Thursday, October 30, 2014

பன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017


திருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும். பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள்.


ஆனாலும் சனி அமர்வது குருவின் சாரத்தில் என்பதால் துன்பத்தை விட இன்பத்தையே கொடுக்கும். பல துறைகள் பெரும் முன்னேற்றம் அடையும். விருச்சிகத்தில் சனி அமர்ந்து ரிஷப இராசியை பார்வை செய்வதால், பெண்களுக்கு சற்று யோகமான நேரம் இது. பொதுவாக இந்த சனிபெயர்ச்சியால் வளர்ச்சி அதிகரிக்கும்.

சனி பெயர்ச்சி பலன்கள்:

மேஷ இராசி :

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு வரப்போகிறார். அஷ்டம சனியாக வரும் அவர், இனி உங்கள் கஷ்டங்களை போக்க போகிறார். ‘அஷ்டம சனி வந்தால் அவஸ்தை’ என்று பலர் கூறுவார்கள். ஆனால் என்னை பொருத்தவரையில் அவர் (சனி) குருவின் பலத்தால், அதாவது விசாக நட்சத்திரத்தில் வரப்போவதால், அஷ்டமசனியின் பாதிப்பு வராது. இராசிக்கு 09-12-க்குரியவனின் ஆதிக்கத்தில் வருவதால், விரயங்கள் தீரும்.


கடன் குறையும். பாக்கியம் சேரும். உழைப்பு அதிகம் இருக்கும். யாத்திரை-தெய்வ தரிசனம் கிட்டும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடக்கும். சனி 2-ம் இடம், 5-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்வதால், பேச்சில் கவனமும், நிதானமும் தேவை. வீண் செலவுகளை நீங்கள்தான் திட்டமிட்டு குறைக்க வேண்டும். பூர்வீக சொத்தில் சில பிரச்சினைகள் வந்தாலும் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனம் தேவை.

தடைப்பட்ட கல்வி தொடரும். வேலை வாய்ப்பும், பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். வழக்கு தொல்லை விடுதலை ஆகும். வீடு, மனை, வாகனம் அமையும். அரசாங்க ஆதரவு கிட்டும். சொந்த தொழில் தொடங்க வாய்ப்பும் அமையும். பொதுவாக, அஷ்டம சனி ஆட்டி படைக்காது கவலை வேண்டாம்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை தோறும் காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும். சனிப்பெயர்ச்சி அன்றோ அல்லது உங்களின் பிறந்தநாள் அன்றோ நீல வர்ண வஸ்திரத்தை ஒருவருக்காவது தானம் செய்யுங்கள். ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!


ரிஷப இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு, 7-ம் இடத்திற்கு அதாவது சப்தம ஸ்தானத்திற்கு வரப்போகிறார். பொதுவாக சப்தம ஸ்தானம், ரிஷப இராசிக்கு யோக ஸ்தானம். 10-க்குரிய சனி, 7-ல் வருவது எதிர்பாரா யோகத்தை தரும். ரிஷப இராசிக்கு தர்ம-கர்மாதிபதியான சனி பகவான் யோகத்தையே செய்யும், கெடுதல் செய்யாது.

இராசிக்கு 8-11-க்குரியவன் ஆதிக்கத்தில் வருவதால் திருமணம், எதிர்பாரா ஐஸ்வரியம், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் கணிசமான அளவு பண வரவை கொடுக்கும். நண்பர்களால் நன்மை, லாபம் உண்டு. ஜென்மத்தை, பாக்கிய ஸ்தானத்தை, சுகஸ்தானத்தை அதாவது உங்கள் இராசியையும், 9-ம் இடம், 4-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை.


