முதன்மைக் கடவுளான விநாயகரின் உண்மையான பெயர் தான் பிள்ளையார். அதன் பின்னர் வந்தது தான் விநாயகர், கணபதி, கணேஷ், விக்னேஷ்வரன், ஆனைமுகத்தோன் போன்ற பெயர்கள் எல்லாம். சரி, பிள்ளையார் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஆனால் பலருக்கு விநாயகர் எப்படி உருவாக்கப்பட்டார், எப்படி பிள்ளையார் என்ற பெயர் வந்தது என்ற உண்மையான கதை தெரியாது. குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது பார்வதி தேவி எப்படி விநாயகரை பெற்றெடுத்தார் என்றும், பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்தது என்றும் பார்ப்போம்.
ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார்.
அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார்.
அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சிறுவன் பார்வதியின் மகன் என்று.
இதனால் அச்சமுற்ற சிவபெருமான், பார்வதி குளித்து வருவதற்கு முன்னர், தனது பூதகணங்களை அழைத்து, பூவுலகில் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து வருமாறு கட்டளையிட்டார். சிவபெருமானின் கட்டளைக்கேற்ப, பூதகணங்களும் முதலில் ஒரு யானையை பார்த்தார்கள். பின் அந்த யானையின் தலையை துண்டித்து கொண்டு சென்றார்கள்.
பின்பு சிவபெருமான் அந்த யானையின் தலையை அச்சிறுவனுக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். அந்நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்த பார்வதி, யானை தலையுடன் கூடிய அச்சிறுவனைப் பார்த்து, இந்த பிள்ளை யார்? என்று கேட்டார்.
அப்படி பார்வதி கேட்ட கேள்வியை தான், சிவபெருமான் பார்வதியின் மகனுக்கு பிள்ளையார் என்ற பெயரைச் சூட்டி, குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் வந்த பெயர்கள் தான் விநாயகர், கணபதி, விக்னேஷ்வரன் போன்றவைகள்.
இந்த கதையின் காரணமாகவும், விநாயகர் சதுர்த்தி என்னும் பண்டிகை கொண்டாடப்படுவதாவும் நம்பிக்கை உள்ளது.