Thursday, October 3, 2013

நவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.

அம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.
  முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகி தமோ குண சஞ்சாரியாநன ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாகவும், ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாகவும், சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியாகவும், மூன்று அம்சமாக எமக்கு தோற்றமளிப்பதுடன் அந்த மூன்று அம்சங்களும் மேலும் பல அம்சங்களாக தோற்றமளிக்கின்றன.


துர்க்கையின் அம்சங்களாக (நவதுர்க்கை): வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை ஆகியனவும்;

இலக்குமியின் அமசங்களாக (அஷ்ட இலட்சுமி): ஆதி லட்சுமிமாக இலட்சுமிதன இலட்சுமிதானிய இலட்சுமிசந்தான இலட்சுமிவீர இலட்சுமிவிஜய இலட்சுமிகஜ இலட்சுமி ஆகிய சக்தி அம்சங்களாக எமக்கு தோற்றமளிக்கின்றன.



சரஸ்வதி அம்சங்களாகளாக (அஷ்ட சரஸ்வதி): வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகியனவும்;


நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும்.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்வேண்டியும், கடைசி மூன்று நாள்கள்சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்)என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.
இப் புண்ணியகாலமானது ஒன்பது தினங்களைக் கொண்டது. அதனாலேயே நவராத்திரி என்னும் நாமம் பெற்று விளங்குகின்றது, அந்த ஒன்பது நாட்களிலும் லோகமாதாவாகிய பராசக்தியை (அம்பிகையை) ஒன்பது வடிவங்களில் பூஜிக்கப்பெறுகின்றாள்.
அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் துதித்து வழிபட்டு. இவ் உலக வாழ்கை சிறப்பாக அமைய முக்கியமான கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) எம்பவற்றை இறைவியிடம் வேண்டி  இந்துக்கள் இப் புனித நவராத்திரி விழாவை விரதம் அனுஷ்டித்து கொண்டாடுகின்றனர்ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும்.
அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டுமாயின். அவற்றை அருளும் நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட கடப்பிடிக்கப் பட வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன. வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம், பொருள் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம்பெற்ற பணத்தை பாதுகாக்க மன வலிமை வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களிற்கு பயன் படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரசுவதித் தாயை வணங்குகிறோம்.

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய, முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியாகிய அம்பிகையை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியாக வெற்றியையும் (வீரத்தையும், தைரியத்தையும் ஒருநாளும் தளர்வு அறியா மனம்வேண்டியும், அடுத்த மூன்று நாள்கள் ராஜோ குண சொரூபியான ஸ்ரீ மகாலட்சுமியாக சகல செல்வங்களையும் (தனம்) வேண்டியும், கடைசி மூன்று நாள்கள் சாத்வீகக் குண சொரூபியான ஸ்ரீ சரஸ்வதிதேவியாக கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) என்பவற்றை வேண்டியும் வணங்குகின்றோம்.
நவராத்திரி வரலாறு:-
தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கும் நவராத்திரி விரதம் உருவானதற்கான புராணக் கதை.
சும்பன்இ நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.
மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.

தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்என்றாள். அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை.
பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள். இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.
அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றினான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற  காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விடுகிறான்.
இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள்
இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டியே நடைபெறுகின்றன.
மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர். இத் தேவியரை நவராத்திரி காலத்தில் மனமாரத் தியானித்து நாவாரப்பாடி, உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பெற்று உய்வோமாக.