Monday, January 13, 2014

திருவெண்காட்டில் தைப்பொங்கல் திருநாள் . . . 14.01.2014

இந்துக்களின் வாழ்வில் இறையின் அடையாளமாக ஞாயிற்றைப் போற்றுகின்றனர். எனவே இறை வழிபாடும், இயற்கை வழிபாடும் ஒன்றிணைந்து தைப்பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடப்பெற்று வருகிறது.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் (சூரியன், மழை) மற்ற உயிர்களுக்கும் (கால் நடை) நன்றி சொல்லும் ஒரு நன்றியறிதலான விழாவாக கொண்டாடப்படும் இத் தைப்பொங்கல் விழா சமயங்கள் கடந்து  பொதுவாக அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது. 



உத்தராயண காலத்தின் ஆரம்பம் தைப்பொங்கல்


தமிழர் தம் வாழ்வில் கலாசார பண்பாடுகள் மேலோங்கி நிற்பதற்கு அவர்களின் தனித்துவமான பண்பாட்டுக் கோலங்களே மூல காரணமாகும். அன்றுதொட்டு இன்றுவரை தமிழர்கள் எதையும் தங்கள் கலாசார மேம்பாடு மேன்மையுறும் வகையில் வாழ்ந்து காட்டி வந்துள்ளனர். அறுபத்து நான்கு கலைகளிலும் ஏக போக உரிமை கொண்டாடியவர்கள் சோதிடம், வைத்தியம்போன்ற துறைகளில் இவர்களை மிஞ்சியவர்கள் யாரும் இலர் எனலாம்.

இத்தகைய பண்பாடுகளைக் கொண்ட தமிழர்களின் திருநாட்களில் தைப்பொங்கல் முதலிடத்தை பெறுகின்றது. பன்னிரு இராசிகளான மேடம், தொடங்கி மீனம் வரையுள்ள இராசிகளில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இராசிகளிலும் சஞ்சரித்து வருகின்றான். மேடம் இராசி சூரியன் பிரவேசிக்கும் போது புது வருடம் பிறக்கின்றது. இராசிகளை பனிரெண்டாக வகுத்தது போல் தமிழர்கள் காலத்தையும் இரண்டாக வகுத்துள்ளனர். உத்தராயன காலம், தெட்சணாயன காலம் என வருடத்தை வகுத்து அதன்படி கருமங்களை செய்து முடிக்கின்றனர்.


உத்தராயண காலம் தை மாதம் தொடக்கம் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்களாகும். தெட்சணாயன காலம் ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை அமைந்துள்ளது. இந்த உத்தராயண காலம் ஆனது. சூரியன் தனு இராசியில் இருந்து மகரம் இராசியில் பிரவேசிக்கும் நாளாகும். அந்த மகரம் இராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது உத்தராயண காலம் பிறக்கின்றது. அந்தக் காலத்தின் ஆரம்பமே தைப் பொங்கல் தினமாக கொள்ளப்படுகின்றது.

தைப்பொங்கல் நாளானது சூரிய பகவானின் கருணை வேண்டி அவருக்கு பொங்கலிட்டு படைத்து வழிபடும் நாளாகவும், தேவர்களுக்கு இராப் பொழுது கழிந்து பகல் பொழுதின் ஆரம்பமான உத்தராயண காலத்தை வரவேற்று அதற்கு பொங்கலிடும் நாளாகவும், உழவர்களின் திருநாளாகவும் தைப்பொங்கல் திருநாள் காட்சியளிக்கின்றது.

கலப்பை பிடிக்கும் கையை நம்பி உலகம் இருக்குது என்று கவிஞர் கூறியது போல் உழவு தொழில் இல்லையேல் நாம் எல்லோரும் பட்டினியால் வாட வேண்டிய நிலை உருவாகும். அந்த நிலையை மாற்றி காலமெல்லாம் உழைத்து மற்றவருக்கு சோறிடும் பெரும் பேற்றினைக் கொண்ட உழவர்கள், தம் தொழிலுக்கு உதவிய, கதிரவனுக்கு நன்றி கூறிடும் திருநாளாக தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்கின்றான்.



