புரட்டாதிச் சனி விரதம்” என அழைக்கப்படுவது புரட்டாதி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதமாகும்.
சனீஸ்வரன் கோசாரமாக சஞ்சரிக்கும் போது (தற்போதைய கிரக சஞ்சாரத்தில்) ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் (சந்திர) இராசிக்கு 5 வது இராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சம சனியென்றும்; 8 வது ராசியில் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும்; 12 வது இராசியிலும், சந்திர இராசியிலும், சந்திரனுக்கு 2 வது இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் இவ் மூன்று ராசிகளையும் கடக்க எடுக்கும் காலம் ஏழரை ஆண்டுகள் ஆகின்றன. அதனால் ஏழரைச் சனியென்று கூறுவர்.
சனீஸ்வரர் சூரிய பகவானுக்கும் சாயா தேவிக்கும் புரட்டாதி மாத முதல் சனிக்கிழமை பிறந்தவர். இவர் மந்தகதி உடையவர். சனீஸ்வரர் ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடங்கள் ஆகின்றன. ஆகவே ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு முப்பது ஆண்டுகளுக்கு ஒரு தடவை இத் தோஷங்கள் சுழற்சியாக ஏற்படுகின்றன. அதனால் போலும் 30 வருடங்களுக்கு மேல் கஷ்டமாக வாழ்ந்தவர்களும் இல்லை சிறப்பாக வாழ்ந்தவர்களும் இல்லை என்ற முதுமொழி பிறந்தது.
வாழ்க்கையில் முதலில் வரும் ஏழரைச் சனி காலத்தை மங்கு சனி என்றும், இரண்டாவதாக வருவதை பொங்கு சனி என்றும், மூன்றாவதாக வருவதை மரணச் சனி என்றும் அழைப்பர். இக்காலங்க்களில் பெயருக்கு ஏற்றாற்போல் மற்றைய கிரகங்க்களின் நிலைகளைப் பொறுத்து பலங்கள் கிடைக்கும் என்கின்றது ஜோதிடம்.
இத் சனிதோஷ காலங்களில்; புத்திர பாக்கியக் குறைவு, மரண பயம், அதிக பிரயாணம், அதிக செலவு, பண நஷ்டம், தேகசுகக் குறைவு, வீண் சச்சரவு என்பன உண்டாம். இவை யாவும் சனிதோஷத்தினால் ஏற்படுபவை என ஜோதிடத்தில் கூறப்பெற்றுள்ளது. இத் தோஷத்தினால் பீடிக்கப் பெற்றவர்கள் தோஷ நிவர்த்தி செய்வதால் சனீஸ்வரன் மகிழ்வுற்று தாக்கங்கள் குறைவடைந்து நன்மைகள் ஏற்படுவதாக ஐதீகம் இவற்றுள் ஏழரைச் சனிகாலம் மிகவும் கஷ்டமான காலமாகஜோதிடம் கணிக்கின்றது.
இதிகாக புராணங்களில்:-
அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.
“சனீஸ்வரனைப் போல் கொடுப்பாரும் இல்லை,
கெடுப்பாரும் இல்லை”
என்பது சோதிடப் பழமொழி. அதனால் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. இவ் இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது பல கஸ்டங்களையும் நஸ்டங்களையுந் தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன் இவ் இராசிகளைக் கடந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில் கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.
விரத அனுட்டான முறைகள்:-
சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாதி மாசத்து சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணைய் வைத்து ஸ்நானம் செய்து ஆலயம் சென்று கறுப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டளமாகக் கட்டி எள்ளெண்ணை (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும். அதன் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும்.
வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்க வேண்டும். சனீஸ்வரனின் வாகனமாக காகம் அமைவதால் உணவருந்து முன் காகங்களுக்கு உணவு படைத்தபின்பே தாம் உணவருந்துவர். மற்றைய விரதங்களின் போது எண்ணை வைத்து தோயும் வழக்கம் இல்லை. ஆனால் சனிக்கிழமை-சநீஸ்வரனுடைய விரதத்திற்கு மாத்திரம் எண்ணை வைத்துத் தோயும் முறை கடைப்பிடிக்கப் பெறுகின்றது.
அவரவர் வினைக்கேற்ப பலன்களை வழங்குவதில் சனீஸ்வரன் நீதி தவறாதவர். இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்திரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கும். புரட்டாதிமாத முதற்சனி வாரத்தன்று சூரியன் மனைவியான சாயாதேவி மூலம் சனிபகவான் தோன்றினார். சாவர்ணிமனுவும்இ பத்திரை என்ற பெண்ணும் இவருக்கு உடன்பிறப்புக்கள். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாதிச் சனிக்கிழமைகளில் விரதமிருக்கலாம். சனிக்கு அதிபதி மகாவிஷ்ணு. அதனால் சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும்.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்று அறியேன் பராபரமே
"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு"
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'