Monday, December 9, 2013

திருவெண்காட்டில் திருவெம்பாவை ஆரம்பம் ! ! ! (09.12.2013)

                                       திருவெம்பாவை விரதம்


ரம்பொருளாக இப்பூவுலகை காத்தருள்கின்ற சிவனுக்குரிய விரதங்களில் திருவெம்பாவையும் திருவாதிரையும் மிக்க சிறப்புக்கள் மிகுந்தது என்று கூறப்படுகின்ற அதேநேரம் இதை பாவை நோன்பு என்றும் அழைக்கின்றனர்.

இந்த திருவெம்பாவை பூஜையானது இன்று 9 ஆம் திகதி திங்கட்கிழமை அதாவது விஜய வருடத்தின் கார்த்திகை மாதம் 24 ஆம் திகதி ஸப்தமி திதியும் சதைய நட்சத்திரமும் கொண்ட இன்று உதயத்தில் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து ஒன்பது தினங்கள் இடம்பெறும் திருவெம்பாவை பூஜையில் பத்தாம் நாள் திருவாதிரை இதை ஆருத்திரா தரிசனம் என்று சிறப்பித்துக் கூறல் சமய மரபு ஆகும். எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை உதயத்தில் சகல சிவாலயங்களிலும் ஆருத்திரா தரிசனம் வெகு சிறப்பாக செய்யப்படும்.

திருவெம்பாவை என்னும் போது கன்னியர் நோன்பு பாவை நோன்பு என பலவாறு அழைக்கப்படுகின்றது. கன்னிப் பெண்கள் தனக்கு மனமொத்த கணவன் கிடைக்க வேண்டியும், ஆடவர்கள் தமக்கு இசைவான மனைவியை தேடிக் கொள்வதற்குமான ஒரு கார்கோள் பண்டிகையாக எம்முன்னோர் இதை ஏற்படுத்தியுள்ளனர் என்றால் மிகையாகாது.

அதிகாலையில் ஆரம்பமாகும் இப்பூசையில் முதலில் ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை . . ' என்று ஆரம்பமாகும் இருபது (20) பாடல்களும், மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியில் உள்ள (10) பத்து பாடல்களையும் மனமுருக பாடியும் கேட்டும் இன்புற வேண்டுமென சமய நூல்களில் காணக்கிடைக்கின்றது.

திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆடவர்கள் விடியற்காலைப் பொழுதில் கடுங்குளிரில் வீதிதோறும் பாடி மக்களை துயில் எழுப்பும் காட்சியும் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதை காண முடியும். இந்த திருப்பள்ளியெழுச்சி பாடலின் மூன்றாவது பாடல் வரிகளை நோக்குகையில் 'கூவின பூங்குயில் கூவினகோழி குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்’ என்று ஆரம்பமாகும் பாடலில் அதிகாலை பொழுதின் மனோரதத்தை எம் கண்முன் மாணிக்க வாசகர் சுவாமிகள் கொண்டு வருகின்றார்.

எனவே, மார்கழி மாதம் தேவர்களுக்கு விடயற்காலம் அல்லது வைகறைப் பொழுதாக கருதப்படுவதால் நாமும் திருவெம்பாவை, திருவாதிரை பூஜையில் பக்திசிரத்தையுடன் ஆலயம் சென்று இன்புற வேண்டும்.