Monday, August 1, 2016

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சுபிட்சம் தரும் ஆடி அமாவாசை விரத அனுஸ்டானங்கள் ! ! ! 02.08.2016

நூறாண்டுகளுக்கு பிறகு நடைபெறும் அதிசயம் நாளை ஒரே நாளில் 3 முக்கிய நிகழ்வு
*ஆடிப்பெருக்கு - ஆடி அமாவாசை-குருப்பெயர்ச்சி*
*மங்கலம் தரும் ஆடிப்பெருக்கு.*
*மூதாதையர்கள் அருளைப் பெற உதவும் ஆடி அமாவாசை.*
*கோடி நன்மை தரும் குருப்பெயர்ச்சி.*
இந்த 3 முக்கிய நிகழ்வுகளும் ஒரு சேர அமைந்துள்ள அதிசய திருவிழா நூறாண்டுகளுக்கு பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு - இலங்கை
"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பொன்னம்பலம் பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."
தட்சணாயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான ஆடி மாதத்தில் பூமா தேவி அம்மனாக அவதரித்ததாக புராண நூல்கள் கூறுகின்றன. இதனால் இம்மாதம் ‘அம்மன் மாதமாக’ போற்றப்படுகிறது.

இந்த மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு முக்கிய விழாக்கள் ஆகும்.
*ஆடிப்பெருக்கு*
ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நதிகளில் நீர்ப்பெருக்கு அதிகரிக்கும்.
அன்று பெண்கள் தாலி மாற்றி புதுத்தாலி கயிறு அணிவது வழக்கம். திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் ஆக வேண்டும் என்று அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

