர ராமநாததேவரின் பதினான்காவதாண்டுக் கல்வெட்டால் தெரியவருகின்றது. இக்கோயிலின் உற்சவ மண்டபத்தைக் கட்டியவர் சதாசிவ வரஜப்பைய யாஜி தீட்சிதராயர் ஆவர். இவரே அமாவாசை, பொங்கல் புதுநாள் இவைகளின் சிறப்புப் பூசனைக்கு நிவந்தமும் அளித்துள்ளார். முதற் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள எடுத் தருளிய ஷ்ரீபாதீஸ்வரம் உடைய நாயனார் கோயிலைக் கட்டியவர், திருஞானசம்பந்தர் என்னும் பெயரினர் ஆவர். நான்காவது பிராகாரத்திலுள்ள மேலக்கோபுரம் ஆதித்யதேவனது மகனான சந்தபேந்திரனால் சகம் 1357 அதாவது கி.பி. 1435-இல் கட்டப் பெற்றதாகும். வலம்புரி விநாயகரையும், சுப்பிரமணியரையும் மும்முடி திம்மரசர் என்பார் எழுந்தருளுவித்துள்ளார். விபூதி பிராகாரத்து மதிற்சுவரைத் திருநீற்றுச் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான்.



ஹொய்சல அரசனான வீரசோமீசுவரன் (சோழநாட்டில்) திருவரங்கத்துக்கு வடக்கே 8 கி. மீ. தூரத்தில் உள்ள கண்ணனூர்க் கொப்பத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிறந்த சிவபக்தன் ஆவான். ஆதலின், திருவானைக்கா கோவிலின் கிழக்குக் கோபுரமான எழுநிலைக் கோபுரத்தைக் கட்டுவித்தான். வீரசோமீசு வரன் திருநாள் என்று தன் பெயரால் இத்திருக்கோயிலில் ஒரு விழா நடத்திவந்தான். வட திருவானைக்காவில் தன் பாட்டனாகிய பாலாலன் II என்பவன் பெயரால் வாலால ஈசுவரத்தையும், தன் பாட்டியாராகிய பத்மலா தேவியின் பெயரால் பதுமலீசுவரத்தையும் எடுப்பித்துள்ளான். இந்த வீர சோமீசுவரனது தாயார் கல்லலா தேவியார் ஆவார். இவரது மேன்மையின் பொருட்டுக் கண்ணனூரி லுள்ள பாலீஸ்வரம் உடையார்க்கு இந்த அரசன் நிபந்தம் அளித் துள்ளான். இக்கோயிலும் இவனால் எடுப்பிக்கப் பெற்றதாகும். இந்த வீர சோமீசுவரனது இருபத்திரண்டாவது ஆட்சியாண்டில் திருவானைக்கா கோயில் மூன்றாவது பிராகாரத்தின் வடபக்கத்தில் கல்வாக்கூர் தியாகப்பெருமாள், தியாகவிநோதீசுவரம் என்னும் கோயிலைக் கட்டியுள்ளனர். இவைபோன்று ஹொய்சல அரசர்களின் வரலாறுகள் பலவற்றை அறிதற்கு இக்கோயில் ஒரு சிறந்த பொக்கிஷமாக விளங்குகின்றது.



மாறவர்மன் சுந்தரபாண்டியன் பிறந்த நாள் ஆவணி மாதத்து அவிட்டமாகும். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I பிறந்தநாள் சித்திரை மாதத்து மூலநட்சத்திரமாகும். இச்செய்திகளை இவர்கள் இத்திருவானைக்கா கோயிலுக்கு அளித்துள்ள நிபந்தங்கள் அறிவுறுத்துகின்றன.

சோழமன்னர்கள் இக்கோயிலைப் பெரிதும் போற்றி வந்தனர். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் (இவனே இக்கல் வெட்டில் கோனேரின்மை கொண்டான்) என்பவன் நித்த விநோத வளநாட்டு வில்லவநல்லூரில் இருபத்தைந்து வேலி நிலத்தைத் தன் அத்தையாகிய திருப்பெரியதேவியார் பேரால் திருவானைக்காவுடைய சிவபெருமானுக்குத் திருநாமத்துக்காணியாக இறையிலி செய்து கொடுத்துள்ளான். திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் இருபதாம் ஆண்டுக் கல்வெட்டினால் இக்கோவிலுக்கு இருபது காவலாளிகள் இருந்தனர் என அறிகின்றோம். இக்கல் வெட்டில் பிணைத்தீட்டு (ஜாமீன்) என்ற பெயர் உளது.

மகாதேவ தீட்சிதர் மகன் சதாசிவ மகின் (தீட்சிதர்) காவை நூல்கள் எனப் பல எழுதினார். திருவானைக்காவிலுள்ள நஞ்சை நிலங்களை அளந்தகோல் சிவநாமத்திரேயம் என்னும் பெயர் பூண்டதாய் நான்கு அடி நீளமுள்ளதாய் இருந்தது. அகிலாண்ட ஈஸ்வரி கோயில், ஜம்புநாதர் கோயில் இவைகளின் தளவரிசைகளைச் செய்தவர் பாஸ்கரராயபாரதி தீட்சிதர் ஆவர். தோப்பு ஒன்றிற்குச் சிலந்தியைச் சோழனாக்கினான் என்னும் பெயரும் பட்டன் ஒருவனுக்கு என்னானைக் கன்று என்ற பெயரும் வைக்கப் பெற்றிருந்தன. என்னானைக் கன்று என்னும் பெயர் இவ்வூர்த் திருத் தாண்டகத்திலும் கூறப் பெற்றுள்ளது.

விஜயரங்க சொக்கநாத நாயகருடைய நாடகசாலை ஆசிரியர் வைத்தியப்ப ஐயா, ஜம்புதீர்த்த மண்டபத்திற்குப் படித்துறைகள் கட்டியுள்ளார்.

சங்கரமகா தேவர்க்கு இவ்வூரில் மடம் இருந்தது. நாற்பத் தெண்ணாயிரவர் என்னும் பெயருள்ள மற்றொரு மடமும் இருந்தது. அதில் துறவிகட்கு அன்னம் அளிக்கப்பட்டுவந்தது.(திருவானைக்கா, திருவாவடுதுறை ஆதீன வெளியீடு.)