Tuesday, June 23, 2015

திருவெண்காட்டில் ஆனந்த நடராஐமூர்த்தி சமேத சிவகாமி அம்பாளுக்கு ஆனி உத்தர திருமஞ்சன மகாபிஷேகம் 24.06.2015 ! ! !



சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)


"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி"

சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில் தான் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)



"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி"

கோயில் என்பது எல்லா கோயிலுக்கும் பொதுப்பெயர் என்றாலும், சிவத்தலங்களில் சிதம்பரம் மட்டுமே கோயில் என்று குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. தில்லைவனம், பெரும்பற்றப்புலியூர், சிதாகாசம், ஞானாகாசம், பொன்னம்பலம், பூலோககைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. சிதம்பரம், பழநி, பாபநாசம், குற்றாலம், ஸ்ரீரங்கம்(ன்) போன்ற திருத்தலங்களின் பெயரை குழந்தைகளுக்கு இடும் வழக்கம் உண்டு. அதுபோல சிதம்பரம், பொன்னம்பலம் என்று பெயரிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. 

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை


"திருவெண்காடு  சுவேதாரணியம்பதி  பூலோககைலாய  புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்." 

இங்கு முதல் நாள் முதல் எட்டாம் திருவிழா வரை உற்ஸவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் வாகனங்களில் எழுந்தருள்வர். ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். நடராஜப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். ஆனிஉத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம் செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர். பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும். அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.



நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். 


ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும். அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.


தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நடு இரவாகிவிடும். இந்த மண்டபத்திற்கு ராஜசபை என்றும், அரசம்பலம் என்றும் பெயர். இரவு நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில் தங்குவார்கள். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்.

ஆடல் காணீரோ...திருவிளையாடல் காணீரோ: ஆடலரசனான நடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்டவங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன. 


திருநெல்வேலியில் தாமிர சபையில் இறைவன் ஆடும் தாண்டவம் படைத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இதனை காளிகா தாண்டவம் என்பர்; முனி தாண்டவம் என்றும் சொல்வர். மதுரை திருப்பத்தூரில் ஆடும் தாண்டவம் கவுரி தாண்டவம் மற்றும் சந்தியா தாண்டவமாகும். இது காத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இருண்ட நள்ளிரவில் சிவபெருமான் ஆடும் சங்கார தாண்டவம் அழித்தல் தொழிலைக் காட்டக்கூடியது. மறைத்தல் தொழிலை திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம் என்பர். சிதம்பரத்தில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம். இவை ஐந்து தொழில்களைக் காட்டக் கூடியவை என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் தாண்டவமாடும் முதன்மைச் சபைகள் ஐந்து. பதஞ்சலி, வியாக்ரபாதருக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இது சிதம்பரம் திருத்தலத்தில் நடந்தது - இது பொன்னம்பலம் ஆகும்.


மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்த பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் வேண்டிக் கொண்டதால், சிவபெருமான் திருமண விருந்திற்கு முன் ஆடிக்காட்டிய நடனம் மதுரை வெள்ளியம் பலத்தில் நடைபெற்றது. இங்கு, ராஜசேகரபாண்டியன் என்னும் மன்னனின் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமான் கால் மாறி - வலது காலைத் தூக்கி ஆடினார். இதேபோல் திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கீழ்வேளூர் திருத்தலத்தில் அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமணக் காட்சியைக் கொடுத்தபோது, அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினார். இறைவனின் வலது பாத தரிசனத்தை அகத்தியர் கண்டார். 


சிவபெருமான் வலக்காலை உடலோடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம். இந்த நிகழ்ச்சி திருவாலங்காட்டில் நடந்தது. இத்தலத்தில் ரத்தின சபை அமைந்துள்ளது. வேணுவனமாகிய நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இறைவன் தாமிரசபையில் நடனமாடுகிறார். திரிகூடமலைக்கு வந்து திருமாலும், பிரம்மாவும், தேவர்களும் தவம் செய்ய, அவர்களுக்காக இறைவன் திருக்கூத்து தரிசனம் தந்தார். திரிகூடமலையான திருக்குற்றாலத்தில் உள்ளது சித்திரசபை. இங்கு இறைவன் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளது. திருவெண்காடு சுவேதாரண்யர் திருக்கோயிலில் உள்ள நடன சபையை ஆதிசபை என்று போற்றுவர். இங்கு சுவேதகேது என்ற மன்னன் இறைவனை வேண்டியதால் நவதாண்டவங்களை ஆடி மகிழ்வித்தார். இதற்குப் பிறகுதான் இறைவன் சிதம்பரத்தில் ஆடினார் என்று புராணம் கூறுகிறது. 


