Friday, November 1, 2013

இறை அற்புதங்களை உணர்த்தும் தீபாவளி

தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து மகிழ்வுறும் நாள் தீபாவளி என்கின்றோம். 
தீப வரிசை எனும் பொருள்படும் தீபாவளி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமை பகரும் விழாவுமாகின்றது. கண்ணன் கட்டழகன் இவன் லீலைகள் பல்லாயிரம் அவனைச் சுற்றி கோபியர்கள் என்றெல்லாம் கண்ணன் பற்றிச் சொல்லப்படும் குறும்புகள் கேட்டால் உள்ளம் புளகாங்கிதமடையும்.



கண்ணன் எனும் கிருஷ்ணன், இறைவன் அவனைச் சுற்றிய கோபியர்கள். ஆன்மாக்கள் இறைவனிடம் சரணாகதியுடன் வசப்படுவதையே நாம் அவன் லீலைகள் மூலம் காண்கின்றோம்.

எங்கும் பரந்து மரப் பிரம்மம் ஜோதிஸ் சொரூபமானது. அவனே ஒளி, வளி இருள், ஒலி எல்லாமுமாவான்.

திவ்ய தேஜசுடன் அறிவும் அறிவுக்கும் மேலானவன். இத்தனை அழகும் சூர்ய பிரகாசனுமான கடவுளை ஒளிரூபனாக வழிபாடு செய்த எமது முன்னோர்கள் தீபாவளிப் பண்டிகை மூலம் உலகம் எங்கும் உள்ள இந்துக்களை ஒன்றிணைத்தனர். ஏன் எனில் வைதீக சமயம் எனும் இந்து மதம் தீபாவளியை ஒன்றிணைந்தே கொண்டாடி மகிழ்கின்றனர்.

தீபாவளி பற்றிப் பேசும் போது ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசூரனை தனது சக்தியின் உதவியுடன் வதம் செய்ததாக கூறுகின்றோம். தீயசக்தியை அழித்து, நல்லன நல்குவதே இறை கருணையுமாகும்.

ஆயினும் ஸ்ரீ இராமர் இராவணனைப் போரில் வென்று அயோத்தி வந்தடைந்த போது மக்கள் அணி திரண்டு கொண்டாடி மகிழ்ந்த நாள் தீபாவளித் தினம் என்றும் கூறப்படுவதுண்டு.

அத்துடன் மகாவலிச் சக்கரவர்த்தி முடிசூடிய தினம் இதுவெனவும், விக்கிரமாதித்தன் மன்னர் முடிசூடிய நாள் இதுவெனவும் கூறப்படுவதுண்டு.

எனினும் தீபாவளிக்கு ஒளி வழிபாடுதான் முதன்மைப் படுத்தப்பட்டது. ‘மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே என்று திருவாசகத்தில் சிவபுராணத்தில் இறைவனை நோக்கிப்பாடும் மாணிக்கவாசர்,

‘மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே’ என்றும் பாடுகின்றார். எல்லாம் நிறைந்த பரம்பொருள் ஒளிரூபன் எனினும் இவன் ஓர் வடிவு இல்லாதவன், ஏகன் மாசு அற்றவன், மெய்ஞானமானவன், ஒளிரும் உண்மைச் சுடர். இவருக்கு மேலானது எதுவுமேயில்லை. மந்த பரதரம் நான் யத்கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய

மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸ¤த்ரே மணிகணே இது
பகவத்கீதை ஞானவிக்ஞான யோகம்

தனஞ்ஜயா, எனக்கு மேலானது வேறு எதுவுமே இல்லை. நூலிலே மணிகள் போன்று இவை யாவும் என் மீது கோர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த உபதேசம் மூலம் கடவுளின் பெருமை புலனாகின்றது அல்லவா?