கல்வித்துறையில் கவனம் தேவை. பிரயாணம் செய்யும்போது நிதானம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை. பழைய கடன்கள் தீரும். மேல்படிப்பு தொடர வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு வரும். புதிய நண்பர்களின் உதவியால் தொழில்தொடங்க உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும். பொதுவாக சப்தம சனி வெற்றியை கொடுக்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை அன்றோ அல்லது உங்கள் நட்சத்திரம் வரும் நாளிலோ ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் கருப்பு அல்லது நீல வர்ணத்தில் ஆடை அணிய வேண்டும். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

மிதுன இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு வருகிறார். பொதுவாக இராசிக்கு 3,6,11-ல் சனி அமர்ந்தால் இராஜயோகம்தான். இது ஜோதிட விதி. 7-10-க்குரிய குருவின் ஆதிக்கத்தில் வருவதால், தொழில்துறையில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பாரா நண்பரின் உதவி கிடைக்கும். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகமும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் வரலாம்.

8-க்குரியவன், 6-ம் இடத்தில் அமர்ந்ததால் வழக்கில் வெற்றி கொடுக்கும். விரோதங்கள் மறையும். உடல்நலம் பெறும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். 8-ம் இடத்தை, 12-ம் இடத்தை, 3-ம் இடத்தை பார்வை செய்வதால், வீண் பிரச்னைகள் வரத்தான் செய்யும். மரத்தில் பழம் இருந்தால் கல் எறியத்தான் செய்வார்கள். நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள்.

தேவையற்ற விரயங்கள் செய்யாதீர்கள். சகோதர, சகோதரி வசம் வீண் விவாதம் வேண்டாம். மேல்அதிகாரி வசம் பணிவு தேவை. சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடைப்பெறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். நினைத்த காரியத்தை நடத்தி தந்து, மறைந்த சனி நிறைந்து கொடுப்பார்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! விநாயகப்பெருமானை வணங்குங்கள். சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதமோ அல்லது புளியோதரை சாதமோ தானம் செய்யுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

கடக இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 5-ம் இடத்தில் அமரப்போகிறார். 6-9-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், இத்தனை மாதங்களாக செய்த சோதனை போதும், இனி இவர்கள் சாதனை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து சனி பகவான் நன்மைகளை செய்யப்போகிறார்.

வெளிநாட்டு வியபாரம், வெளிநாட்டு பயணம், பிள்ளைகளுக்கு திருமணம் ஆகியவற்றை செய்து வைப்பார். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். புதிய வாகனம், வீடு-மனை வாங்கும் காலமிது. உயர்கல்வி வரும். தடைப்பட்ட தொழில் துவங்கும். நோய்நொடி நீங்கும். பொதுவாக, பஞ்சம சனி நன்மைகளை செய்வார்.

2-ம் இடம், 7-ம் இடம், 11-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள் கூட்டாளி வசம் கவனம் தேவை. வழக்கு விஷயத்தில் எதிராளியிடம் சுமுகமாக பேசி சாதகமாக்கி கொள்ளுங்கள். தூர பயணம் செய்யும்போது, உடல்நலனில் கவனம் தேவை. மற்றவர்கள் ஆலோசனையை பொறுமையாக கேளுங்கள். பெற்றோர் உதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவில் காரியங்கள் நன்மையாக முடியும். சனிபகவான் சாதகமாக வழி நடத்துவார்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் வாசனை மலர்களை பெருமாளுக்கு அணிவித்து வணங்குங்கள். நெய்தீபம் ஏற்றுங்கள். புளிச் சாதம் தானம் செய்யுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

சிம்ம இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 4-ம் இடத்தில் அதாவது விருச்சிகத்தில் வந்து அமரப்போகிறார். பொதுவாக 4-ம் இடத்தில் சனி அமர்ந்தால், ‘அர்தாஷ்டம சனி’ என்பார்கள். அர்தாஷ்டம சனி நன்மை செய்யாது என்றும் கூறுவார்கள். அது உங்கள் இராசியை பொறுத்தவரையில் இந்த நேரத்தில் அவ்வளவு உண்மையில்லை.

