Monday, April 14, 2014

திருவெண்காட்டில் சித்திரா பௌர்ணமி !!! (14.04.2014)

சித்திரா பௌர்ணமியின் சிறப்பு

இவ் வருடம் சித்திரை மாதத்தில் இரண்டு பௌர்ணமி திதிகள் (14.04.2014, 14.05.2014 ஆகிய திகதிகளில்)வருகின்ற நிலையில்; இரண்டாவதாக வருகின்ற பௌர்ணமியாகிய தமிழுக்கு 31 ஆம் திகதி 14.05.2014 பௌர்ணமியையே சித்திரா பௌர்ணமியாகவும், சிரார்த்த தினமாகவும் கடைப்பிடிக்குமாறு இந்து சமயப் பேரவை அறிவித்துள்ளது.

சித்திரா பௌர்ணமி என்பது; சித்திரை மாதம் பௌர்ணமி திதியில்; சித்திரை நட்சத்திரமும் கூடி வருவருவதால் சித்திரா பௌர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேட இராசியில் (சித்திரைமாதத்தில்) வரும் பௌர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது. சிறப்புப் பொருந்திய இத் திருநாள் 14.05.2014 அன்று இலங்கையிலும் - 13.05.2014 அன்று வட-அமெரிக்காவிலும் அமைவதாக ஜோதிடம் கணித்துள்ளது.



இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும், சித்திரா பெளர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்பெறுகின்றது.



இத் தினத்தில் ஆலயங்களிலே குறிப்பாக பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உட்பட எல்லா அம்மன் ஆலயங்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை, விஷேச அபிஷேக ஆராதனைகளும், வழிபாடும் சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. சில ஆலயங்களில் பொங்கல் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.


சிவாலயங்களிலும், பெருமாள் (விஷ்ணு) கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறை வழிபாடு, வீதி ஊர்வலங்கள் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன. அம்மனுக்குச் சிறப்புப் பொருத்திய இச்சித்திரா பௌர்ணமி விரத நாளிலேயே எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் அவதரித்த நாளாகவும் இது கருதப்படுவதால் சித்திர புத்திரனார் விரதமும் அமைகின்றது.


அத்துடன் அம்பிகையின் ஆலயங்களில் "சித்திரைக் கஞ்சி" படையல் செய்வதன் மூலம் அம்பிகையின் சீற்றத்தை, கோபத்தை, தணிப்பதனால் அம்பிகையின் சீற்றத்தால் ஏற்படும் அம்மாள் வருத்தம்(கொப்பளிப்பான், சின்னம்மை போன்றவை) ஏற்பாடாது எம்பது ஐதீகம். அதனால் அம்பிகை ஆலயங்களில் குளிர்த்தி பெரு விழாவாக கொண்டாடப்பெறுகின்றது.

இறைவியாகிய அம்பாள்; இயற்கையின் சக்தியாக தர்மத்தின் காவலாக, உலக இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவதாக இந்துக்கள் கொள்கின்றனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்த அம்பாள் காலத்திற்குக் காலம் பல்வேறு அவதாரங்களை எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

பூமா தேவியாக, பொறுமையின் இருப்பிடமாக வீற்றிருக்கும் அன்னை பொறுமை இழந்தால் எரிமலையாகக் கிளர்ந்தெழவும், புயலாக, வெள்ளமாக, வரட்சியாக, ஆழிப்பேரலையாக, அதிர்வாக, கொடுநோய்களாக வெளிப்பட்டு தன் சக்தியைக் காட்டி உலகத்தோருக்குப் புத்தியைப் புகட்டும் ஆற்றல் மிக்கவள்.

தாயாக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை இந் நன்நாளில் நம்பிக்கையுடன் தொழுது நின்றால் நிச்சயம் வாழ்வில் மலர்ச்சியும், எழுச்சியும் நம்மை நாடி வரும். துன்ப, துயரங்கள் தூர விலகி விடும். மங்களம் பொங்கும். நல்வாழ்வு கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன.

பிதிர்களுக்குரிய விரதநாள்

தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து வழிபாடு செய்வதைப் போன்று; தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி தினத்திலே விரதத்தை மேற்கொள்கின்றனர். தாயாரை இழந்தவர்கள் இத்தினத்திலே விரதமிருந்து வழிபாடு செய்வதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.

எம்மைப் பெற்று, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவு கூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தூய்மையின் பெருமையை மனதிலிருத்தி அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.

வான மண்டலத்தில்; சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் அளவை “திதி” என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் (ஒரே நேர் கோட்டில் அமையும்) நாளில் மூதாதையர்களுக்கு ”திதி” கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பெளர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.)

அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15 நாளான பெளர்ணமி அன்று 180 ஆம் டிகிரியை அடைகிறது. சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (ஈர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.

