Wednesday, February 20, 2019

யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் பித்ரு தோஷம் போக்கி வாழ்வை வளமாக்கும் மாசி மகம் வழிபாடு !!! 19.02.2019


மாசி மகத்தை ‘கடலாடும் நாள்’ என்று இலக்கியங்களும் ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் சாஸ்திரங்களும் போற்றுகின்றன. `அன்றைய தினம் விரதமிருந்து, நீராடி இறைவனை வழிபட்டால் மறுபிறப்பு கிடையாது' என்கின்றன புராணங்கள்.

எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்துக்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு. மாசி மகத்தை ‘கடலாடும் நாள்’ என்று இலக்கியங்களும் ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் சாஸ்திரங்களும் போற்றுகின்றன. `அன்றைய தினம் விரதமிருந்து, நீராடி இறைவனை வழிபட்டால் மறுபிறப்புக் கிடையாது’ என்கின்றன புராணங்கள். மாதங்களில் மகத்துவம் நிறைந்தது மாசி மாதம். மாசி மாதத்தில் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது இரட்டிப்பாகும். மாசி மகத் தீர்த்தவாரியின்போது நீர்நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை. மாசிமக வழிபாடு சிறப்பானது.

இன்று மாசி மகம் (19.2.2019). மாசி மகத்தின் மகத்துவத்தைப் பற்றியும் எப்போது, யார் யார் நீராட வேண்டும் என்றும் விளக்குகிறார் பாண்டிச்சேரி ஜி.கே.முத்து குருக்கள். 

“மூர்க்க வர்மன் எனும் அசுரன் போரிட்டு அனைவரையும் அழித்துக்கொண்டிருந்தான். எங்காவது சண்டையோ அல்லது இரைச்சலோ ஏற்பட்டால்கூட மூர்க்க வர்மன்தான் வருகிறான் என்று நினைக்கும் அளவுக்குத் தேவர்கள் மற்றும் ரிஷிகள் அனைவரும் அச்சம் கொண்டனர். இந்த நிலையில் வருணனுடைய குருவான சாந்தயோகி வருணனைப் பார்க்க வந்தார். அவர் நடந்து வந்தபோது எழுந்த சத்தத்தைக் கேட்டதும் பயந்துபோன வருணன் மூர்க்கவர்மன்தான் தன்னைத் தாக்க வருகிறான் என்று நினைத்து, சப்தபேரிகை எனும் பாணத்தைத் தொடுத்துவிட்டான்.

இந்த சப்த பேரிகையின் சிறப்பு என்னவென்றால் எங்கு சத்தம் எழுகிறதோ, அதை நோக்கிச் சென்று தாக்கும் வல்லமை படைத்தது. சத்தம் எழுந்த இடத்தை நோக்கித் துல்லியமாகப் பாய்ந்த சப்தபேரிகை சாந்தயோகியைத் தாக்கியது. சாந்தயோகி, ‘குருவான என் மீதே பாணத்தைப் போட்டதனால், நீ சமுத்திரத்தில் விழுந்து கட்டுண்டு கிடப்பாயாக’ என்று சாபமிட்டார். அதன் பிறகு, சாந்தயோகி இறந்துபோனார். வருணனும் சமுத்திரத்தில் கட்டுண்டு விழுந்தான். வருணபகவான்தான் மழை மற்றும் நீர்நிலைகளுக்கு அதிபதி. அஷ்டதிக் பாலகர்களுள் ஒருவன். 

உலகின் நிலையான இயக்கத்தில் அஷ்டதிக் பாலகர்களின் பங்கு முக்கியமானது. இவர்களில் வருணன் சமுத்திரத்துக்குள் கட்டுண்டு கிடந்ததால் உலகின் சமநிலை பாதிக்கப்பட்டு, இயக்கம் தடைப்பட்டது. மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்தார்கள். இதனால் சிவபெருமான் ‘அஸ்திரதேவர்’ எனும் பாணத்தை ஏவி வருணனின் கட்டை அவிழ்த்து, சாபவிமோசனம் அளித்தார். அதன் பிறகு மழை பெய்து நீர்நிலைகளெல்லாம் நிரம்பி மக்கள் வளமாக வாழ்ந்தார்கள். 

இதுதான், மாசிமகம் தோன்றியதற்கான புராணக்கதை. கோயில் தீர்த்தவாரியின்போது கோயில் குருக்கள் கையில் சூலம் (இதை அஸ்திர தேவர் என்று கூறுவர்) ஒன்றை வைத்துக்கொண்டு நீராடுவார்கள். வருணபகவானின் கட்டு அவிழ்ந்து விடுபட்ட தினத்தில் நாமும் நீர் நிலைகளில் நீராடி வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.

ஜாதகத்தில் 5, 9-ம் ஸ்தானங்களில் பாவ கிரகங்கள் இருந்தால் அவர்களுக்குப் பித்ரு தோஷங்கள் இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்தப் பித்ரு தோஷங்கள் பலவித தடைகளை உருவாக்கும். பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும்.

மாசிமகமானது சதுர்த்தசி பிரதானம், நட்சத்திரப் பிரதானம், பௌர்ணமி பிரதானம் என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் நீராடி வழிபடுவது கூடுதல் பலனை அளிக்கும். வருணனின் சாபக்கட்டை சிவபெருமான் அவிழ்த்துக் காத்ததால் இன்று நீராடி, சிவபெருமானை வணங்கினால் அருமையான பலன்கள் கிட்டும். குறிப்பாக, சிம்ம ராசிக்காரர்களும் மகம் நட்சத்திரத்துக்கு உரியவர்களும் நீராடி சிவபெருமானை வழிபடுதல் நல்லது” என்றார்.

சிவபெருமான் வருணனைக் காத்த இந்தப் புண்ணிய தினத்தில்தான் பல்வேறு அதிசயங்களும் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன...
உமாதேவியார் மாசிமகத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தாள்.
பெண்கள் விரதமிருந்து வழிபட வேண்டிய தினமாகவும் மாசிமகம் போற்றப்படுகிறது.
பாதாளத்தில் இருந்த பூமியைப் பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளும் மாசிமக நாள்தான்.
முருகப்பெருமான் தன் தந்தைக்கே குருவாக இருந்து மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான்.
மாசி மகத்தன்றுதான் காமதகன விழா கொண்டாடப்படுகிறது.


பித்ரு பூஜை

மாசிமகத் தினத்தன்று நதிகளில் நீராடுவதை ‘பிதுர்மஹா ஸ்நானம்’ என்றும் கூறுவார்கள். மக நட்சத்திரத்துக்கு ‘பித்ருதேவா நட்சத்திரம்’ என்ற பெயரும் உண்டு. இந்தப் பித்ருதேவா தான் முன்னோர்களுக்கு ஆன்ம சாந்தியை அளிப்பவர். முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்குமென்பது நம்பிக்கை. மற்ற தினங்களில் பித்ருக்களை வழிபடாவிட்டாலும், மாசிமகத்தின் போது நீராடி பித்ருக்களை வணங்கினால் முன்னோர்கள் ஆத்ம சாந்தி பெற்று, நமக்கும் நம் சந்ததியினருக்கும் அருள்புரிவார்கள்.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... ! 
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'