காரணம், 5-8-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், அர்தாஷ்டம சனியாக இருந்தாலும், ஆனந்தத்தை அள்ளி கொடுக்க போகிறார். ஆம். பஞ்சமாதிபதி காலில் வருவதால், கஷ்டங்கள் கடலில் கரைந்தது போல் ஆகும். தொட்டது துலங்கும். பகைவர்கள் அடங்கி விடுவார்கள். கடன், நொய்நொடி அறவே தீரும்.

பழைய வீடு, புதியதாய் பொலிவு பெரும். கல்விதடை நீங்கும். உத்தியோகம், சொந்ததொழில் அமையச்செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டு. ஜென்மத்தையும், 6-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், தேவையற்ற கடன் வேண்டாம். யாரிடத்திலும் விரோதம் வளர்க்க வேண்டாம். அகலகால் வைத்து ஆடம்பர செலவு செய்ய வேண்டாம். சுகஸ்தான சனி சுகமான வாழ்வை தருவார்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை தோறும் காக்கைக்கு எள் சாதம் வையுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். சனிக்கிழமையில் நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் ஆடை அணியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

கன்னி இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு வருகிறார். 4-7-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வெகு பிரமாதமாக வரப்போகிறார். அன்றுடன் ‘ஏழரை சனி’ விடுதலை ஆகிறது. கூண்டு பறவை போல் சிக்கி இருந்த நீங்கள், இனி சுதந்திரமாக இருப்பீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் வருவதால், மண்ணை தொட்டாலும் பொன்னாகும். திருமண தடை நீங்கும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் பெருக வாய்ப்பு வரும். குடும்ப சச்சரவு தீரும். தடைபட்ட கட்டடவேலை இனி தொடங்கும். 5-ம் இடம், 9-ம் இடம், 12-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், பூர்வீக சொத்தில் வழக்கு பிரச்சினை வரலாம். சொத்து வாங்கும் பொழுது முழு கவனம் தேவை.

பிணை விடயமாக இருந்தால் தவிர்க்கவும். பெரியவர்களிடம் அடங்கி போவது நன்மை தரும். அவர்கள் வசம் தர்க்கம் செய்ய வேண்டாம். மனைவியால் யோகம் உண்டு. தடைப்பட்ட கல்வி தொடரும். அயல்நாட்டு வியபாரத்தில் அதிக லாபம் கிட்டும். கீர்த்தி சனி, வசந்த காற்று வீசச் செய்வார்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வஇலையை சமர்பித்து வணங்குங்கள். அதேபோல சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசிஇலையை சமர்பிக்கவும். ஊனமுற்ற முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் வஸ்திரம் அணிவியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.

துலாம் இராசி :

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி வருகிறார். ஏழரை நாட்டு சனியாக இருந்தாலும் கவலை வேண்டாம். 3-6-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப்போவதாலும், 2-ம் இடத்து சனியை கடகத்தில் இருக்கும் குரு பார்வை செய்வதாலும், பாதகம் அவ்வளவாக இருக்காது.

4-5-க்குரிய, அதாவது சுகாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி சனி நன்மையே செய்வார். பூர்வீக சொத்தில் வழக்கு இருந்தால் தீர்வு கிடைக்கும். கல்வி தடை நீங்கும். மேலதிகாரி உதவி கிடைக்கும். அரசாங்க உதவியும் கிடைக்கும். வங்கி உதவி கிடைக்கும். பெற்றோர் ஆதரவில் நன்மை தேடி வரும். உடல்நலனில் முன்னேற்றம் தெரியும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். குடும்ப செலவுகளும் கூடுதலாக இருக்கும்.

