Friday, January 10, 2014

பெயர்கள் பல பெற்ற பிள்ளையார்






உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்கும் விநாயகப் பெருமானுக்குப் பொதுவாக ஆனை முகத்தோன், கரிமுகத்தோன், வேழமுகன், ஐங்கரன், தும்பிக்கையான், கணேசன், விக்னேஸ்வரன் என்று பல பெயர்கள் உண்டு. இருந்தாலும், அவரது செயல்களுக்கும் இடத்துக்கும் ஏற்றாற் போல, பல ஊர்களில் உள்ள சிறிய பெரிய திருக்கோவில்களில் விதம் விதமான பெயர்களுடன் விளங்கி வருகிறார். அவற்றை இங்கு காண்போம்.





1. ஆதி விநாயகர்

விநாயகர் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது யானைத்தலை. ஆனால் யானை முகம் வருவதற்கு முன் இருந்த மனித முகத்துடன் காட்சிதருவது நன்னிலத்துக்கு அருகில் உள்ள திலதர்ப்பணப்பதி எனும் தேவாரப் பாடல் பெற்ற
தலத்திலாகும்.      



2. கற்பக விநாயகர்
சிவகங்கைச் சீமை, பிள்ளையார் பட்டி எனும் தலத்தில் மலையடியில், குடவறையில் வடக்கு நோக்கி அருளும் கற்பக விநாயகர் கற்பக மரத்தைப் போல, கேட்டதை வழங்குபவர். இரு கரங்களுடன் காட்சி தருவது வித்தியாசமான தோற்றமாகும்.


3. வெள்ளை விநாயகர்
திருவலஞ்சுழி எனும் தேவாரப் பாடல் பெற்ற சிவாலயத்திற்குள் நுழைந்தவுடன் வெள்ளை நிறத்தில் இந்திரனால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் ‘வேத விநாயகர்’ என்று அருளுகிறார்.


4. நேத்திர விநாயகர்
சுவாமிமலை சுவாமிநாதப்பெருமான் சன்னதி நுழையும் முன் தென்திசை நோக்கி அமர்ந்த நிலையில், வேண்டுபவர்களின் கண் நோய் தீர்ப்பதால் இப்பெயர் வந்தது.  


5. கள்ளவாரணப் பிள்ளையார்
திருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேசுவரர் ஆலயத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தரும் பிள்ளையார். அமிர்த கலசத்தை மறைத்து வைத்ததனால் இப்பெயர் வந்தது.


6. கைகாட்டி விநாயகர்
திருநாட்டியத்தான்குடி எனும் தேவாரத் தலத்தில் இறைவனை தரிசிக்க சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே நுழைய முற்பட்ட போது அங்கே சிவபிரான் இல்லாமையை உணர்ந்து கொண்டு விநாயகரை நோக்க... சிவன், சுந்தரரோடு திருவிளையாடல் செய்வதற்காக நாற்று நடும் உழவனாக வயற்பக்கம் நிற்பதனைக் காட்டியதால் ‘கைகாட்டி விநாயகர்’ ஆனார்.


7. துணையிருந்த விநாயகர்
திரு ஆரூருக்கு அருகில் உள்ள திருப்பனையூர் எனும் சிவத்தலத்தில், பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார்.


8. பிரளயங்காத்த விநாயகர்

மூவரின் பாடல் பெற்ற திருப்புறம்பயம் சிவபிரானுக்கு வலப்புறம் உள்ள விநாயகர், பிரளயமாக வெள்ளம் வந்த போது காப்பாற்றினார். மேலும் சதுர்த்தி அன்று இரவு நடைபெறும் தேனாபிஷேகத்தை முழுவதும் உள்ளிழுத்துக் கொள்வது பெருஞ்
சிறப்பு.



