Tuesday, February 27, 2018

மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் நாளும் துணையிருக்கும் ஆனந்தநடராஜருக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி மகா அபிஷேகம் !!! 28.02.2018


லயம், ஆன்மா லயித்துப் போகின்ற இடம். ஆலயங்களில் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஆன்மாவை லயிக்க செய்யும் இடமாக விளங்குகிறது. அதனாலேயே கோயிலுக்குச் சென்றால் ஒருவித அமைதி மனதில் ஏற்படுவதை உணரமுடிகிறது. எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை மனதால் ஸ்பரிசித்து, அவன் மேல் உள்ள அன்பைத் தூண்டி விடுவதற்காகவே உருவ வழிபாடு நமது சமயத்தில் வந்தது.

கருவறையில் காணப்படும் மூலவர் திருமேனி பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஈர்த்து அதை கோயில் முழுவதும் பரவச் செய்கிறது.

தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் செய்கையில் அனைத்து சக்திகளையும் கதிர்வீச்சுகளையும் சேமித்து நேர்மறையான சக்திகளை வெளியிடுகின்றன.

பலவகை அபிஷேகங்களில் அன்னாபிஷேகம், சங்காபிஷேகம் என்பவை சிறப்பு வாய்ந்தவை. எந்த வகை அபிஷேகமாயினும் ஒரு நாழிகை அதாவது 24 நிமிடங்கள் செய்ய வேண்டும். சில கோயில்களின் ஆகம விதிகளின்படி நேரங்கள் மாறுபடும். அபிஷேகத்தின்போது சொல்லப்படும் மந்திர சக்திகள் அதீத சக்திகளை வெளிப்படுத்துகின்றன.

ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஓர் ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகள் என இந்த ஆறுதினங்களிலும் அபிஷேகம் செய்யப்படும்.

இறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரி தாண்டவம், திரிபுர தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.

இலங்கை யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு பொற்சபை பொன்னம்பலத்தில் அருள்மிகு சிவகாமி அம்மையோடு ஸ்ரீமத் ஆனந்தநடராஐ மூர்த்தி ஆனந்த தாண்டவம் புரிகின்றார்.

திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக - தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர்.

திருநள்ளாறு தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்போல ஆடியதால், அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர்.

திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.

தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியோரை சிற்ப வடிவில் காணலாம்.
மடவார் விளாகம் நடராஜர்.

ஸ்ரீவில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.

மேலைச் சிதம்பரம்

பேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும். 

சிவபெருமான் 108 நடனங்களை ஆடியிருக்கிறார். இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு சேர்ந்து ஆடியவை 36. திருமாலுடன் ஆடியது 9. முருகப்பெருமானுடன் ஆடியது 3. தேவர்களுக்காக ஆடியது 12 ஆகும்.

ஐந்தெழுத்தாகிய நமசிவய என்பது வரிசைமாற்றத்தின்படி 120 வகைகளில் எழுதலாம். அந்த 120 வகைகளும் சிவனின் ஒவ்வொரு அங்கங்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது. உதாரணமாக, நயவமசி ・நாவின் அடிப்பகுதி, யவநமசி ・மூச்சு இப்படியாக 120 அங்கங்களின் சேர்க்கையாக நடராஜர் உருவம் அமைக்கப்படுகிறது.

நடராஜரின் பஞ்ச சபைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
ரத்தின சபை - திருவாலங்காடு
கனகசபை - சிதம்பரம்
ரஜதசபை - (வெள்ளி சபை) - மதுரை
தாமிரசபை - திருநெல்வேலி
சித்திரசபை - திருக்குற்றாலம் 
என்பவைகளே அவை.

மேலும் சிவதாண்டவங்களில் பஞ்ச தாண்டவங்கள் சிறப்புக்கு உரியது 
ஆனந்த தாண்டவம் - சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் - திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் - மதுரை
ஊர்த்துவ தாண்டவம் - அவிநாசி
பிரம்ம தாண்டவம் - திருமுருகன்பூண்டி என்பவையே அவை.

மாசி மாத வளர்பிறை சதுர்த்தசியான நாளை (28.02.2018) அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தினை காணப்பெறுவோம். ஆடல்வல்லானின் அருளைப்பெறுவோம்.


ஈசனடி போற்றி எந்தையடி போற்றி 
தேசன் அடி போற்றி, சிவன் சேவடி போற்றி !


ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'