பிரதோச வழிபாடு என்பது இந்துக்களால் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசி அன்று மாதம் இரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டின் கதாநாயகன் சிவபெருமான் ஆவார்.
சிவனை வழிபாடு செய்யும் முறைகளில் இவ்வழிபாட்டு முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதோச காலம் என்பது திரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலமாகும்.
பிரதோசம் என்பதை பிர + தோசம் எனப் பிரித்து பாவங்களை போக்க வல்லது என்று பொருள் கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் பாவங்கள் நீங்கி மேன்மை அடைவதாக மக்கள் கருதுகின்றனர்.
பிரதோச வழிபாடு தோன்றிய முறை
முன்னொரு சமயம் தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக மந்தாகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் வைத்து பாம்பின் தலைப் பக்கம் அசுரர்களும், வால் பக்கம் தேவர்களும் பிடித்து பாற்கடலை கடைந்தனர்.
அப்போது வலி தாங்காமல் வாசுகி பாம்பானது ஆலம் என்னும் விஷத்தைக் கக்கியது. அதே சமயம் பாற்கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் தோன்றியது. இவ்விரண்டும் சேர்ந்து ஆலாலம் விஷமாக மாறியது.
அது கண்டு தேவர்கள் அசுரர்கள் மற்றும் ஏனைய உயிரினங்கள் தங்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி சிவபெருமானை சரண் அடைந்தனர். சிவனும் உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு தனது அம்சமான சுந்தரரை அனுப்பி ஆலால விஷத்தை எடுத்து வரும்படி பணித்தார்.
சுந்தரரும் விஷத்தின் அருகில் சென்று அதனை உருட்டி சிவனிடத்தில் சேர்த்தார். சிவனும் அதனை விழுங்க முற்பட்டார். விசம் சிவத்தினுள் இறங்கினால் உலக உயிர்கள் அழிந்துவிடும் எனும் எண்ணத்தில் உமையம்மை சிவனின் கண்டத்தைப் பிடித்து விசத்தை உள்ளே இறங்க விடாமல் தடுத்தார்.
சிவனின் கண்டத்தில் இருந்த விசம் அதனை நீல நிறமாக மாற்றியது. இதனால் சிவன் திருநீலகண்டன் ஆனார். பின்னர் உலக உயிர்களுக்காக நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தார். சுந்தரர் ஆலால விசத்தை எடுத்து வந்து சிவனிடம் தந்து அவர் தனது கண்டத்தில் விசத்தை இருத்திய காலமே பிரதோச காலம் ஆனது.
பிரதோச வழிபாட்டு முறை
பிரதோச வழிபாட்டு முறையில் விரதமிருப்பது முக்கியமானது. முதன் முறையாக விரதமிருக்க ஆரம்பிப்பவர் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் வளர்பிறை சனிப் பிரதோசத்திலிருந்து தொடங்கலாம்.
பிரதோசத்தன்று அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளிர்ந்த நீரில் குளித்து சிவன் கோவிலிலோ அல்லது வீட்டிலோ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பகலில் இறைவன் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்கின்றனர்.
பகல் முழுவதும் உணவு உண்ணாமலும், சிலர் நீர் அருந்தாமலும் விரதத்தினை மேற்கொள்கின்றனர். பகலில் தூங்குவது தவிர்க்கப்படுகிறது. பின் மாலை பிரதோச வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகளில் கலந்து கொண்டு பின் இரவு வீடு திரும்பி குடும்பத்தினரோடு உணவருந்தி விரதத்தினை முடிக்கின்றனர்.
பிரதோச ஆலய வழிபாட்டு முறை:
பிரதோச நேரத்தில் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டின் போது சிவன் மற்றும் நந்திக்கு எண்ணெய், பால், நெய், தயிர், தேன், கரும்புச் சாறு, எலுமிச்சை, அரிசி மாவு, அன்னம் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யப்படுகிறது.
பின் தூய ஆடைகளை அணிவித்து வில்வம் மற்றும் பூக்களால் அர்ச்சித்து தீப தூபங்கள் காண்பிக்கப்படுகிறது. நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையே சிவனைப் பார்த்து வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே
"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'