ஆடி மாதம் விவசாயிகளுக்கு உகந்தமாதம். ஆடி பதினெட்டாம் தேதி விவசாயிகள் தங்கள் பணிகளை தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் இதனால் தான் உருவானது.
ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புதுவெள்ளம் கரை புரண்டோடும். காவிரியை பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி, காவிரி பெண் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை காவிரி டெல்டா மக்கள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அப்போது காவிரிக்கு மங்கல பொருட்களான மஞ்சள், பனை, ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகு மணி மாலை, வளையல், அரிசி, பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.
ஆடிப்பெருக்கன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப்பொருட்கள் ஆற்றில் விடப்படும். விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி காவிரிக்கு மலர் தூவி வணங்குவார்கள்.*ஆடி அமாவாசை*
தட்சணாயன புண்ணிய காலத்தில் வருகிற முதல் அமாவாசையான ஆடி அமாவாசையன்று தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் (பிதுர்கடன்) கொடுத்தால் அது அவர்களை சென்று அடைகிறது என்பது ஐதீகம். அன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பர். ராமேசுவரம், வேதாரண்யம், திருவையாறு, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பவானி போன்ற இடங்களில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுப்பர்.
ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை படுக்கையில் இருந்து எழுந்து குளித்து விட்டு, சிவாலய தரிசனம் செய்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்ய வேண்டும். பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் தோஷங்களில் இருந்து விடுதலை பெறலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசையன்று கடலில் தீர்த்தமாடுவது பாவத்தை போக்கி விமோசனம் அளிக்கும். அன்று ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் எள், மாவு, பிண்டம் ஆகியவற்றை மீன்களுக்கு கொடுத்தால் நீரில் சேர்க்கும் பொருள் ஆவியாக போய் பித்ருக்களை சென்று அடைவதாக ஐதீகம்.
*குருப்பெயர்ச்சி*
ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு குருபகாவன் செல்வது குருப்பெயர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. குருப்பெயர்ச்சி கோடி நன்மை தரும் என்று கூறப்படுகிறது. அனைத்து ராசிக்காரர்களும் குருப்பெயர்ச்சியை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம்.
*அர்ச்சகர் பேட்டி*
மிக முக்கிய நிகழ்வுகளான ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சி ஆகிய மூன்றும் ஒரே நாளில் வரும் அதிசயம் குறித்து திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் அர்ச்சகர் வேதசிவாகமரத்னா டி.ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் கூறியதாவது:-
நாளை (செவ்வாய்க்கிழமை) துன்முகி ஆண்டின் மிகச்சிறப்பான நாளாகவும், நூறாண்டுகளுக்கு பிறகு வரும் நன்னாளாகவும், ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, குருப்பெயர்ச்சி, ஆடி செவ்வாய்க்கிழமை என பல சிறப்புகளுடனும் விளங்குகிறது.
ஆடி அமாவாசையானது தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் அமாவாசை ஆகும். நமது குடும்பத்தில் இறந்தவர் களுக்கு பித்ருக்கள் என்று பெயர். மனிதனுக்கு 30 நாட்கள் ஒரு மாதம் ஆகும். ஆனால் பித்ருக்களுக்கு ஒரு மாதம் என்பது ஒரு நாளாகும். நாம் மாதந்தோறும் பித்ருக்களுக்கு எள் தர்ப்பணம் செய்வது, தினமும் தர்ப்பணம் செய்வதாக அமைகிறது. பித்ருக்களுக்கு இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, தானம் கொடுப்பது ஆகியவை நம் ஆயுளில் மட்டும் அல்லாது நமது சந்ததியினரின் வாழ்விலும் வளம் சேர்க்கும்.
ஆடிப்பெருக்கு ஆடி மாதம் 18-ந் தேதி விமரிசையாக கொண்டாடப்படும் திருநாளாகும். காவிரி தேவி என அழைக்கப்படும் லோபா முத்திரை அகஸ்தியரின் மனைவி ஆவார். 18 தத்துவங்களை கடந்து யோகினியாக திகழும் நாள் இந்த ஆடிப்பெருக்காகும்.
அனைவரும் குடும்பத்தோடு காவிரி அம்மனுக்கு சித்ரான்னம் படைத்து காதோலை கருகுமணியை ஆற்றில் விட்டு ஜீவநாடியாக விளங்கும் காவிரி புது நீரை வரவேற்கும் விழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து ஒரு ராசிக்கு பிரவேசிக்கும் கிரகம் ஆவார். தனபுத்திரகாரகன், பிரகஸ்பதி, வியாழன் என அழைக்கப்படும் குருபகவான் வாக்கிய பஞ்சாங்க கணித முறைப்படி இதே நாளான 2-8-2016 ஆடி மாதம் 18-ந் தேதி காலை 9.30 மணி அளவில் சூரியனின் ஆட்சி வீடாகிய சிம்ம ராசியில் இருந்து புதனின் ஆட்சி வீடாகிய கன்னி ராசிக்கு கன்னியா லக்னத்தில் பிரவேசித்து அருள்கிறார்.
இந்த குருப்பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிக்காரர்கள் நன்மையான பலனை பெறுவார்கள்.
மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு மற்றும் கும்பராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள். இந்த குருப்பெயர்ச்சியின் சிறப்பு அம்சமாக தட்சணாயனத்தின் அதி தேவதையாக சூரிய பகவான் விளங்குகிறார்.
சனிபகவான் தற்போது செவ்வாயின் வீடாகிய விருச்சிக ராசியில் இருந்து வருகிறார். குருபகவான் பிரவேசிக்கும் இந்த குருப்பெயர்ச்சி நன்னாள் மங்கலம் தரும் செவ்வாய்க்கிழமையில் வெற்றியை தரும் புதனின் ஓரையில் பூச நட்சத்திரம் கொண்ட சுபதினத்தில் பிரவேசிப்பது கூடுதல் சிறப்பாகும்.
பூச நட்சத்திரத்துக்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான் ஆவார். அதுபோல் இந்த குருப்பெயர்ச்சி நேரப்படி நவாம்ச ராசியாக இருப்பது சனிபகவானின் ராசியாகிய மகர ராசி ஆகும். பூச நட்சத்திரத்திற்குரிய விருட்சம் அரசமரமாகும். குருபகவானுக்குரிய சமித்து அரசு ஆகும்.
செவ்வாய்க்கிழமை என்பது அங்காரகனின் கிழமை ஆகும். இந்த குருப்பெயர்ச்சி நடைபெறும் செவ்வாய்க்கிழமைக்குரிய கிரகம் அங்காரகன் ஆகும். அங்காரகனும், குருவும் நட்பு கிரகங்கள். பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குருபகவான் ஆவார். பூச நட்சத்திரத்தின் யோகிணி சக்தி மாகேஸ்வரி தேவி ஆவார். சந்திர கிரகம் பூச நட்சத்திரத்தின் அதிபதி கிரகமாக விளங்குகிறது. பூச நட்சத்திரம் வந்தாலே அந்நாள் மேல்நோக்கு நாளாக அமையும். இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட நன்னாளாக அதிசய திருநாளாக இந்நாள் விளங்குகிறது.
இவ்வாறு சிறப்புகளை கொண்ட நன்னாளில் அதிகாலையில் எழுந்து காவிரியில் நீராடி ஆடி அமாவாசை பிதுர் கடன் முடித்து காவிரி நீரை வணங்கி, காவிரி பெருகும் வைபவத்தை கண்ணார கண்டு வரவேற்று, பின்னர் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் சமர்ப்பித்து, முல்லை மலர் மாலை சாற்றி, முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து, மஞ்சள் புஷ்பராக ரத்தினம் அணிவித்து, கொண்டை கடலை, பொடி சாதம், எலுமிச்சம்பழம் சாதம் நைவேத்தியம் செய்து, அரச சமித்து கொண்டு குரு சாந்தி ஹோமம் செய்து, அவருக்கு பிடித்த அடாணா ராகத்தில் கீர்த்தனைகள் பாடி, குருமந்திரங்களை ஜெபித்து, அன்னதானம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி வழிபடுதல் நன்மைகளை கொடுக்கும். இவற்றில் எது முடியுமோ அதை செய்து சுபகிரகமான குருவின் அருள் பெற்று பல்லாண்டு காலம் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், மன மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளோடு வாழ பிரார்த்தனை செய்வோம். நவக்கிரகத்தின் அருள்மழை கிட்டும் அற்புத திருநாளாக இந்நாள் அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''