Wednesday, October 28, 2015

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் திருநாள் ! ! ! 27.10.2015


சிதம்பரம் தில்லை சிற்றம்பலத்தில் அனுதினமும் காலை பதினோறு மணியளவில் இரத்னசபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்

 யாழ்ப்பாணம் - இலங்கை

பொற்சபை (பொன்னம்பலம்)


திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று நடைபெறும் அபிஷேக ஆராதனையில் மிகவும் போற்றப்படுவது- ஐப்பசி பௌர்ணமியில் நடைபெறும் அன்னா அபிஷேகமாகும். காரணம், சிவபெருமானே அன்னமாக மாறியிருக்கிறார் என்கிறது புராணம்.


அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

உலகில் வாழும் உயிர்களின் ஜீவநாடி அன்னம். உலக வாழ்க்கைக்கு அச்சாணி. ஒருவேளை உணவில்லாவிட்டாலும் உடல் சோர்வடையும்; மூளை சரியாக வேலை செய்யாமல் தடுமாறும்.

“அன்னமே உண்மையான பிரம்ம சொரூபம்; விஷ்ணு சொரூபம்; சிவ சொரூபம். ஆகையால் அன்னமே உயர்வானது’ என்று வேதம் சொல்கிறது.

“அன்னம் தான் ஜீவன்’ என்கிறது சாஸ்திரம்.


“தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு பகிர்ந்தளிக்காமல் தான் மட்டும் யார் உண்கிறானோ, அவன் பாவ பிண்டத்தைத்தான் உண்கிறான்’ என்கிறார் பகவான் கிருஷ்ணன்.

“அன்னம் அளி! அன்னம் அளி! ஓயாமல் அன்னம் அளி’ என்கிறது பவிஷ்ய புராணம்.

“உலகில் வாழும் மானிடர்களுக்கு மட்டுமல்ல; இவ்வுலக வாழ்வை நீத்தவர்களுக்கும் பிண்டமாக அன்னம் அளிக்கப்படுகிறது" என்று வேதநூல்கள் கூறுகின்றன.

ரத்தின சபை


இதனையெல்லாம் நினைவு கூர்ந்து தான் துலா மாதமான ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப் படுகிறது.

சிவலிங்கத்தில் காணப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கத்தின் உருப்பெறும். அதாவது சிவரூபமாகும். இதனை தரிசிப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்குப் பஞ்சமில்லை என்பது ஐதீகம்.


இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியை ஐப்பசிப் பௌர்ணமியன்று அனைத்து சிவாலயங்களிலும் தரிசிக்கலாம். அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றுத் திகழ்கிறது.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! நமசிவாயம் வாழ்க...!
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''