அருக்கனில் சோதி அமைந்தோன் திருத்தகு

மதியில் தன்மை வைத்தோன் திண்திறல்

தீயில் வெம்மைசெய்தோன் பொய்தீர்

வானில் கலப்பு வைத்தோன் மேதகு

காலில் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ்

– திருவாசகம் – திருவண்டப் பகுதி –

இறைவா நீ ஆதவனிடத்தே ஒளியை உண்டு பண்ணியுள்ளாய், அழகிய சந்திரனிடம் குளிச்சியை ஆக்கித்தந்தாய் மிகவும் வலிமையுள்ள, வெற்றியையுடைய தீயினுள் வெப்பத்தை உருவாக்கினாய் என்றும் நிலைத்துள்ள ஆகாயத்தில் வியாபகத் தன்மையினை அமைத்துள்ளாய். மேன்மையுள்ள காற்றுக்கு வேகத்தைக் கொடுத்துள்ளாய் இந்த திருவண்டர் பகுதியூடாக நிலம், நீர், தீ, காற்று இவைகளை உருவாக்கிக் கட்டுப்படுத்தி ஆகாயத்தை மாத்திரம் நிலையாக வைத்திருக்கின்றாய் ஏனைய பூதங்கள் நான்குமே இறைவன் சிருஷ்டியின் பிரகாரம் அடிக்கடி நிலையில் மாற்றியபடி இறைவன் வைத்துள்ளான். இவை அவன் சித்தம்.

பண்டிகைகளைக் கொண்டாடும் நாம் அவைகளின் தாத்பரியங்களை ஏன் நாம் அதனைக் கொண்டாட வேண்டும். அவற்றின் உட்பொருள்களையும் தெரிந்தேயாக வேண்டும்.
இந்து சமய தத்துவங்கள் எல்லாமே மானுட வாழ்வில், தர்மம் தளைத்து ஓங்கவே முன்னோர்கள் ஆக்கித் தந்தார்கள். ஸ்ரீ கிருஷ்ண பகவான், நரகாசூரனைத் தமது பத்தியுடன் இணைந்து சம்ஹாரம் செய்தார். இறைவனும், இறைவியும், தீவினையை ஒழித்த நாள் என்றும் நாம் கொண்டாடும் அதேவேளை நாமும் என்றும் நல் அறவழியில்தான் வாழவேண்டும் என்பதே கடவுளின் விருப்பமுமாகும் என நாம் உணர வேண்டும் அல்லவா?

வெறும் கற்பனையால் மட்டும் நாம் வாழ முடியாது. கர்ம பலன் இதுவென மனதை அலைக்கழித்தலாகாது. மனிதர் சதா ஆசையின் வேகத்தால் மனம் சலனமடைகின்றது. இதனால் ஏற்படும் அனந்த கோடானுகோடி எண்ணங்கள் உதிப்பதே சங்கல்பம் எனப்படும். இதனைத் துறப்பதனாலேயே மேலான யோகம் உறுதியாகின்றது. எனவே சங்கல்பத்தைத் துறக்காதவன் யோகியாவதுமில்லை.

நாம் கூடியவரை தேவையற்ற எண்ணங்களைத் தவிர்த்தேயாக வேண்டும். காலப் போக்கில் நாம் முழுமையான ஆத்ம தரிசனத்தைக் காண முடியும். அஃதாவது தன்னைத் தான் இறைவனூடாக உணர்தலுமாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் கீதையில் தியான யோகத்தில் இவ்வாறு பார்த்தனுக்கு உபதேசிக்கின்றார்.

யம் ஸந்யா ஸமிதி ப்ராஹிர் யோகம் தன் வித்திபாண்டவ
ந ஹ்யஸந்யஸ்த ஸங் கல்போ யோதீ பவதி கkசன

- பகவத் கீதை தியான யோகம்

எதை ஸந்யாசம் என்கிறார்களோ அதையே யோகம் என அறிக. ஏன் எனில் சங்கல்பத்தைத் துறக்காதவன் யோகியாவதில்லை.

கண்ணபிரான் திவ்ய கருணையினை நினைந்து உருகி இன்று அவன் புகழ்பாடி தீபாவளி நன்நாளினைக் கொண்டாடும் போது, அவன் சொன்ன கீதையின் பால் எம் சிந்தையினைச் செலுத்துவோமாக.

எங்கும் புவனியில் ஒளி வெள்ளம் பெருகட்டும். இங்கு உண்மை எனும் திருஉருவே வியாபகமாகி எம் பிறவிப் பிணியை அகற்றி அவன் திருவடியில் சரண் அடைதலே பெரும் பேறு. உலகில் வாழும் நாம் உலகத்தவர்களுடன் இணைந்து சகலரையும் அரவணைத்து வாழுவதே எமக்கான பெரும் களிப்பு நிலையுமாகும்.