4-ம் இடம், 8-ம் இடம், 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வாகன பயணத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் பேசும்போது, பேச்சில் கவனம் தேவை. லாபம் வருகிறது என்று வாரி,வாரி செலவு செய்யக்கூடாது. தேவையில்லா செலவால் மற்றவர்களிடம் கடன் கேட்கும் சூழ்நிலை உண்டாக்கி விடும். கவனமாக செயல்பட்டால், முன்னேற்றத்தை தருவார் தன ஸ்தான சனி.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! நல்லெண்ணை தானம் செய்யுங்கள். இரும்பு பொருட்களை தானம் செய்யுங்கள். இல்லத்தில் நல்லெண்ணையுடன் நெய் சேர்த்து தீபம் ஏற்றி மனதால் சனிஸ்வர பகவானை வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

விருச்சிக இராசி:

விருச்சிக இராசி அன்பர்களே – 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் அமரப் போகிறார். ‘ஐயோ.. ஜென்ம சனியா?’ என்று பயப்பட வேண்டாம். 2-5-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி அமர்கிறார். ஆகவே திருமணம், குழந்தைபேறு என்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். சிலர் உத்தியோகம் விட்டு, சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள். எதிர்பாரா தனலாபம் கிட்டும். கூட்டாளிகளால் தொழில் ஆதாயம் வரும். சிலருக்கு உறவினர்களால் நன்மை உண்டாகும். பட்டப்படிப்பு தொடரும்.

பட்ட கஷ்டம் தீரும். தொழில் துவங்குவதற்கு சொத்தை அடமானம் வைக்க நேரும். 3-ம் இடம், 7-ம் இடம், 10-ம் இடங்களை சனிப் பார்வை செய்வதால், தேவை இல்லா மனக்குழப்பம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுக்கும் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி வசம் நிதான பேச்சு அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தால் தீர்ந்து, சொத்துக்கள் கைக்கு வரும். நோய்நொடி தீரும். ஜென்ம சனி மென்மையான வாழ்வு தரும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு வெண்ணை சாத்தி வணங்குங்கள். காக்கைக்கு சனிக்கிழமைதோறும் எள் சாதம் வையுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

தனுசு இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வரப்போகிறார். ‘ஏழரை சனி பிடித்தது’ என்று பயம் வேண்டாம். ஜென்ம-சுகாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாகம் நட்சத்திரத்தில் சனி வருவதால், ஏழரை சனி பாதிப்பு ஒன்றும் செய்யாது. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். வாக்கு பலிதம் உண்டாகும். மனைவியால் யோகம் உண்டு.

திருமணம் நடைபெற வாய்ப்பு வரும். குடும்பத்தில் சச்சரவு நீங்கும். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு வரும். பல நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தீரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். தொழில் தொடங்க வழி பிறக்கும். 2-ம் இடம், 6-ம் இடம், 9-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், கண்களில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு கவனிக்கலாம் என்ற எண்ணம் வேண்டாம். சிறு துளி பெரும் வெள்ளம் என்பதுபோல் சிறுசிறு கடன்தான் பெரிய பாதகத்தை கொடுக்கும். பெற்றோர், பெரியோர் பேச்சை காது கொடுத்து கேளுங்கள். அதனால் நன்மை உண்டாகும், திருப்பம் தரும். ஏழரை சனியின் ஆரம்பமான 12-ம் இட சனி என்று கவலை வேண்டாம்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுங்கள். தயிர் சாதத்தை 8 பேருக்காவது கொடுங்கள். நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் ஆடை அணியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

மகர இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்தில் லாப சனியாக வருகிறார். 12-3-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப்போகிறார். பொதுவாக 3-6-11-ல் சனி அமர்ந்தாலே இராஜயோகம்தான். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். ஜென்ம-தனாதிபதி, 11-ல் இருப்பதால் நினைத்தது நடக்கும். கல்வி முன்னேற்றம், தடைபட்ட சுபகாரியங்கள் அத்தனையும் கைக் கூடும். வரன்கள் தேடி வரும்.

வீடு, மனை வாகனம் அமையும். செல்வந்தர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். அயல்நாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். பிரிவினை-சச்சரவு தீரும். ஜென்மத்தையும், 5-ம் இடத்தை, 8-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், உடல்நலனில் அலைச்சல் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை.