சூரியனை பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி தர்ப்பணம் செய்கிறோம்.

சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருப்பதும் ஆராய்ச்சிக்கு உகந்தது. அமாவாசை, பெளர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது மிகையாகாது.

மனித மனத்தின் மீது அமாவாசை, பெளர்ணமி திதிகளின் தாக்கம், அமாவாசை, பெளர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறுபாடுகள் மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. இந்தக் காலங்களில் மன நோயாளிகளின் நடத்தையில் மாற்றங்கள் உண்டாகின்றன. மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சித்தப்பிரமை. மன அழுத்தம், ஹிஸ்டீரியா பொன்றவைகள் உண்டாவதையும் அனுபவரீதியாகக் காண்கிறோம்.

இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால் சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரன் என்றும் நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது. நமது ஆத்ம பலம் பெருகினால்தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழ முடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும். அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற இத்தகைய ஜாதக அமைப்பு உதவுகிறது.

ப்ராணாயாம், யோகா போன்றவற்றிற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் அவசியம் தேவை. ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம் “மனம் வசப்பட உன்னை உணர்வாய்” என்பது பெரியோர் வாக்கு. அப்படிப்பட்டமனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான்.

அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால் வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது. அத்துடன் இச்சித்திரா பௌர்ணமி விரதத்தைக் கைக்கொள்வதன் மூலம் மறைந்து விட்ட தாயாரை ஆண்டு தோறும் நினைவுபடுத்திக் கொள்ளவும் வழிகோலப்படுகின்றது.

தாய் உயிருடன் இல்லாத ஆண்களும், தாரமிழந்த பெண்களும் காலையில் எழுந்து புனித (இலங்கையில் கீரிமலை, பாலாவி போன்ற) நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை மனதில் நினைத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த முதலாம் ஆண்டு தினம் முடியும் வரை இவ்விரதத்தை அனுசரிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் செய்யாமல் இவ்விரதத்தை அனுசரிப்பர்.

பாவ காரியங்களிலிருந்து நீங்கி மேலான புண்ணிய சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் வழிமுறையை விரதங்கள் காட்டுகின்றன. உடலையும் உள்ளத்தையும் சீர் செய்யவும் விரதங்கள் வழி கோலுகின்றன. திருவிளையாடற் புராணத்திலே சித்திரை விரதத்தின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. இந்நூலில் இந்திரன் சிவனை வணங்கித் தீவினைகள் நீங்கப்பெற்றான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

மறைந்து விட்ட தாயாரை நினைவிற் கொண்டு விரதமிருப்பதுடன் வாழ்வில் தவறுகள் தவிர்க்க நல்வழி செய்ய தூண்டுதல் செய்யும் சித்திர புத்திரனார் விரதமிருப்பதும் இந்நாளின் சிறப்பை இரட்டிப்பாக்குகின்றது.

இந்நாளில் தமிழகத்தின் திருவண்ணாமலை உள்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வர்.

தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.

சித்ரா பௌர்ணமி; தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ராபௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்தராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான்.

குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான்.

இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று அம்பிகையை பூஜித்து நல்வாழ்வு பெறலாம்.

அம்பிகை வழிபாட்டிற்கு பௌர்ணமி தினம் சிறப்பானதாக குறிப்பிடப்படும் புனித நாளாகும். அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

பௌர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்றும், வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும், ஆனியில் மூல நட்சத்திரத்திலும், ஆடியில் உத்திராட நட்சத்திரத்திலும், ஆவணியில் அவிட்ட நட்சத்திரத்திலும், புரட்டாசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும், ஐப்பசியில் அசுவினி நட்சத்திரத்திலும், கார்த்திகையில் கிருத்திகையிலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், தையில் பூசத்தன்றும், மாசியில் மாசி மகத்தன்றும், பங்குனியில் உத்திரத்தன்றும் பொதுவாக பௌர்ணமி தினம் வரும். ஓரிரு மாதங்களில் ஒருநாள் முன், பின்னாகவும் வருவதுண்டு.

சித்திரை மாத பௌர்ணமியன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்தப் பூஜை செய்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்தப் பேறு கிட்டும். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி என்றால் மிகவும் விசேஷம், வைகாசி பௌர்ணமியில் அம்மனுக்கு நீலநிற ஆடையும், தங்க ஆபரணமும் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். சந்தனாபிஷேகம் செய்வது சிறப்பு. எலுமிச்சை சாதம், சீரகமும், சர்க்கரையும் கலந்த சாதம், விளாம்பழம் இவற்றை அம்பிகைக்கு படைத்து வழிபட வேண்டும். இப்பூஜையால் பிறவி எடுக்காத புண்ணிய கதி அடையலாம். வைகாசியில் விசாக நட்சத்திரத் துடன் கூடிய வைகாசி விசாகமும் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

ஆனி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவிக்க வேண்டும். வெள்ளெருக்கம்பூ, செண்பகப்பூ இவற்றால் அர்ச்சனை செய்து முக்கனிகளையும், உளுத்தம் பருப்பு சாதத்தையும் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம். ஆனி மாதப் பௌர்ணமியில் சுமங்கலிகள் சாவித்திரி விரதம் அனுஷ்டித்து மாங்கல்ய பலம் அடையலாம்.

