Tuesday, April 14, 2015

திருவெண்காட்டில் அனைவருக்கும் சகல ஐஸ்வர்யங்களும் தரவல்ல தமிழ் புத்தாண்டு "மன்மத" வருட சிறப்பு ஆராதனைகள் 14.04.2015


"திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும்  பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவார்தம் கை."

ப் புத்தாண்டு திருநாளில் சித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை திருவீதி உலாவில்  கலந்து எம் பெருமானின்  இஸ்ர சித்திகளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

பிறக்கின்ற புத்தாண்டு 'மன்மத' என்ற பெயரில் பிறக்கின்றது. 'மன்மதன்' என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும். காரணம், மன்மதனின் அருள் இருந்தால் தான் சகல ஜீவ ராசிகளுக்கும் இனப்பெருக்கம் ஏற்படும். 

ரதியும், மன்மதனும் அழகில் சிறந்தவர்களாக போற்றப் பட்டார்கள். கரும்புவில் கையில் வைத்திருக்கும் மன்மதனின் பாணம் பட்டால் அரும்பும் அன்பும் மலரும், ஆனந்த வாழ்க்கை அமையும். எனவே பலரின் கல்யாணக் கனவுகள் நனவாகும் ஆண்டாகக்கூட இந்த ஆண்டைக் கருதலாம். 

பிறக்கும் புத்தாண்டு கடக லக்னத்தில் பிறக்கின்றது. லக்னாதிபதி சந்திரனை லக்னத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான் பார்க்கிறார். எனவே, குரு சந்திர யோகத்தோடும், குரு பார்க்கும் ராசியாகவும், குரு ஓரையிலும் புத்தாண்டு பிறப்பதாலும் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப சகல யோகங்களும்  மக்களுக்கு வந்து சேரப் போகின்றது.


திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை


'மன்மத' வருடம் என்பதால் மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்கள் காண்பர். தாமதப்பட்ட கல்யாணங்கள் தடையின்றி நடைபெறும். இனப்பெருக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் பணப்பெருக்கமும் அதிகரிக்கும் விதத்தில் சுக்ர பலம் நன்றாக இருக்கிறது. தமிழ் வருடங்கள் அறுபதில், 29-வது வருடமாக வருவது தான் மன்மத ஆண்டு. இந்தப் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் தேதி 14.4.2015 கிருஷ்ண பட்சம், தசமி திதியில், சுபநாம யோகம், அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் மகர ராசியில், கடக லக்னத்தில் மதியம் 12.18-மணிக்கு குரு ஓரையில்  பிறக்கின்றது.

பிறக்கும் பொழுது குரு, சூரியன் உச்சம் பெற்றிருக்கிறது. செவ்வாய், சுக்ரன் ஆகியவை சொந்த வீடுகளில் சஞ்சரிக்கிறார்கள். குருசந்திர யோகம், புத-ஆதித்ய யோகம் ஆகியவையோடு பஞ்ச பட்சியில் மயில் நடைபயிலும் நேரத்தில் வருடம் பிறப்பதால் நாட்டு மக்கள் நலம் பெறவும் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரவும், கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், கொள்கைப் பிடிப்போடு செயல்படவும் வழிவகுக்கப் போகின்றது. 

வாக்கியப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் 14-04-2015 செவ்வாய்க்கிழமை பகல் 12.23 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2 ஆம் பாதம், திகதி அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. 

திருக்கணிதப்பஞ்சாங்கத்தின் படி புதிய மன்மத வருடம் சித்திரை மாதம் 01ஆம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.47 மணியில் கர்க்கடகம் லக்கினம் அவிட்டம் நட்சத்திரம் 2ஆம் பாதம், திகதி, அபரபட்ச தசமி மகர இராசியில் பிறக்கின்றது. 


திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை


மருத்துநீர் 

மேற்குறிப்பிட்ட இரு பஞ்சாங்க நிர்ணய புண்ணிய காலங்களில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைக்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தலையில் கடப்பமிலையும், காலில் வேப்பமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்குப் புறமாகப் பார்த்து நின்று தேய்த்து அதன் பின்னர் ஸ்நானம் செய்தல் சிறப்புத்தரும். 

புண்ணியகாலம் - திருக்கணிதம் 

சித்திரை மாதம் 01ஆம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை காலை 09.47 முதல் மாலை 05.57 வரை 

வாக்கியம் 

சித்திரை மாதம் 01ஆம் நாள் (14-04-2015) செவ்வாய்க்கிழமை காலை 08.23 முதல் மாலை 04.23 வரை, 

கைவிசேடம் 

15-04-2015 புதன்கிழமை சித்திரை மாதம் 02ஆம் நாள் காலை 07.52 தொடக்கம் 9.48 வரையும் 10.00 தொடக்கம்- 11.00 வரையும் சுபவேளையில் பெரியோர்களிடமிருந்து கைவிசேடங்களைப் பெற்று ஆசி பெறுதல் வேண்டும். 

