Wednesday, October 29, 2014

நான் எனும் மமதையை அழித்து மகத்துவமான வாழ்வியல் தத்துவங்களை போதிப்பதே சூரசம்ஹாரம்!!!


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தொடர்ந்து சண்டை-சச்சரவு ஏற்படுவதையும் இதில் அசுரர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதையும் எண்ணி கவலை அடைந்தார் சுக்கிராசாரியார்.

தன் குலத்தில் பிறந்த அசுரர்களை மேலும் அசுர பலம் கொண்டவர்களாக மாற்ற முடிவு செய்தார். இதற்கு வழி தேடிய போது காசியப்ப முனிவரை பற்றி யோசித்ததார்.



காசியப்பர் முனிவர் அசுரர்களுக்கு தந்தையை போன்றவர். இந்த முனிவர் அசுரகுலத்தில் பிறந்தாலும் குணத்தில் சாந்த சொரூபி. மிக நல்லவர். சக்தி வாய்ந்தவர். காசியப்ப முனிவர் மூலமாக ஒரு குழந்தையை பிறக்கச் செய்தால், காசியப்ப முனிவரின் ஆசியுடன் பெரும் வித்தைகளை அறிந்து அசுரகுலத்தையும் முனிவரின் மகன் காப்பான் என்று முடிவு செய்து, தன் சக்தியால் மாயை என்ற பெண் மோகினியை உருவாக்கி, அசுரகுலம் காக்க நீ காசியப்பரை மணந்து ஒரு மகனை பெறுவாயாகஎன்று ஆசி கூறி அனுப்பினார்.

மாயையின் பேச்சும் அழகும் துணிவும் முனிவரை கவர்ந்தது. மாயையை திருமணம் செய்துக் கொண்டார் காசியப்ப முனிவர். சூரபத்மன் பிறந்தான் காசியப்பருக்கும்-மாயைக்கும் மூத்த மகனாக பிறந்தவனுக்கு "சூரபத்மன்"என்று பெயர் சூட்டினர்.


அவனை தொடர்ந்து சிங்க முகம் கொண்ட சிம்மபத்ரன், யானைமுகம் கொண்ட தாரகன், ஆட்டின் முகம் கொண்ட கஜாமுகி, என்ற பெண்ணும் பிறந்தார்கள். மூவரும் அசுர குணத்துடன் இருந்தார்கள். காசியப்பருக்கும்-மாயைக்கும், இந்த மூவர் மட்டுமல்லாமல் மேலும் நிறைய குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் அனைவரும் அண்ணன் சூரபத்மனின் நாட்டில் போர் வீரர்களாக திகழ்ந்தார்கள்.

மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர். இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும்; சிவசக்தி அன்றி வேறொரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றான்..


இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர்.

அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர்.

சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக் கூடிய அதோ முகம் (மனம்) என்ற ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. 


அந்த குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் சீராட்டி-தாலாட்டி வளர்த்தார்கள். அன்னை பார்வதிதேவி அந்த ஆறு குழந்தைகளையும் தன் சக்தியால் ஒன்றுபடுத்தினார். ஓரே மாதிரி ஆறு குழந்தைகளாக முதலில் தோன்றியதால், "ஆறுமுகன்" என்றும், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால் "கார்த்திகேயன்" என்றும் பெயர் சூட்டினார். இவரை போல அழகானவர் வேறு எவரும் இல்லை என்பதால், "முருகன்" என்று அழைக்கப்படுகிறார்.


சூரபத்மனை அழிக்க புறப்பட்ட முருகனுக்கு "வீரவேல்" தந்து, முருகனின் போர் படையின் சேனாதிபதியாக வீரபாகுவை நியமித்து ஆசி கூறினாள் அன்னை பார்வதி. முருகபெருமானின் தலைமையில் நடந்த போரில் அசுர படையினர் பெரும் அளவில் அழிந்தார்கள். இறுதிகட்டம் நெருங்கியது. முருகபெருமானிடம் போர் செய்ய முடியாமல் மாயையின் மகனான சூரபத்மன், மாமரமாக மாறினான்.


அந்த மரத்தை கந்தன் தன் வேலால் இரண்டாக பிளந்தார். சூரபத்மன் வீழ்ந்தான். மரமாக மாறி இரண்டாக பிளந்த சூரபத்மனின் ஒருபாகத்தை சேவலாகவும் மறுபாகத்தை மயிலாகவும் மாற்றினார். தன் வெற்றிக்கு அடையாளமாக சேவலை தன் கொடியில் சின்னமாகவும், மயிலை தன் வாகனமாகவும் மாற்றினார் முருகப் பெருமான்.


முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.


கந்த சஷ்டி இறுதி நாளான நேற்று முருகன் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்று சூரன் போர் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூரான் சூரனை வதம் செய்த காட்சியைக் கண்டுகளித்தனர்.
















ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''