ஆடி பௌர்ணமியில் சிவப்பும், மஞ்சளும் கலந்த ஆடை சார்த்தி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்தல் வேண்டும். பூக்களால் அர்ச்சனை செய்வதோடு, அறுகம்புல்லாலும் அர்ச்சிப்பது சிறப்பானது. அன்றைய தினம் அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்வது சிறப்பானதாகும். இந்த பூஜையால் புண்ணிய கதி கிட்டும். ஆடி மாதத்தில் வடநாட்டில் வட சாவித்திரி விரதம், கோபத்ம விரதம் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.

ஆவணி மாத பூஜையில் நான்கு வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி வைடூரிய ஆபரணம் அணிவிக்க வேண்டும். நாட்டுச் சர்க்கரையால் அபிஷேகம் செய்து, நெய் சாதம் நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் கடன் தொல்லைகள் தீர்ந்து நன்மை பெறலாம். ஆவணி பௌர்ணமியில் ரட்சா பந்தனமும் விசேஷமானது.

புரட்டாசி பௌர்ணமியன்று அம்மனுக்கு நான்கு வண்ணங்களில் ஆடையும், பிரவாள ரத் தினக்கல் ஆபரணமும் அணிவித்தல் வேண்டும். மல்லிகைப் பூவால் அர்ச்சிப்பது சிறப்பானது. நைவேத்தியம் & இளநீர். இந்த பூஜையின் பலனாக சகல சௌபாக்கியங்களும் கிட்டும். புரட்டாசி பௌர்ணமியில் உமாமகேஸ்வர விரதமும் மேற்கொள்வது சிறப்பானது.

ஐப்பசி பௌர்ணமியில் அம்பிகைக்கு இந்திர நீல நிறக்கல் ஆபரணம் அணிவிக்க வேண்டும். எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடை சார்த்தலாம். அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்து மகிழம்பூ, வில்வம், பாதிரிப்பூ ஆகியவற்றால் அர்ச்சிக்க வேண்டும். மிளகு சாதம், கரும்புச்சாறு இவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பூஜை செய்வதன் மூலம் எல்லா காரியங்களிலும் வெற்றி கிட்டும்.

ஐப்பசி பௌர்ணமியில் லட்சுமி விரதமும் மேற்கொள்வார்கள்.கார்த்திகை மாத பௌர்ணமியன்று பூப்போட்ட ஆடையும், ருத்திராட்ச மாலையும் அணிவித்து நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வெண் பொங்கல், நெய் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். அனைத்து நலன்களையும் பெற்றுத் தரும் பூஜையாக இது நம்பப்படுகிறது. கார்த்திகை பௌர்ணமியில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

மார்கழி திருவாதிரை நாளில் அம்பிகைக்கு வெண்ணிற ஆடை உடுத்தி ஒற்றைப்படை எண்ணிக்கையில் நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். தாமரைப்பூவால் அர்ச்சித்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தலும் சிறப்பானவை. களி நைவேத்தியம் செய்ய வேண்டும். இப்பூஜை செய்வதன் மூலம் அம்பிகையின் பூரண அருளைப் பெறலாம். கஷ்டங்கள் நீங்கும், நோய்கள் குணமாகும், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியில் திருவாதிரை திருநாள் விரதத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

தை மாத பௌர்ணமியன்று அம்மனுக்கு மஞ்சளும், சிவப்பும் கலந்த ஆடை அணிவித்தல் வேண்டும். தேன் அபிஷேகம் சிறப்பானது. வில்வம், வெள்ளை தாமரைப்பூ, நந்தியாவட்டை இவற்றால் அர்ச்சனை செய்தல் நற்பலனை தரும். நைவேத்தியப் பொருள் பாயசம். ஆயுள் விருத்தியை தரும் இந்த பூஜை. தை மாதப் பௌர்ணமியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மாசி மாத பௌர்ணமி தினத்தில் செய்யும் வழிபாடு சிவதீட்சை பெற்ற பலனை தரக் கூடியது. வெள்ளை நிறம் கலந்த 5 வண்ணங்கள் கொண்ட ஆடை சார்த்தி, ஸ்படிக மணியால் மாலை அலங்காரம் செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கல் படையல் அம்பிகைக்கு ஏற்றது.