தோஷ நட்சத்திரம் 

சித்திரை, திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், உத்திராடம்.


திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை


'மன்மத வருட வெண்பா பாடல்'

முற்காலத்தில் வருடாதி வெண்பா என்ற தலைப்பில் ஒவ்வொரு வருடத்திற்கும் உரிய பாடலாக இடைக்காட்டு சித்தர் எழுதிய பாடல் இது.

மன்மதத்தில் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளை நண்ணுமே 
மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையிற் 
காற்றுமிகும்
கானப்பொருள் குறையுங் காண்.

பொருள் : இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும் நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும். 

பலவகையான தானியங்கள், பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடாளும் நபர்களுக்கு போர் குணம் அதிகரிக்கும். அதன் விளைவாக உலகின் ஒரு பகுதியில் பிரச்சினைகள் உருவாகும். தென் திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்றாக வீசும். இதன் விளைவாக மிக அரிதான விளைபொருட்கள், மூலிகைகள்  சேதமடைந்து குறையலாம்.

பாடலின் பொருளை பார்க்கின்ற பொழுது நமக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. மழைக்காக ஏங்கி மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் மழை வளம் பெருகும் என்று முதல் சொல்லாகவே குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே நேரத்தில் சூறாவளிக் காற்று, இயற்கை சீற்றங்களின் விளைவாக காட்டில் விளையும் அற்புதப் பொருட்கள் சேதமடையும் வாய்ப்பு உண்டு என்று குறிப்பிடப்படுகின்றது.

கிரகங்களும் பதவிகளும்!

இந்த மன்மத வருடத்தில் ராஜாவாக சனியும், மந்திரியாக செவ்வாயும், சேனாதிபதியாக சந்திரனும், சஸ்யாதிபதியாக சுக்ரனும், தான்யாதிபதியாக புதனும், ராஜாதிபதியாக சூரியனும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 
அர்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும் கூடுதல் பொறுப்பு சந்திரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நிரஸாதிபதி பொறுப்பு சுக்ரனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதியாக சுக்ரனும், பட்சிகளின் பிரதிநிதியாக சந்திரனும் இருப்பது யோகம்தான். 

இதனால் மக்களுக்கு எல்லா விதமான வசதி வாய்ப்புகளும் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கூட்டுப்பிரார்த்தனைகள் கூடுதலாக நடைபெறும். பால் உற்பத்தி பெருகும். 

தங்கம், வெள்ளி போன்றவைகளின் விலை குறைந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்களை அணிந்து அழகு பார்க்க மக்களுக்கு வாய்ப்புகள் கைகூடிவரும். 

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை


டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றின் விலைக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 

வெள்ளை தானியங்கள், அரிசி போன்றவற்றின் விலை குறைந்து மக்களின் தேவை பூர்த்தியாகும்.

குரு உச்சம் பெறுவதால் அரசாங்கம் புதிய சலுகைகளை அறிவிக்கும். மக்களுக்கு சகல வழிகளிலும் நன்மை கிடைக்க அரசு வழி வகுத்துக் கொடுக்கும். 

ஆன்மிகம் தழைக்கும். எழுத்துத் துறை, பத்திரிகை துறை, கலைத்துறை, ஜோதிடத்துறை, சட்டம், ஒழுங்கு துறை, நூல் வெளியீட்டுத் துறை, ஊடகத்துறை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு இனிய ஆண்டாக அமையும்.

கோவில் திருவிழாக்கள், குட முழுக்கு விழாக்கள் அதிகம் நடைபெறும். அரசியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.

விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றிக் கொடி நாட்டுவர். பொதுவாக சாதனையாளர்கள் பலரையும் சந்திக்க வைக்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப்போகின்றது. 

சாமானியர்களுக்கும் சாதகமான பலன்கள் கிடைக்கும். சாதனைகள் நிகழ்த்தி சரித்திரத்தில் இடம்பெறும் விதத்தில் புதுமுகங்கள் தோன்றுவார்கள். வறட்சியும், வளர்ச்சியும் மாறி, மாறி வரும்.

செவ்வாய் மந்திரியாக இடம்பிடிப்பதால் நிலம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் நல்ல அமோக விளைச்சல் ஏற்படும். 'எலி வளையானாலும், தனி வளை வேண்டும்' என்பதற்கேற்ப மக்கள் தங்களுக்கென்று மனைகட்டிக் குடியேற வேண்டும் அல்லது வீடு வாங்கிக் குடியேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வர்.

