Friday, August 4, 2017

திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருகும் வரலட்சுமி விரதம் ! ! ! 04.08.2017

லம் தரும் சொல் நாராயணா' என்பர். அதுபோல் மங்கலம் தரும் சொல் மகாலட்சுமி ஆகும். எங்கு மகாலட்சுமி இருக்கிறாளோ அந்த இடம் செல்வச் செழிப்பு பெறும். மகாலட்சுமியின் திருவருள் பார்வையில் படுவோர் அனைவரும் அனைத்து நலனும் பெற்றுச் சிறப்பாக வாழ்வார்கள். "அலைமகள்' என்று சொல்லப்படும் லட்சுமி தேவியைப் போற்றும் வகையில் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரதங்களில் முதன்மையானது வரலட்சுமி விரதம்.

இந்த விரதம் பொதுவாக ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று நோற்கப்படுகிறது. இவ்விரதத்தை நிறைந்த ஆயுளும், சௌபாக்கியமும், நீடிய செல்வமும், மணவாளனுக்கு ஏற்றமும் வேண்டி பெண்கள் மேற்கொள்கின்றனர். தேவக்கன்னிகைகள் இந்த விரதத்தை அனுஷ்டித்தனர் என்று பூராணம் கூறுகிறது.

மகாலட்சுமி தேவியே "சாருமதி' என்ற ஏழைப்பெண்ணின் கனவில் தோன்றி இந்த விரதத்தை மேற்கொள்ளுமாறு செய்து அளவற்ற நற்பயன்களை அருளிச் செய்தாள் என்றால் இதன் சிறப்புக்கு வேறு என்ன சான்று!

இந்த வரமளித்து வளம் காக்கும் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்கள், மாவிலை, தேங்காயுடன் அரிசிபோடப்பட்ட கலசத்தில் அம்மனின் முகம் என்று சொல்லப்படும் பிம்பத்தைப் பொருத்தவேண்டும். காதோலை, கருகமணி, பூக்கள், புத்தாடை, தாழம்பூ, ஜடை ஆகியவற்றால் அம்மனை அலங்கரிக்க வேண்டும். அம்மனது திருமுகம் பொருத்தப்பட்ட கலசத்தைப் பலகையில் இருக்கச் செய்து முறைப்படி பூஜைகள் நடத்த வேண்டும். நோன்புக்கு முதல்நாள் மாலையிலேயே இவ்வலங்காரங்களைச் செய்து கலசத்துடன் அம்மனை வீட்டிற்குள் ""லட்சுமி தாயே! என் வீட்டிற்கு எழுந்தருளுவாயே'' என்று பொருள்படும் கீர்த்தனங்களை பக்தியுடன் பாடி அழைத்து வருவது சம்பிரதாயம். 

மறுநாளாகிய நோன்பு நாளன்று செய்யப்படும் பூஜையில் முக்கியமானது ஒன்பது முடிச்சுப் போடப்பட்டிருக்கும் நோன்புச் சரடை (மஞ்சள் தடவிய நூல்) கலசத்தில் உள்ள அம்மனுக்குச் சாற்றி, அதற்கு விசேஷ அர்ச்சனைகள் செய்து, பூஜிப்பர். பின்னர், பெண்கள் தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வர். இந்தச் சரட்டை கணவர் கையில் அணிந்து கொள்வது மேலும் சிறப்பு. வீட்டைச் சுத்தப்படுத்துதல் போன்ற புறத்தூய்மையும் கொண்டு இந்த விரதத்தை மேற்கொண்டால் திருமகள் நிரந்தரமாக நமது இல்லத்தில் குடியிருப்பாள் என்பது நிதர்சனமான உண்மை.

நமது பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று. செல்வத்திற்கும் சகல சௌபாக்கியங்களுக்கும் அதிபதியாக விளங்கும் அன்னை லக்ஷ்மியை இன்று பூஜித்து நன்றி செலுத்தவேண்டிய நாள்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!


வரலக்ஷ்மி விரதம் பற்றிய சிறப்பு பதிவு – ஒரு கதையுடன் !

லட்சுமி பூஜை பற்றிய புராண கதை

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி. வரலட்சுமி விரதத்தின் அருமை பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள். வந்திருப்பது லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி, அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா.

லட்சுமிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாமானிய காரியம் அல்ல. அரண்மனையை தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு..? மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா. அந்த இடத்தை காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள். சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவிய தொடங்கியது.

பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அவள் அனுப்பி வைத்தாலும், அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது. அவர்களிடம் வந்ததுமே, ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா. வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள். தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா. வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி, ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றியவள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், பத்மாவதியாகவும், துளசியாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் அவரைக் கைப்பிடித்தாள். செல்வத்தின் அம்சமாக இருந்து, நம் பாவ, புண்ணியத்திற்கேற்பவும், விதிப்பலனுக்கேற்பவும் செல்வத்தை வழங்கும் அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமே வரலட்சுமி விரதம் ஆகும்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாக பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களையும் வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமைமிகுந்தவள். அதர்வண வேதத்தில் லட்சுமிதேவி அனைவருக்கும் நன்மையே செய்வாள் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் லட்சுமி தேவியால் பொறுத்துக் கொள்ள முடியாது. நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள். அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள், லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பர்.

விரத முறை: இந்த விரதம் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபத்தை எழுப்பவேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமி முகத்தை, தாழம்பூ சூட்டி ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கக்காசுகள் (முடியாவிட்டால் மஞ்சள் செவ்வந்தி) வைத்து சிலைக்கு புதிய மஞ்சள் நிற ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தில் சந்தனம் குங்குமம் இட வேண்டும். கும்பத்தின் மேல் மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். பின்பு ஐந்து வகை ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.

கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம் அல்லது ஒலிக்கச் செய்யலாம். அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். மஞ்சள் கயிறை வலதுகையில் கட்டவேண்டும். நைவேத்யமாக அம்மனுக்கு கொழுக் கட்டை படைக்கலாம். பூஜைக்குப் பின்பு கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மறுநாள் லட்சுமி உருவத்தை நீர் நிலையில் கரைத்துவிட வேண்டும். அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு போல இன்றும் தங்க நகைகள் வாங்க நல்ல நாள். இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'