Friday, September 22, 2017

திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் சக்தியும் சித்தியும் புத்தியும் தருகின்ற நவராத்திரி வழிபாடு 2017 ! ! !

சிவனுக்கு உகந்த ஒரு ராத்திரி, சிவராத்திரி. சக்திக்கு உகந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது. புரட்டாசி மாதத்தின் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழாவாகும்.

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா, வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேசுவரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமி தேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்மி, சாமுண்டியாகவும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதைஉண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. நவராத்திரி விழாவை வைணவர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்றன.

இந்தியா மட்டுமின்றி இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உலகில் உள்ள இந்து மக்கள் ஆகியோரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படு கிறது.

நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தார் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.

இந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.

இந்த “நவராத்திரி” விரத வழிபாட்டினால் நல்ல வாழ்க்கை அமையும். வெற்றியும், செல்வமும் வீடு தேடி வரும்.

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
இயற்றிய
சகலகலாவல்லி மாலை
கட்டளைக் கலித்துறை


வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்

கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10

ஓம் கம் கணபதயே நமஹ...!!

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'