Wednesday, June 22, 2016

திருவெண்காட்டில் நமக்கு வரும் துன்பங்கள் தடைகள் அனைத்தையும் தீர்க்க வல்ல சங்கடஹர சதுர்த்தி ! ! ! 23.06.2016


விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


கண்ணென்று கொண்டதுமே காண்பதற்கு உனையன்றி
மண்ணினிலே வேறுண்டோ மானிடர் துயர்தீர்ப்போன்
எண்ணுவோர்க்கு இவ்வுலக இன்பமெலாம் ஈயத் 
திருவெண்காட்டில் உறைகின்றான் வேண்டியவன் தாள்சேர்வீர்

ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.


"அருங்கலையும் கல்வியும் அருளும் ஆனைமுகத்தானே
அரசனும் ஆண்டியும் வேண்டிடும் துணையே
குறைகள் அகற்றி குலம் தழைக்க
கருணை புரிந்து காத்தருள்வாய் 
திருவெண்காடுறை சித்திவிநாயகனே"

சங்கட ஹர சதுர்த்தி பற்றிய கதை

வேடர் குலத்தில் பிறந்த விப்பிரதன் என்பவன் தீயச்செயல்கள் புரிந்து, காட்டில் வருவோரை கொடுமைப்படுத்தி கொண்டிருந்தான். ஒருநாள் அவ்வழியாக வந்த முனிவரை வெட்டி வீழ்த்த எண்ணினான். முனிவரோ தன் சக்தியால் அவனை செயல் இழக்க செய்தார். வேடனோ! முனிவரிடம் வேண்டி உயிர் பிச்சை கேட்டான். அவனை மன்னித்த முனிவர், உன்பாவம் தொலையட்டும் என்று கூறி கணேச மந்திரத்தையும், விரதத்தையும், செய்து வாழ்வை நல்லபடியாக அமைத்து கொள் என்று கூறி ஆசீர்வதித்தார். விப்பிரதன் கணேச மந்திரத்தையும், விரதத்தையும் தொடர்ந்து கடைபிடித்தான். அவனே பின்னால் புருசுண்டி என்ற முனிவர் ஆனார். புருசுண்டி முனிவர் பூலோகத்தில் எல்லாரும் சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழ சங்கடஹர சதுர்த்தியை தோற்றுவித்ததாக வரலாறு கூறுகின்றது. நம் சங்கடங்களை களைவதற்காகவே நாம் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஐதீகம்.


சங்கட ஹர சதுர்த்தி பற்றிய மற்றொரு கதை

சந்திரன், விநாயகரை நோக்கி தவம் இருந்து அவரது அருளைப் பெற்றான். சந்திரனுக்கு விநாயகர் தரிசனம் தந்தநாள் மாசி மாதம் தேய்பிறை முடிந்து 4-ம் நாள் ஆகும். அன்று செவ்வாய்க்கிழமை, இதைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். தேய்பிறைச் சதுர்த்தியில் சந்திரன் உதயமாகும் போது சதுர்த்தி திதி இருக்க வேண்டும். அந்த நாள் செவ்வாய்க்கிழமையாக அமைந்து விட்டால் மிகவும் சிறப்பு. அதை அங்காரக சதுர்த்தி என்பார்கள். அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான். அதனால் தான் செய்வ்வாய்க்கிழமை சதுர்த்தி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சதுர்த்தியில் விரதம் இருந்து சங்கடம் நீங்கியதாலேயே இந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று பெயர் பெற்றது.


சங்கடஹர சதுர்த்தி பற்றி கூறப்படும் இன்னொரு விளக்கம்

கஷ்டம் என்பது வறுமை, இல்லாமை என்று செந்தமிழில் சொல்லப்படுகிறது. சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்=சங்கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு சங்கட்டமாகி கடைசியில் சங்கடமாக உருமாற்றம் பெற்று விட்டது. கங்கடம் என்றால் இதுதான் அர்த்தம். இந்த சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும். பிரதிமாதமும் பவுர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்தி என்றாலே நான்காவது என்றுதான் பொருள். தேய்ப்பிறை நாளில் தேயும் பொழுதில் இருள் கவ்வும் மாலை நேரத்தில் வருவதே இந்த சங்கடஹர சதுர்த்தி. நமக்கு வரும் துன்பங்களை தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு பூஜையே இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜை.ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'