Saturday, May 27, 2017

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி 28.05.2017 பன்னிரண்டு ராசிகாரர்களும் வழிபடவேண்டிய விநாயகப்பெருமான் ! ! !


வரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் சிறப்பு இதோ.. 

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்

மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ தைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி.

மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண் திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி

கடகம்: பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

சிம்மம்: இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமை குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.

கன்னி: இயற்கையில் பெண்மை குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் மோகன கணபதி

துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தை செய்துமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சக்தி கணபதி

தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்குவழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.

மகரம்: சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆள கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.

கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் நீங்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்று வெளிக்காண்பிக்காமல் செயல்படுவீர்கள். அதேநேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

மீனம்: இயற்கையில் கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள் நீங்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள், தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.

"திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 


சிவன் அருள் பெறுவோமாக " !!

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'