Friday, February 19, 2016

திருவெண்காட்டில் பயவுணர்வு, பகைமை, தீராப்பிணிகள் தீர்க்க வல்ல சனி மகா பிரதோஷம் ! ! ! 20.02.2016


நாளைய தினம், 20.02.2016 சனிக்கிழமை "மகா பிரதோஷம் ( சனிப்பிரதோஷம்) சென்ற 06.02.2016 இல் சனிப்பிரதோஷத்தை தவறவிட்ட அன்பர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் இதை தவறவிடாதீர்கள். மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)


கண்காட்டும் நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
திருவெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.

சனிப்பிரதோஷமாகிய மகாபிரதோஷ மகிமை....

ஒரு காலத்தில் சந்திரசேனன் என்னும் அரசன் உஜ்ஜயினியை ஆண்டு வந்தான். ஸ்ரீ மாகாளேசுரரை வணங்கும் விரதம் பூண்டவன். ஒருமுறை மாணிபத்திரன் என்னும் கணநாதன் ஒருவன் வந்து அவனுடன் நட்பு பூண்டான். அவன் பிரியும் போது நட்புக்கு அடையாளமாகச் சிந்தாமணி என்னும் ரத்தினத்தை அளித்துச் சென்றான்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
ஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்


பருவெண்கோட்டுப் பைங்கண்மத வேழத்தின்
உருவங்காட்டி நின்றானுமை அஞ்சவே
பெருவெண்காட்டிறை வன்னுறை யும்மிடந்
திருவெண்காடடைந் துய்ம்மட நெஞ்சமே.

சந்திரசேனனின் பகைவர்கள் ஒன்று சேர்ந்து அந்த ரத்தினத்தைக் கைப்பற்ற எல்லையில் வந்து முற்றுகை இட்டனர்.சிவபிரானையே பெரும் பலமாகக் கருதும் சந்திரசேனன் ஆலயம் சென்று ஸ்ரீகாளேசுரரை எண்ணித் தியானம் செய்தான் அன்று சனிப்பிரதோஷம்.

ஒரு பெண்மணி, அப்பொழுது தான் இளம் மகனுடன் வந்து ஸ்ரீகாளேசுரரை வணங்கிச் சென்றாள்.


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

- திருஞானசம்பந்தர்

தாயுடன் இல்லம் சென்று சிறுவன் மன்னன் ஆலயத்தில் செய்த தியானத்தைப்போல தானும் கற்பனையாகச் செய்ய எண்ணி ஏதோ ஒரு கல்லைத் தன் முன் லிங்கமாக வைத்துக் கண்களை மூடிக்கொண்டு இருந்தான் அப்பொழுது அன்னை உணவுண்ண அழைத்தாள்.அவன் போகவில்லை .அதனால் அங்கு வந்த தாய் கடுங்கோபத்துடன் சிறுவன் லிங்கமூர்த்தியாகப் பாவனை செய்த கல்லைத் தூக்கி எறிந்து விட்டுச்சென்றாள்.அதைக் கண்ட சிறுவன் மூர்ச்சித்து விழுந்தான்.


சிறிது நேரத்தில் கண்விழித்த சிறுவன் தனக்கு முன் நவரத்தின லிங்கமூர்த்தி ஜொலிப்பதையும் வீடெல்லாம் செல்வவளம் செழித்திருப்பதையும் கண்டு அதிசயித்தான்.தாய் மகிழ்ந்து அன்று சனிப்பிரதோஷ நாளாகையால் தன் மகன் செய்த பிரதோஷநாள் பூஜைபலனே செல்வ வளத்திற்குக் காரணம் என்று தன் செயலுக்கு வருந்தினாள்.


சிறுவன் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியைக் கேள்வியுற்று மன்னன் சந்திர சேனன் வந்து சிறுவன் முன் இருந்த லிங்கமூர்த்தியை வணங்கினான் இதையெல்லாம் ஒற்றர் மூலம் அறிந்த மன்னனின் பகைவர்கள் எல்லாவற்றிற்கும் சந்திரசேனன் செய்த சனிப்பிரதோஷ மகிமையே காரணம் என்று பகைமையை விட்டு நட்புப் பூண்டனர்.


இத்தகைய மகிமை மிக்க சனிப்பிரதோஷ நாளில் சிவாலயம் சென்று சிவ, நந்தி எம் பெருமானையும் தரிசித்து பயவுணர்வு, பகைமை, தீராப்பிணிகள் தீர்ந்து மனநலம் உடல் நலம் வாக்குநலம் வளம் பெற்று , வருகின்ற செய்திகள் எல்லாம் நல்லவைகளாகவும் சாதனைகள் புரிய வாய்ப்பும் உண்டாகப்பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''