நாகசதுர்த்தி விரத பூஜை வழிபாடு . வம்சம் விளங்க, நாக பயம், தோஷம் இல்லாமல் இருக்க வேண்டி செய்யப்படும் விரதம்.
உப்பு இல்லாத ஆகாரத்துடன், நாகராஜனுக்கு அபிஷேகம் செய்து, எறும்புக்கு உணவாக அரிசி வெல்லம் சேர்த்தரைத்தது, மற்றும் எள்ளும் வெல்லமும் சேர்த்தரைத்தது வைத்தல்.
இன்றும் நாளையும் ஒட்டடை தட்டுதல், பூச்சிகளைக் கொல்லும் மருந்துகளை பாவித்தல் கூடாது.ஈ எறும்புக்குகூட வாழ்க்கை உண்டு என்று சொல்லும் நாள்.
(சிலர் இன்று தாளித்தல், தோசை சுடுதல், போன்ற சமையல்களை செய்ய மாட்டார்கள்)
கருட பஞ்சமி:
பிறந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு பண்டிகைக்கும் சீர் வரும். மாமன் சீர்தான் முதல் சீர். ஏன் இந்தப் பழக்கம்? திருமணம் ஆகி சென்று விட்டாலும் பெண்ணிற்கு பிறந்த வீட்டிலிருந்து தொடர்பு அறுந்து விடாமல் இருக்கத்தான்.
அண்ணன் தம்பிகளிடமிருந்து பெற்றுக்கொண்டால் மட்டும் போதுமா? அவர்களின் நலனுக்காக ஒரு விரதம். அதுதான் கருடபஞ்சமி.
செவி வழி கதை ஒன்று:
7 அண்ணன்களுக்கு ஒரே ஒரு தங்கை. அண்ணன்கள் வயலில் வேலை செய்வார்கள். தங்கை அவர்களுக்கு சமைத்து எடுத்துச் செல்வது வழக்கம்.
கஞ்சி கலையத்தில் தலையில் சுமந்துக்கொண்டு செல்கிறாள். ஆகாயத்தில் கருடன் ஒன்று பாம்பை தன் வாயில் கவ்விக்கொண்டு பறக்கிறது. அழுத்தம் தாங்காமல் பாம்பு விஷத்தைக் கக்க அது திறந்திருக்கும் கஞ்சி கலயத்தில் விழுகிறது.
இதை அறியாத அந்தப் பேதைப் பெண், வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் அண்ணன்களுக்கு கஞ்சி கொடுக்க குடித்தபின் ஒவ்வொருவராக செத்து மடிகிறார்கள்.
பயந்து செய்வதறியாத தவித்த தங்கை, அண்ணன்கள் போனது போல் தானும் போக முடிவு செய்து கஞ்சியை குடிக்க போக கணவன், மனைவியாக பார்வதி
பரமேஸ்வரர் வந்து தடுத்தாட்கொள்கிறார்கள்.
என்ன நடந்தது? என்று கேட்க அந்தப் பெண் “கஞ்சியைக் குடித்தார்கள். மயங்கிவிட்டார்கள். என் அண்ணண்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை” நானும் அவர்களுடன் போகிறேன் என்று அழுகிறாள்.
அப்போது பார்வதி தேவி, அம்மா! நீ வீட்டில் ஓட்டைகளை அடைத்து, சுத்தம் செய்யும்போது பூச்சிகள் இறந்துவிட்டன. அந்த மாதிரி வேலைகளை இந்த இரண்டு நாட்களும் செய்யலாகாது. மேலும் நீ கருடபஞ்சமி பூஜை முறையாக செய்யாதததினால் தான் இவ்வாறு ஆயிற்று. நான் உனக்கு பூஜை செய்விக்கிறேன் என்று கூறி,
வயலில் இருந்த பாம்பு புற்றிற்கு அழைத்துச் சென்று நாகத்திற்கு அருகில், 7 பத்மம் கோலம் போட்டு, விளக்கு ஏற்றி, வயலில் இருந்த களிமண்களைக் கொண்டு கொழுக்கட்டைகள் செய்து, 7 முடி போட்ட தோரம் வைத்து பூஜை செய்வித்து தோரத்தை பெண்ணின் வலது கையில் கட்டிவிடுகிறாள்.
அந்தப் பெண்ணிடம் புற்றிலிருந்து எடுத்த மண், அட்சதை, பூ ஆகியவைகளைக் கொடுத்து உன் அண்ணண்களின் வலது தோளிலும், வலது பூஜத்திலும் இதை வைத்து பூஜை செய் எழுந்துவிடுவார்கள்” என்று சொல்கிறார்.
பெண்ணும் அவ்வாறே செய்ய, அண்ணண்கள் தூக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்து, அழுதுகொண்டிருக்கும் தங்கையை விவரம் கேட்க நடந்ததைச் சொல்கிறாள்.
இவ்வாறு பெரியவர்கள் பூஜித்தி சிறியவர்களுக்கு சொல்லியதுபோல் இன்றும் கருட பஞ்சமி விரத பூஜை செய்வது வழக்கம்.
அண்ணன் தம்பிகளின் நலனுக்காக இந்த விரதம். பாம்பு புற்றில் பூஜை செய்து
கொண்டு வரும் புற்றுமண் (புட்ட பங்காரு- தெலுங்கு) வைத்து பூஜை செய்து, அண்ணண், தம்பியின் வலது காது, வலது தோளில் நீர் ஊற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து, புற்றுமண்ணும் வைத்து பூஜை செய்து அவர்களது நலனுக்காக விரதம் செய்யவேண்டும்.
எப்போதும் அண்ணன் களிடமிருந்து வாங்கிக்கொள்வோம். கருட பஞ்சமி அன்று அண்ணன் தம்பிகளுக்கு உடையோ, தாங்கள் விரும்பும் பரிசு கொடுக்க வேண்டும்.
வெளி ஊரில் இருந்தாலும் பரிசுகள் அனுப்பி வைத்து வீட்டில் அவர்களுக்காக பூஜை செய்வார்கள்.
பண்டிகைகள் உறவை பலப்படுத்தும் நோக்கோடு பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.