9. படிக்காசு விநாயகர்
திருவீழிமிழலை எனும் பதிக்கு அப்பரும் சம்பந்தரும் வந்த போது பஞ்சம் நிலவியது. இறைவனைப் பாடிப் பரவியதால் இருவருக்கும் தினம் ஒரு பொற்காசு பீடத்தில் கிடைக்கும் படி செய்தார். எனவே அங்கே உள்ள தல விநாயகர் ‘படிக்காசு விநாயகர்’ எனப்படுகிறார்.


10. வாதாபி  கணபதி
பல்லவ மன்னனின் தளபதியாக இருந்த பரஞ்சோதிவாதாபியில் அங்குள்ள கணபதியை வழிபட்டு, போர் செய்து வெற்றி பெற்றார். வெற்றிப் பரிசாக அங்கிருந்து கணபதியைக் கொண்டு வந்து தன் ஊரான திருச்செங்காட்டாங்குடி எனும் கணபதிசுரத்தில் வைத்து வழிபட்டார். பின் பரஞ்சோதி சிறுத்தொண்டரானார்.


11. மாற்றுரைத்த விநாயகர்
திரு ஆரூர் தியாகராசசுவாமி மேலைக் கோபுரத்தின் எதிர் குளக்கரையில் உள்ள விநாயகர். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமுள்ளதா என்று உரைத்துப் பார்த்து சோதித்து அறிந்தார்.


12. பொய்யாப்பிள்ளையார்
‘அருணகிரிநாதரை ‘குமார வயலூருக்கு வா’ என்று முருகன் அசரீரியாகச் சொல்ல அவர் வயலூருக்கு வந்தார். ஆனால் முருகப்பெருமான் அங்கே காட்சிதரவில்லை. உடனே அருணகிரி நாதர் ‘அசரீரி பொய்யோ’ என்று உரக்கக் கூறினார். ‘அசரீரி பொய்யில்லை’ என்று சொன்ன பிள்ளையார் சுப்பிரமணியரைச் சுட்டிக்காட்டினார்.


13. பொள்ளாப்பிள்ளையார்
 உளிபடாமல் உருவான பிள்ளையார் திருநாரையூரில் நம்பிக்கு கருணை செய்து அவர் தந்த பிரசாதத்தை உண்டவர்.


14. செவி சாய்த்த விநாயகர்
திருவேதிக்குடி எனும் தேவாரத் தலத்தில் சிவனை நான்கு வேதங்களும் வழிபடும் போது தலை சாய்த்து வேதங்களைச் செவி மடுத்ததால் ‘செவி சாய்த்த விநாயகர்’ வேத விநாயகர் எனப்படுகிறார்.


15. கற்கடக விநாயகர்
குடந்தைக்கு அருகே உள்ள திருந்து தேவன்குடி எனும் தலத்தில் நண்டு வழிபட்டதால் (கற்கடகம்) இறைவன் கற்கடகேசுவரர் என்றும் பிள்ளையார் ‘கற்கடகப்பிள்ளையார்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.


16. ஆண்ட விநாயகர்  

திருஇடைமருதூரில் பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்கப் பெருமானை வழிபட்டு வருவதால் சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் உள்ள விநாயகர் ‘ஆண்ட விநாயகர்’ ஆகிறார். திருநறையூர்
சித்தீசுரத்திலும் இதே பெயர் பெறுகிறார்.



17. முக்குறுணிப்பிள்ளையார்
மதுரை மீனாட்சி சன்னிதியிலிருந்து சொக்கநாதர் சன்னிதி செல்லும் வழியில் தெற்கு நோக்கிப் பெரிய உருவத்துடன் காட்சி தருகிறார். சதுர்த்தி அன்று மூன்று குறுணி அளவில் அரிசி எடுத்து மிகப்பிரமாண்டமான கொழுக்கட்டை செய்து தூக்கிக்கொண்டு வந்து வைத்து வழிபடுவதால் முக்குறுணிப் பிள்ளையார் ஆகிறார்.