பங்குனி மாதத்தில் பௌர்ணமியன்று மஞ்சள் நிற வஸ்திரம் சார்த்தி, கோமேதகம் பதித்த ஆபரணம் அணிவிக்கலாம். தயிர் அபிஷேகம் சிறப்பானது. தாமரைப்பூவால் அர்ச்சனை செய்வதும், பருப்பு&நெய் சேர்த்த சாதம் நைவேத்தியம் செய்தலும் சிறப்பானது. இந்த பூஜையின் மூலம் புண்ணிய கதி அடையலாம். ஒவ்வொரு மாத பௌர்ணமியையும் சிறப்பு பண்டிகைகளாகவே கொண்டாடுவது விசேஷமானதாக கருதப்படுகிறது.

துன்பங்கள் தொலைய, துயரங்கள் நீங்க எம்மைப் பீடித்த தோஷங்கள் மறைய, வாழ்வில் நிம்மதி நிலைக்க, அன்னையை ஆசீர்வதிக்க சித்திரா பௌர்ணமி தினத்திலே விரதமிருந்து அம்மனையும் சித்திர புத்திரனாரையும் வழிபட்டு அருளும் நலமும் பெறுவோமாக.

சித்திர(குப்தன்)புத்திரன் அவதாரம்:


தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவ பெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார்.

சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.

தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். அகலிகையின் சாபத்தால் அவனுக்கு நேர்ந்த துயரம் அது. இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்.

பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற தன்னால் முடியாதே; இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச் செய்த பெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் ஏக்கத்தைத் தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும் இந்திராணியும் சம்மதித்தனர்.

காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். பிறக்கும்போதே கையில் ஏடும், எழுத்தாணியும்! தன் கணக்குப்பிள்ளை பதவியை மறக்காத குழந்தையாகப் பிறந்தார். சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என பெயரிட்டார்கள் இந்திரனும், அவன் மனைவி இந்திராணியும்.

குழந்தையாக இருக்கும்போதே சித்திர புத்திரன் யாரைப் பார்த்தாலும், அவர்களின் பாவ, புண்ணிய கணக்கை அப்படியே துல்லியமாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். எல்லாருக்கும் ஆச்சர்யம். இந்திரனுக்கோ பெருமை தாங்கவில்லை. இவ்வளவு புத்திசாலியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருக்கும் தன் மகனை, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எமனிடம் அனுப்பிவைக்க முடிவெடுத்தான்.

அதாவது, எல்லா மக்களுடைய வாழ்வின் முடிவிலும் பாவ, புண்ணியத்தை தீர்மானிக்கும் கணக்கைச் செய்ய! பிறவிக்கடன் தீர்த்து எப்போது கயிலாயம் செல்வோம் எனக் காத்திருந்த சித்திர புத்திரன், இதைக் கேட்டுக் கலங்கினான். என்னால் அங்கு போக முடியாது என்று சொல்லி கயிலாயம் சென்றுவிட்டான். இதனால் இந்திரன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான். மகனை மறக்கமுடியாமல் கயிலாயம் போய், சிவபெருமானிடம் முறையிட்டான். மகனை தனக்குத் திருப்பித் தருமாறு கேட்டான்.

பரமேஸ்வரனும் அவனது வேதனையை உணர்ந்து, இனிமேல் சித்திர புத்திரன் உன்னுடனே, உன் தளபதி யமனின் உதவியாளனாக இருக்கட்டும் என்று சொல்லி அனுப்பிவைத்தார். அதோடு மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என யமனுக்கு யோசனை சொல்லும் கௌரவத்தையும் கொடுத்தார்.

இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட சித்திர புத்திரனை யார் விரதமிருந்து வணங்கினாலும், அவர்களுக்கு பாவச்சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வார் என்ற வரத்தையும் அவருக்கு வழங்கினார் சர்வேஸ்வரன். எனவே சித்ரா பவுர்ணமியில் சித்திரபுத்திரனை விரதமிருந்து வணங்கினால் பாவச்சுமை குறையும்; புண்ணிய பலம் கூடும்.

சித்திரகுப்தனாரின் திருமண நாளே சித்திரைப் பௌர்ணமியாகும் எனவும் கூறுவாருமுளர். அவர் நமது பிறப்பு, பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணியங்களைக் கணக்கெடுத்து அவைகளுக்குத் தகுந்தால் போல் நமக்குரிய சொர்க்க, நரகங்களை முடிவு செய்வதே சித்திர குப்தனின் கடமையாகும்.

எனவே அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ”நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.

சிறப்பு இணைப்புக்கள்