Tuesday, September 11, 2018

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் விக்கினங்களை தீரக்கவல்ல ஆவணிமாத விநாயகர் சதுர்த்தி வழிபாடு ! ! ! 12.09.2018 சிறப்பு கட்டுரை


சைவ மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர்.

விநாயகர்’ என்றால் ‘மேலான தலைவர்’ என பொருள்..யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.
எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை. பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.
சுழி :
எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் – O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.
விநாயகர் வணக்கம் :
கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது.
புராண காலத்தில் ஒரு சமயம் அகத்தியர் பொதிகை மலை வந்து, தவத்திலிருக்க, உலக நன்மைக்காக விநாயகர் காக்கை வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தை உருட்ட, அந்தக் கமண்டலத்திலிருக்கும் நீர் பெருக்காக எடுத்து காவிரி ஆறாக பிரவாகித்தது. தவம் நீங்கிய அகத்தியர், கமண்டலத்தை உருட்டிய காகத்தைக்காண, அது ஒரு சிறுவன் வடிவாக நிற்க, கோபத்தில் அகத்தியர் அச்சிறுவனின் தலையில் குட்டினார். அதன் பின், கோபம் மறைந்து தனது ஞானக் கண் திறக்க அங்கே ஸ்ரீ விநாயகர் நிற்பதைக் கண்டு மனம் பதைத்து மன்றாடினார்.
தலையில் ஒரு முறை குட்டியதற்கு பிராயச்சித்தமாக தனது இரு கைகளாலும் குட்டிக்கொண்டு, நமஸ்காரம் செய்யும் பாவனையில் தனது இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு அமர்ந்து எழுந்தார். இச்செய்கையில் மனம் மகிழ்ந்த விநாயகர் அவருக்கு பல வரங்கள் தந்து அருளினார். இந்த புராண சம்பவத்தை மையமாகக் கொண்டே பிள்ளையார் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என்பது விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியமானதாகின்றது.
ஸ்ரீ கணபதி ஹோமம்:
பிள்ளையார் சுழி என்பது எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக அமைந்தது போல, யாகம் எனும் ஹோமம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முதலாக அமைவது ஸ்ரீ கணபதி ஹோமம் ஆகும். நாம் தொடங்கக் கூடிய அனைத்து காரியங்களையும் சுபமாக நிறைவேற்ற வல்லது, வாழ்வில் வசந்தத்தை அளிக்க வல்லது. ஆகையினால் தான் ஒரு புதிய தொழில் தொடங்கும்போதும், கிரஹப்ரவேசம் செய்யும்போதும், அந்த இடத்தில் லாபமும், செல்வமும் அதிகரிக்க கணபதி ஹோமம் செய்கிறோம்
பிள்ளையாரின் அவதார சரிதம் :
ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச் செல்வதற்கு எண்ணினார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் சமைத்துத் தமது அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்றுவிட்டார்.
அச்சமயத்தில் மீண்டுவந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவபிரான் பிள்ளையாரின் சிரத்தை அரிந்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து, பிள்ளையார் சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.
காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து ‘வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பணிப்பின் பிரகாரம் கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார்.இது நடந்தது ஆவணி மாதத்து சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும். அன்றிலிருந்து அந்த தினம் இந்து மதத்தின் உயர்வான ஒரு புனித தினமாக ஆகிவிட்டது
விநாயக விரதங்கள்.
ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் இருக்கிறது. சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கொண்டாடுகின்றனர்.
மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தி ‘சங்கடஹர சதுர்த்தி’ ஆகும் . விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர். ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை.
எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான ‘தேவி’ விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.
விநாயகரின் எல்லா விரத நாட்களையும் எல்லோரும் அனுஷ்டிப்பதில்லை. சிலர் வைதீகச் சைவ மக்கள் மாத்திரமே சதுர்த்தி விரதங்கள் இருபத்தி நான்கையும் கைக்கொள்வதுண்டு. சிலர் ஆவணி மாதச் சதுர்த்தி விரதங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பதுண்டு. இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர். அத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியையும் நோன்பு தினமாகக் கைக்கொள்வர். சிலர் கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பூர்வபட்ச ஷஷ்டிவரை . அதை விநாயக சஷ்டி என்று காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர்.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார். அதில் ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைம் ஏற்றுக் கொள்கிறார் . தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!

எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் 
வேறொன்று அறியேன் பராபரமே

"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'