சொத்து வாங்குவதிலும் கவனம் தேவை. வீண் விரோதம் தவிர்க்கவும். ஆடம்பர செலவு குறையுங்கள். நசிந்த தொழில், மீண்டும் புத்துணர்வு பெற வழி பிறக்கும். பிள்ளைகளுக்கு உத்தியோகம், திருமணம் நடக்க நல்ல வாய்ப்பு அமையும். லாப சனி யோக சனியே.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! ஆஞ்சனேயரை வணங்குங்கள். நீலம் அல்லது கருப்பு வஸ்திரத்தை சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அணிவித்து வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

கும்ப இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். தன-லாபாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி வரப்போவதால், ஒரு தொழிலுக்கு இரண்டு தொழிலாக உயர வாய்ப்பு வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும்.

இதுநாள்வரையில் உங்களை புண்படுத்தியவர்கள் புகழ ஆரம்பிப்பார்கள். இனி என்ன செய்வது? என்று குழப்பத்தில் தவித்த நீங்கள், திட்டமிட்ட வாழ்க்கை வாழ ஆரம்பிப்பீர்கள்.

உறவினர்கள், நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் பண இறுக்கம் நீங்கும். தன, தான்யத்தோடு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உள்ளது. பொதுவாக, பொன்னான நேரமிது. சனி பகவான், 12-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடங்களை பார்வை செய்வதால், இனி திட்டமிட்டு வாழுங்கள். நண்பர் வசம், குடும்பத்தார் வசமும் அடங்கி போக வேண்டும் என்றில்லை, ஆனால் அனுசரித்து செல்வது நல்லது.

பிணை விஷயத்தை தவிர்த்து விடுங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும். சகோதர ஒற்றுமை வளரும். உயர் அதிகாரியின் உதவி கிடைக்கும். கடன் சுமை தீரும். 10-ம் இட சனி பகவான், நல்ல யோகத்தை தருவார்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சிவபெருமானையும், பெருமாளையும் வணங்குங்கள். ஈசனுக்கு வில்லஇலையும், பெருமாளுக்கு துளசி இலையும் சமர்பித்து வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

மீன இராசி:

02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். அஷ்டம சனியில் இருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். இனி முடங்கி கொண்டு இருந்த நீங்கள், சுறுசுறுப்புடன் வீர நடை போடுவீர்கள். மனதில் பட்டதை துணிந்து செய்வீர்கள். இதுவரை இருந்த பயம் பஞ்சு போல் பறந்து விடும். குடும்பத்தில் குதூகலம்தான். பிள்ளைகளுக்கு திருமணம், சுபசெலவுகள் ஏற்படும்.

9-ம் இட சனி, உறவினர் வருகையை அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வெகு சிறப்பாக அமையும். வேலை இல்லா திண்டாட்டம் தீரும். வேலையில்லா பட்டதாரிகள், வி.ஐ.பி. ஆவார்கள். பொன், பொருள் சேரும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. 3-ம் இடம், 6-ம் இடம், 11-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், வீண் விவாதம் வரும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை கண்டு கொள்ளாமல் விடுங்கள்.

வாதம் செய்ய வேண்டாம். விட்டு கொடுத்தவன் கெட்டதாக சரித்திரம் இல்லை என்பதை புரிந்து செயல்படுங்கள். மனநிம்மதி உண்டாகும். சொத்து விஷயத்திலும், மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கியத்தில் உள்ள சனி பகவான், சகல பாக்கியங்களையும் வாரி கொடுப்பார்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்குங்கள். புளிசாதத்தை மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது தானம் கொடுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும். நல்வாழ்த்துக்கள்!


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''




மண்டைதீவு - திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த ஐய வருட மகோற்சவ விஞ்ஞாபனம் - 2014 மீண்டும் ஒரு பார்வை முழுமையான படங்கள் , வீடியோ இணைப்பு ! ! !

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம்          07-09-2014 (வீடியோ இணைப்பு)