பூமியின் வெப்ப நிலை அதிகரிக்கும். மின்சாரம், நெருப்புகளை உபயோகிப்பவர்கள் மிகக்கவனத்துடன் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். 

திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை


வழிபட வேண்டிய தெய்வங்கள்!

புத்தாண்டில் ராஜாவாக சனி பொறுப்பேற்று உள்ளதால் விநாயகப் பெருமானையும், அவிட்டம் நட்சத்திரம் என்பதால் முருகப்பெருமானையும், சிவன், உமையவள், நந்தி வழிபாட்டையும், சேனாதிபதியாக சந்திரன் இருப்பதால் பவுர்ணமி கிரிவலம் வருவதன் மூலமும், குரு உச்சம் பெற்றிருப்பதால் தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, ஹயக்ரீவர், அறுபத்து மூவர், முனீஸ்வரர் வழிபாடும், சனி வக்ரம் பெற்றிருப்பதால் விஷ்ணு, இலக்குமி, அனுமன் மற்றும் நவக்கிரக வழிபாட்டையும் மேற்கொண்டால் மன்மத ஆண்டு மகிழ்ச்சி தரும் ஆண்டாகவும், மாற்றங்களையும், ஏற்றங்களையும் கொடுக்கும் ஆண்டாகவும் அமையும்.

சிறப்புகள் அனைத்தும் பெற சித்திரை மாத முதல் தேதியில் வழிபாடு

மன்மத ஆண்டு செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்குரிய அவிட்டம் நட்சத்திரத்தில் பிறக் கிறது. அவிட்டத்தைப் பற்றி சொல்லும் பொழுது 'அவிட்டத்தில் பிறந்தால் தவிட்டுப் பானையில் கைவிட்டால் கூட தங்கம் கிடைக்கும்' என்பார் கள். தங்கம் தங்க வேண்டுமானாலும், பூமி யோகம் நமக்கு கிடைக்க வேண்டுமானாலும் புத்தாண்டின் தொடக்க நாளில் செவ்வாய் எனப்படும் அங்காரகனை வழிபடுவது அவசியமாகும். 

கீழ்கண்ட பாடலைப் பாடி செவ்வாயை வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும்.

அங்காரகனாய் அவனியில் தோன்றிய
மங்கலச் செவ்வாய் மலரடி பணிந்தேன்!
பவளக் கல்லும் பாங்குறு துவரையும்
உவப்புற அளித்தால் ஓடிநீ வருவாய்!
ஆடுடன் அன்னம் அரிய வாகனத்தை
தேடிப் பிடித்த செண்பக நேசா!
தைரியத் தோடு தனிச்செயல் புரிந்திட
அரிய செவ்வாயுனை 
அழைத்தேன் வருக!

குருப்பெயர்ச்சி!

குரு, மன்மத வருடம் ஆனி மாதம் 20-ம் தேதி 5.7.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 1.03-க்கு மகம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

ராகு-கேது பெயர்ச்சி!

மார்கழி மாதம் 23-ம் தேதி (8.1.2016) வெள்ளிக்கிழமை பகல் மணி 12.01-க்கு உத்ரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் சிம்ம ராசியில் ராகு சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரத்தில் பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் கேது சஞ்சரிக்கப் போகிறார்.




நன்மை பெறும் ராசிகள்!

மன்மத ஆண்டில் எந்தெந்த பொறுப்புகள் எந்தெந்த கிரகங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அந்தந்த கிரகங்கள் நமது ராசியில் எந்த இடத்திற்கு அதிபதியாக விளங்குகிறாரோ, அதற்கு ஏற்ற விதத்தில் பலன் கிட்டும். 

செவ்வாய்க்கிழமை, செவ்வாய்க்குரிய அவிட்டம் நட்சத்திரத்திலேயே இந்த ஆண்டு பிறப்பதால் செவ்வாய்க்கு முக்கியத்துவம் உள்ள ராசிகளான மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

குரு உச்சம் பெற்று குரு ஓரையில் பிறப்பதால் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இந்த ஆண்டு பொன்னும், பொருளும், போற்றுகிற செல்வாக்கும் இன்னும் பெருகி இயல்பாக வளம் கிடைக்கப் போகிறது.

மற்ற ராசிக்காரர்கள் அனைவரும் தங்கள் ஜாதகத்தை புத்தாண்டு ஜாதகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து தெய்வ வழிபாடுகளை தேர்ந்தெடுத்து அதற்குரிய சிறப்பு பரிகாரங்களை சிறப்பு ஸ்தலங்களில் செய்தால் சகல யோகங்களும் வந்து சேரும்.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம் !!