தீபம்’ என்றால் ஒளி விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம்.
இந்த தீபாவளி திருநாளில் நமக்கு கிடைக்க முதற்காரணம் நரகாசுரன் தான். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் இந்நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இந்த நாள் தான் தீபாவளி…
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள். தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் கங்கா குளியல் செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர்.
தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்குமத்தில் கௌரியும், பூமாதேவியும், மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், நதிகள் ஏரிகள், குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளும் 'கங்கா தேவி' வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.
"அருள்மிகு திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'