Thursday, May 11, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி ! ! ! 10.05.2017


சிறப்பான வாழ்வு தரும் சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் சித்ரா பவுர்ணமி கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

வழிபாடுகளே நம் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடி பலன்களை வழங்கக்கூடியவை.

அப்படிப்பட்ட பலம் வாய்ந்த நாட்களில் தான் இயற்கையில் ஏராளமான மாற்றங்கள் நடைபெறும். கடல் தண்ணீர் மேல் எழும்பும். அலையடிக்கும் அந்த நாளில் விரதமிருந்தால் அலைபாயும் உள்ளங்களுக்கு அமைதி கிடைக்கும். அப்படிப்பட்ட நாட்களில் ஒன்றுதான் சித்ரா பவுர்ணமி. சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி என்பதால், ‘சித்ரா பவுர்ணமி’ என்று அழைக்கப்படுகிறது. இது பன்னிரண்டு மாதங்களில் வரும் பவுர்ணமியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சந்திரன் முழுமையடைகிறார். ராஜ கிரகங்களாக விளங்கும் சூரியனும், சந்திரனும் பலம்பெறுவதால் அந்த மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முன்னோர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து விழா எடுத்துள்ளனர். இந்த ஆண்டின் சித்ரா பவுர்ணமி 10-5-2017 அன்று (புதன்கிழமை) வருகிறது. மற்ற பவுர்ணமி நாட்களை விட, சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு மிகுந்தது. அன்றைய தினம் மலை வலம் வந்து முருகனை வழிபட்டால் மகத்தான வாழ்வு மலரும்.

சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தனையும் வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் ஆயுள் விருத்தியும், ஆதாயம் தரும் செல்வ விருத்தியும் உண்டாகும். நமது பாவ புண்ணியங்களைப் பதிவு செய்து வைக்கும், சித்ரகுப்தனுக்கு அவர் அவதரித்த நாளில் விழா எடுப்பது சிறப்புக்குரியதாகும். ‘நாம் மலையளவு செய்த பாவத்தைக் கடுகளவு ஆக்குக, கடுகு அளவாகச் செய்த புண்ணியத்தை மலையளவு ஆக்குக’ என்று வணங்க வேண்டும்.

சூரியனைப் பார்த்து கிழக்கு நோக்கிப் பொங்கல் வைத்து, சித்ரகுப்தனைச் சிந்தையில் நினைத்து வழிபட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பச்சரிசி கொழுக்கட்டை, இனிப்புப் பலகாரங்கள் போன்றவற்றை இலையில் பரப்பி வைத்து, பழங்களில் பலாச்சுளை, முழு நொங்கு, இளநீர், நீர்மோர், பானகம், திராட்சை, மாம்பழம் போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

அன்றைய தினம் வைக்கும் குழம்பில் கூட, தட்டைப்பயிறும், மாங்காயும் சேர்த்து வைப்பது வழக்கம். ஜவ்வரிசிப் பாயாசம் வைத்து அப்பளம் வைத்து, பூஜை அறையின் நடுவில் கோலமிட்டு, அதன் மேல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, சங்கு ஊதி வழிபடுவது அவசியமாகும். பவுர்ணமி விரதம் இருப்பவர்கள், விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு நிலவு பார்த்த பின் உணவு அருந்த வேண்டும்.

சித்ரகுப்தனுக்கு காஞ்சீபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலி லும் தனிச் சன்னிதி இருக்கிறது. இந்த ஆலயங்களுக்குச் சென்றும் சித்ர குப்தனை வழிபட்டு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம்.

மதுரையில் சித்ரா பவுர்ணமி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். சொக்கநாதப் பெருமான்- மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் வைபவத்தைக் காண, கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருள்வார்.

தேவேந்திரன் சொக்கநாதப் பெருமானை வழிபட்டு, பாவத்திற்கு பரிகாரம் தேடிக் கொண்டது சித்ரா பவுர்ணமியில் தான் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்திரனுக்கு இனிய வாழ்வு தந்த இந்தத் திருநாளில் நீங்களும் விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபட்டு உங்கள் வாழ்க்கையும் உன்னதமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளுங்கள்.

சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை, அவரது துதிபாடல்களைப் பாடி வழிபாடு செய்யுங்கள்.

சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அன்றைய தினம் மாலையில் சிவாலயம் சென்று சொக்கநாதர், மீனாட்சியம்மனை வழிபட்டு, இரவு நிலவு பார்த்தபின் உணவு அருந்துவது சிறப்பு தரும். மதிநிறைந்த நன்நாள் என்பதால், பவுர்ணமி தினத்தில் நேர்மறைச் சிந்தனையோடு செயல்படுவது நல்லது. நினைத்ததை நிறைவேற்றும் நாள் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 


சிவன் அருள் பெறுவோமாக " !!

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'