கதிரறுத்து புதிரெடுத்து புதுப்பானை கொண்டு புது நெல்லில் குற்றிய அரிசையை பொங்கி படைத்து கதிரவனுக்கு காணிக்கையாக்கி வழிபாடு செய்யும் இனிய திருநாள் தைப்பொங்கல் திருநாள். தமிழர்களுக்கு தைப்பெங்கல் தினத்திலிருந்தே தமிழ் மாதம் தை மாதம் தொடங்குகின்றது. இதனால் தான் தமிழகத்தில் புது வருட தினமாக தைப்பொங்கல்தினம் கொள்ளப்படுகின்றது.

தைப்பொங்கல் என்றால் தமிழர்கள் செறிந்து வாழும் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படும் திருநாள். தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, போன்ற நாடுகளில் தைப் பொங்கல் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நமது உறவுகளும் தைப்பொங்கல் நாளை சிறப்புடன் கொண்டாடி தமது கலாசார பண்பாடுகளை பேணி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.


தைப்பொங்கல் தினம் மகர இராசியில் சூரியன் பிரவேசித்து உத்தராயண காலத்தை தொடங்கி வைக்கின்றான். அன்றிலிருந்து ஆனி மாதம் வரை சூரியனின் உச்சப் பயன்பாடுகளை நாம் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டாகின்றது. உழவர்களின் வயல் நிலங்களில் விளைந்திட்ட செந்நெல் யாவும் அறுவடையாகும் காலம் தை மாதம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை சூரியனின் உச்சப் பயன்பாடு குறைவடைந்துள்ள காலம் இக்காலத்தில் உழவன், உழுது பண்பட்ட நிலத்தில் விதைத்த நெல் விதைகள் பயிராகி, வருண பகவானின் பார்வையினால் நல்ல மழை வீழ்ச்சியைக் கண்டு செழித்து வளர்கின்றன. தை மாதத்தில் அவைகள் யாவும் அறுவடை செய்யும் நிலைக்கு வரும் போது சூரியனும் தாராள மனதுடன் உழவர்க்கு உதவிட வருகை தரும் நாளாக தைப் பொங்கல் மிளிர்கின்றது.

தைப்பொங்கல் தினத்திற்கு முந்திய நாள் போகி பண்டிகை நாள் எனக் கொள்வர். இதில் பழையவைகளை புறம்தள்ளி, எரித்து விடும் பழக்கம் தமிழ்நாட்டில் உண்டு. தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் பட்டிப் பொங்கல் என்று உழவர்கள் கொண்டாடுகின்றனர். தமது உழவு தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி கூறிடும், அவைகளுக்கு பொங்கலிடும் நாளாக பட்டிப் பொங்கல் விளங்குகின்றது.


அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்கள் கன்னிப் பெண்களின் பொங்கல் என்று கொள்ளப்படுகின்றது. தமிழ் நாட்டில் திருமணம் ஆகாத கன்னி பெண்கள் ஒன்றுகூடி ஒரு ஆற்றங்கரையை அடைந்து பெண்கள் மாத்திரமே தனித்திருந்து பொங்கி படைத்து மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் அப் பொங்கலை கொடுத்து தாங்களும் உண்டு மகிழ்வர். ஐந்தாம் நாள் ஜெல்லி கட்டு நிகழ்வு இடம்பெறும். இதன் மூலம் தாங்கள் விரும்பிய கணவரை அடைய முடியும் என்ற நம்பிக்கை அப்பெண்களிடம் இப்போதும் இருந்து வருகின்றது.

போகிக் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் கன்னி பெண் பொங்கல், ஜல்லிக்கட்டு என்ற பல வித அம்சங்களை உள்ளடக்கிய திருநாள் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை உணர்த்தி நிற்கும் பெருநாளாக தைப்பொங்கல் தினம் விளங்குகின்றது.

இத்திருநாளில் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பொங்கி கொடுக்க வேண்டும். அப்போது தான் அது மனநிறைவான பொங்கலாக அமையும் தற்போது, இருப்பவர்கள், உள்ளவர்களுக்குக், பொங்கலை கொடுத்து உபசரித்து வருகின்றார்கள் இந்நிலையை மாற்றி இல்லாத ஏழை, எழிய மக்களுக்கு நாம் பொங்கும் பொங்கலைக் கொடுத்து வயிற்றுப் பசி போக்கினால் அதுவே மனம் நிறைந்த தைப்பொங்கலின் தார்ப்பரியமும் உத்தராயண காலத்தின் ஆரம்பமும் இதையே உணர்த்தி நிற்கின்றன.