திருவாரூரில் திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது. திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்காறாயிலில், நடராஜரின் அம்சமாகிய ஆதிவிடங்கர் குக்குட நடனம் ஆடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்று ஆடினார். தேனடையில் வண்டு ஒலித்துக் கொண்டே முன்னும் பின்னும் மேலும் கீழுமாக ஆடுவதைப் போன்று ஆடும் இறைவனின் பிரமர தாண்டவத்தை திருக்குவளையில் தரிசிக்கலாம். திருநள்ளாற்றுத் தலத்தில் பித்தேறியவனைப் போல் மனம் போனபடியெல்லாம் இறைவன் ஆடிய நடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகை வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம் எனப்படுகிறது. அன்னப்பறவை அடிமேல் அடியெடுத்து வைத்து அழகாக நடப்பது போன்ற தோற்றமாகும். 


திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம் கமல நடனமாகும். இறைவன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடு துறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் தலத்தில் தரிசிக்கலாம். ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில், சித்ரா பவுர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக இறைவன் ஆடிய நடனத்தை சித்திர நடனம் என்று போற்றுவர். ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் உச்சிக் காலத்திலும், ஆனித் திருமஞ்சனம் உத்திர நட்சத்திரத்தில் பிரதோஷ காலத்திலும், ஆவணி மாதம் சதுர்த்தசி திதியன்று சாயரட்சை காலத்திலும், புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் அர்த்த ஜாமத்திலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தன்று நள்ளிரவிலும், மாசி மாதம் சதுர்த்தசி திதியில் கால சந்தியிலும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர்.


தாண்டவங்கள் பல ஆடிய இறைவனான நடராஜப் பெருமான் சில திருத்தலங்களில் வித்தியாசமான திருக்கோலத்திலும் அருள்புரிகிறார். திருச்சியை அடுத்துள்ள திருவாச்சி என்னும் திருத்தலத்தில் விரிந்த செஞ்சடையின்றி, முயலகனுமின்றி ஒரு சர்ப்பத்தின் மேல் ஆடும் கோலத்தில் உள்ளார். திருச்சிக்கு அருகிலுள்ள வயலூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர் திருமேனி விக்கிரகத்தில் திருவாச்சி இல்லை. திரிசடை ஜடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் அணிந்துள்ளார். இடது மேல் கையில் அக்னியும், வலது மேல் கையில் உடுக்கையும், வலது கீழ்க்கரம் அபயம் தரும் நிலையிலும், இடது கீழ்க்கரம் வலது பாதத்தைக் காண்பிக்கும் நிலையில் தொங்கவிட்டும் எழுந்தருளியுள்ளார். மேலும் இவரது காலடியில் முயலகன் மிதிபடவில்லை. முயலகன் இல்லாத அற்புதத்திருமேனி என்று போற்றுவர். கால்தூக்கி ஆடாமல் நடனக் கோலத்தில் சற்று நளினமாகக் காட்சி தரும் இத்திருமேனியை சுந்தரத் தாண்டவத் திருமேனி என்றும் உமாநடன வடிவம் என்றும் போற்றுவர்.


சிவாலயங்களில் பஞ்சலோகத் திருமேனியில் காட்சிதரும் நடராஜப் பெருமான், ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் மரகதக் கல் (பச்சைக் கல்) திருவுருவில் எழுந்தருளியுள்ளார். இத்திருமேனிக்கு சந்தனக்கலவை பூசியிருப்பார்கள். நடராஜருக்கு மட்டுமின்றி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான பள்ளிகொண்ட ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் மிகச்சிறப்பாக நடைபெறும். இதனை ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றுவர். 


இத்திருமஞ்சனத்தின் போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை சேவிப்பது மிகவும் விசேஷம். இதனை பெரிய திருமஞ்சனம் என்பர். ஸ்ரீரங்கம் கோயிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோயில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும் திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள். திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள். திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோயிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தபின் பக்தர்களுக்கு அளிப்பார்கள். ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தின்போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதில் ஐயமில்லை!


ஆனித் திருமஞ்சனம் காணும் நடராஜர்: ஆனந்த நடனம்: சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யுமுனிவர் என்று அனைவரும் கூடினர். அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும் சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர். நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை

பொற்சபை (பொன்னம்பலம்)
சிவகுடும்பம்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.