18. கோடி விநாயகர்
திருக்கொட்டையூர் திருத்தலத்தில், ஏரண்ட முனிவர் – பத்திரியோகி முனிவருக்கு காட்சி கொடுத்த இறைவன் கோடீசுவரர் என்றும், விநாயகர் கோடி விநாயகர் என்றும் அம்பிகை, கோடி அம்மை என்றும் முருகன், கோடி முருகன் எனவும் அழைக்கப்படுகின்றனர்.


19. கலங்காமல் காத்த கணபதி
திரு இரும்பூளை என்னும் ஆலங்குடி குரு தலத்தில் தெற்குக் கோபுரவாசலில் உள்ள இவர் கஜமுகாசுரனை வதம் செய்து  தேவர்களைக் கலக்கத்திலிருந்து காத்தார். எனவே கலங்காமல் காத்த கணபதி ஆனார்.


20. விகடசக்கர விநாயகர்
காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயத்தின் தல விநாயகர், திருமாலின் தளபதியான விர்வக்சேனர். இவர் முன் விகடம் செய்து கூத்தாடி சக்கரத்தைப் பெற்றுக்கொண்டதனால் விகடசக்கரச் செம்முகன் என்று போற்றப்படுகிறார்.


21. உச்சி பிள்ளையார்
திருச்சி மலைக்கோட்டை உச்சியில் இருப்பதனால் உச்சிப் பிள்ளையாராகவும் அடிவாரத்தில் மாணிக்க பிள்ளையாராகவும் விளங்குகிறார்.


22. தூண்டி விநாயகர்
காசியில் உள்ள உருவ அமைப்பில் சற்று மாறுபட்டும், முடிவடையாத சிலை போலவும் இருக்கும் விநாயகரை வழிபட்டால் தான் காசி சென்ற பலன் முழுவதும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


23. கோள்வினை தீர்த்த விநாயகர்
நவக்கிரகங்களுக்கு என்று தனியாக விளங்கும் தலமான சூரியனார் கோவிலில் தென்மேற்கில் இருக்கும் இவர் நவக்கிரகங்
களின் தீவினையைத் தீர்த்ததோடு நவக்கிரகங்களால் பக்தர்களுக்கு வரும் வினையினையும் தீர்ப்பதால், இவரே முதலில் வணங்கப்படுகிறார்.


24. அடிவாரப் பிள்ளையார்
பழனி மலைக்கு ஏறிச்செல்லும் முன் அடிவாரத்தில் இருக்கும் இவருக்குத் தேங்காய் உடைத்துக் கும்பிட்டு விட்டுத் தான் மலை ஏற வேண்டும்.


25. பாதாள விநாயகர்
பஞ்சபூதத் தலங்களில் வாயுத்தலமான திருக்காளகத்தியில் பூமிக்கு அடியில் உள்ள குகை போன்ற பாதாளத்தில் குனிந்து சென்று வழிபடும் நிலையில் அருள் தருகிறார்.


26. வெயிலுகந்த விநாயகர்
ராமநாதபுரம் உப்பூரில் உள்ள இவ்விநாயகர் மீது தட்சிணாயன காலங்களில் தெற்குப் பக்கமாகவும், உத்திராயண காலங்களில் வடக்குப் பக்கமாகவும் சூரியக் கதிர்கள் விழுந்து தரிசிக்கின்றன.


27. மிளகு பிள்ளையார்
நெல்லை சேரன்மகாதேவியில் மழை பொழிய வேண்டி, இப்பிள்ளையாரின் மீது மிளகினை அரைத்துத் தடவினால் மழை பொழியும் என்பது ஐதீகம்.


28. யோக விநாயகர்
கோவை குனியமுத்தூரில் உள்ள இவ்விநாயகர் வலது முன் கையில் உத்திராட்சமும், பின் கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக்கயிறும் ஏந்தி யோக நிலையில் அருள்கிறார்.


