பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.
சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் வீழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும், தேரோட்டமும், சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
திண்டுக்கல் மாவட்டமும், அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருமணக்கோலம்
“பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு
மங்களம் கொடுக்கும் நன்னாள்
மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு
மாங்கலியதாரணம் செய்த பொன்னாள்
காஞ்சி மாவடியில் நிஸ்டையில் ஆழ்ந்த பார்வதிக்கு
இழந்த பழமையை மீழப்பெற்றுத் தந்த நன்னாள்
ஈசனின் ஆக்ஞ்யில் எரிந்த மன்மதனை இரதிக்கு
காட்டியருளிச் செய்த பொன்னாள்
கிருதயுகத்தில் கோன் இரகுவால் மனுக்குல் உய்வதற்கு
அரக்கரனை அழித்த நன்னாள்.
நார் அயன் உள்ளம் திருமகளுக்கு
உருத்தான பொன்னாள்
படைபதிபதி நா வாக்தேவிக்கு
உருத்தான நன்னாள்
இந்திராணி இந்திரதிபதிக்கு
கிடைத்த பொன்னாள்
மயிலையில் ஞான சம்பந்தன் பூம்பாவைக்கு
உயிர் கொடுத்த நன்னாள்.
அன்னாள் எனக்கு பொன்னாள்
என் அம்பிகை புன்னையம்பதி மாரிக்கு தீர்த்த திருநாள்
அன்னாள் என் மகா யாக தீட்சைப் திருப்பெருநாள்.
அன்னாள் மங்கையருக் மாங்கலிய விரதமேற்கும் பொன்னாள்".