அங்கப்பிரதட்சணம் செய்த அப்பர்: சிவனடியார்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிதம்பரம் கோயிலின் நான்கு கோபுரவாசல் வழியாக நுழைந்துள்ளனர். கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கில் திருநாவுக்கரசரும், வடக்கில் சுந்தரரும், தெற்கில் திருஞானசம்பந்தரும் வந்ததாகச் சொல்வர். இவர்களில் அப்பர் எனப்பட்ட நாவுக்கரசர், தேரோடும் வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்து நடராஜரை வழிபட்டார். திருநாளைப்போவார் என்னும் நந்தனார், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம், நீலகண்டர், சேந்தனார் போன்ற அடியார்களின் வாழ்க்கையோடும் இக்கோயில் தொடர்புடையது.


பஞ்ச சபைகள்:

ரத்தின சபை  திருவாலங்காடு
கனகசபை  சிதம்பரம்
ரஜிதசபை  (வெள்ளி சபை)  மதுரை
தாமிரசபை  திருநெல்வேலி
சித்திரசபை  திருக்குற்றாலம்
பொற்சபை திருவெண்காடு மண்டைதீவு - இலங்கை

பஞ்ச தாண்டவ தலங்கள்

ஆனந்த தாண்டவம்  சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம்  திருவாரூர்
சுந்தரத் தாண்டவம்  மதுரை
ஊர்த்துவ தாண்டவம்  அவிநாசி
பிரம்ம தாண்டவம்  திருமுருகன்பூண்டி
ஆனந்த தாண்டவம் திருவெண்காடு மண்டைதீவு - இலங்கை

காட்டிடை ஆடும் கடவுள்

திருவாலங்காடு  ஆலங்காடு
திருவெண்பாக்கம்  இலந்தைக்காடு
திருவெவ்வூர்  ஈக்காடு
திருப்பாரூர்  மூங்கிற்காடு
திருவிற்கோலம்  தர்ப்பைக்காடு

ஐந்தொழில் தாண்டவம்

படைத்தல்  காளிகாதாண்டவம்  திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல்  கவுரிதாண்டவம்  திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல்  சங்கார தாண்டவம்  நள்ளிரவில்.
மறைத்தல்  திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை
அருளல்  ஊர்த்துவ தாண்டவம்  திருவாலங்காடு, ரத்தினசபை.

ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.



நடராஜர் அபிஷேகங்கள்

தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் சித்திரை, மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. இரவுக்கு ஆவணி, அர்த்தயாமத்துக்குப் புரட்டாசி, ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் படும்.

சிதம்பரம் ஸ்ரீமத் ஆனந்த நடரதஐமூர்த்தி சமேத சிவகாமசுந்தரி 
தமிழ்நாடு - இந்தியா 


தில்லையில் ஐந்து சபைகள்

1. சித்சபை  சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.

2. கனகசபை  சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.

3. தேவசபை  பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.

4. நிருத்த சபை  தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.

5. ராஜசபை  ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.


நவதாண்டவம்

தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம்.

மடவார் விளாகம் நடராஜர்

ஸ்ரீ வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.

மேலைச் சிதம்பரம்

பேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும்.



மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும்.  ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும்.


உதயத்திற்கு முன்பே: தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் செய்து முடிப்பர்.


இதயக்கோயிலில் ஆனந்த நடனம்: வியாக்ரபாதர், பதஞ்சலி இருவரும் சிதம்பரத்தில் ஈசனின் நடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜரின் திருப்பாதங்களில் வேதங்கள் சிலம்பாக ஒலிக்கிறது. வலக்கை டமருகம் இசைக்கிறது. இடக்கை அக்னியைத் தாங்கியிருக்கிறது. அவரின் சிவந்த இதழ்கள் புன்முறுவலைக் காட்டுகின்றது. பால் போல வெண்ணீறு காற்றில் நறுமணம் பரப்புகிறது. செஞ்சடை எட்டுத் திசைகளிலும் விரிந்தாடுகிறது. வலக்கால் அசுரனை மிதித்து நிற்கிறது. இடக்கால் குஞ்சித பாதமாக (தொங்கிய நிலையில்) நமக்கு அருள்செய்கிறது. இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். இதை கண்டு தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே.

திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
 மண்டைதீவு - இலங்கை

பொற்சபை (பொன்னம்பலம்)
சிவகுடும்பம்


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான் , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.

மூன்று வழிபாடு: சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார். அருவம் என்பது உருவமற்றநிலை, உருவம் என்பது கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை, அருவுருவம் என்பது உருவமும் அருவமும் கலந்த நிலை. இம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக சிதம்பரம் உள்ளது. அருவநிலைக்கு சிதம்பர ரகசியமும், உருவநிலைக்கு நடராஜரும், அருவுருவ நிலைக்கு மூலவர் மூலட்டானேஸ்வர் லிங்க வடிவிலும் இங்கு அமைந்துள்ளனர்.




ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !

எல்லோரும் வாழ்க . . . ! 

 திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''