29. தலையாட்டி விநாயகர்
 சேலம் ஆத்தூரில் தலையை ஆட்டும்படி இடது பக்கம் தலையை சாய்த்த நிலையில் இருக்கிறார்.


30. மிலிட்டரி விநாயகர்
திருவனந்தபுரம் கிழக்குகோட்டையில் இருக்கும் விநாயகர். திருவாங்கூர் ராஜா தலை நகரை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரம் மாற்றியபோது படை வீரர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்.


31. மணக்குள விநாயகர்
புதுச்சேரியில் முன்பு ஒருகுளம் போன்ற நீர்நிலை இருந்த இடத்தின் மீது பீடத்தில் மூலவர் விநாயகர் இருப்பதனால் மணக்குள விநாயகராக காட்சி தருகிறார்.


32. ஏழைப் பிள்ளையார்
திருச்சி மாவட்டம் வடக்கு ஆண்டாள் வீதியில் ஏழிசைகளின் நாயகனாக விளங்கும் ஏழிசைப் பிள்ளையார் பிற்காலத்தில் பெயர் மாறி ஏழைப் பிள்ளையாராகி விட்டார்.


33. யானை குட்டே விநாயகர்
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே கும்பாசியில், யானை உருவத்தில் உள்ள 12 அடி உயரமுள்ள சுயம்புவான விநாயகர்.

இவர்களைத்தவிர திருநள்ளாற்றில் சொர்ண விநாயகராகவும், திருஇன்னம்பரில் நிருத்த விநாயகராகவும், சீர்காழியில் ஆபத்துக்காத்த விநாயகராகவும், திருமறைக்காட்டில் சிந்தாமணி விநாயகராகவும், திருவாவடுதுறையில் துணை வந்த விநாயகராகவும், திருச்செந்தூரில் தூண்டுகைப் பிள்ளையாராகவும், நாகையில் மாவடிப்பிள்ளையாராகவும், திருஉசாத்தானத்தில் சூதவனப் பிள்ளையாராகவும், நெல்லையில் அன்னதான விநாயகராகவும் பெயர் பெறுகிறார்.

மகாகணபதி, ராஜ கணபதி, நர்த்தனகணபதி, ஹான விநாயகர், செல்வ விநாயகர், சித்தி விநாயகர், நவ சக்தி விநாயகர், சித்திபுத்தி விநாயகர், வல்லப கணபதி, மங்களகணபதி, பிரசன்னகணபதி, வீரகணபதி என்று பொதுவாகப் பெயர்கள் பெறும் பிள்ளையார் தான் இருக்கும் இடங்களுக்கு ஏற்ப பேட்டை கணபதி, சந்தைப் பிள்ளையார், மூலை விநாயகர் என்றும் இரட்டை விநாயகர், மும்மூர்த்தி விநாயகர், பஞ்ச விநாயகர் என்று எண்ணிக்கையின் அடிப்படையிலும் அழைக்கப்படுகிறார்.

சில இனத்து மக்கள் பிள்ளையாருக்குக் கோவில் கட்டி அப்பெயர்களாலேயே, கம்பட்ட கணபதி, கம்மாள கணபதி, செங்குந்த விநாயகர் என்றெல்லாம் அன்புடன் வணங்குகின்றனர்.

இன்றைக்குக் கணினியுகத்தில் தங்கள் விருபத்துக்கேற்றபடி பிள்ளையாரைப் படமாக வரைந்து கம்யூட்டர் கணபதியாக மாற்றியதோடு சதுர்த்தி அன்று தங்கள் மனம் போன போக்கில் பிள்ளையாரின் உருவங்களை வடிவமைத்து வழிபட்டுக் கடைசியில் கரைத்து விடுகின்றனர்.


எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் பிள்ளையார் எங்கே இருந்தாலும் எப்பெயரிட்டு அழைத்தாலும் அன்போடு அருளாட்சி செய்வார். ஏனெனில் கருணைக்கடல் அல்லவா?.