Tuesday, October 15, 2013

திருவெண்காட்டில் கேதார கெளரி விரதம்..

கேதார கெளரி விரதம் உருவான கதை.
உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய அருட்சக்தியான எழில் மிகு அம்பிகை உமையவளைக் குறித்து அனுட்டிக்கப்படுகின்ற மகிமையும் மகோன்னதமும் மிக்க விரதம்கேதார  கெளரி விரதமாகும்



உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய அருட்சக்தியான எழில் மிகு அம்பிகை உமையவளைக் குறித்து அனுட்டிக்கப்படுகின்ற மகிமையும் மகோன்னதமும் மிக்க விரதம்கேதார  கெளரி விரதமாகும். இது மிகவும் பக்திபூர்வமாக அனுட்டிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்புமிக்க நன்மை பயக்கும் விரதமாகும்.

இந்த விரதம் அனுட்டிக்க விரும்புவோர் இருபத்தொரு நாள் உபவாசமிருந்து உமையம்மையை நினைந்து வணங்குவதோடு சிவபெருமானையும், சேர்த்து வழிபாடியற்றுதல் வேண்டும். இவ்விரதம் புரட்டாதி மாதத்தில் சுக்கில பட்சத்து தசமி முதலாக ஆரம்பமாகி தீபாவளிப் பண்டிகை நாளில் பூர்த்தியாகும்.

இருபத்தொரு நாள் உபவாசமென்றால் சாப்பாடு இல்லாமலே இருத்தல் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அதாவது பகலிலே சாப்பிடாமலிருந்து தினமும் அந்திப் பொழுதில் பூஜை வழிபாடு ஆராதனைகளை முடித்துக் கொண்டு இறைவன் இறைவிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள்களை மட்டும் உட்கொண்டு விட்டு தண்ணீர் அருந்துவது விசேஷம்.
முடியுமாயின் தினமும் அதாவது ஒவ்வொரு நாளும் இறைவனுக்கும் இறைவிக்கும் மஞ்சள் உருண்டை, எள்ளுருண்டை, அரியதரம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை வகைக்கு ஒவ்வொன்றாகப் படைத்து குத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி பக்திப் பனுவல்களைப் பாராயணஞ் செய்தல் வேண்டும்.

இந்த விரதமிருப்பவர்கள் தினமும் காலை எழுந்து புனித புண்ணிய நீராடித் தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து சந்தியாவந்தனம் முடித்து வீட்டிலோ அல்லது ஓர் ஆலயத்திலோ இருபத்தொரு இழைகள் கொண்ட நூலைக் கும்பத்திலோ அன்றி லிங்கத்திலோ சாத்தி பூஜை வழிபாடு ஆராதனையின் பின்பு பூவும் நீரும் கொண்டு வலம் வந்து மிக்க பயபக்தியுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுப் போடுதல் வேண்டும். இது மிகவும் பக்குவமாகப் பக்தியுடன் செய்யப்பட வேண்டும்.

இறுதியாக இருபத்தோராம் நாள் காப்பு நூல் கட்டும் போது முதல் வருடம் கையிற் கட்டியிருந்த காப்பை நீக்கிவிட்டு புதுக்காப்பைக் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். கடந்த வருடம் கட்டிய காப்பு நூலையும் பூஜித்த லிங்கத்தையும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இவ்விரதத்தை தொடர்ந்து 21 வருடம் அனுட்டிக்க வேண்டும். அதுவே ஆன்ம ஈடேற்றம் தரவல்லது.


விரதங்களிலே சிறப்பான இடத்தினைப் பெறும் விரதம் கேதார கெளரி விரதம். திருக்கைலாய மலையிலே பரமசிவன், பார்வதி சமேதராக வீற்றிருந்த வேளை. விநாயகனும் முருகனும்கூட இருந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் கூடியிருந்தனர். நாரதர் இசை மீட்டினார். நந்தி மத்தளம் கொட்ட, ஊர்வசி, மேனகை, திலோத்தமை ஆகியோரின் நடனம் அமர்க்களமாக நடந்தேறியது.
அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் விகடக்கூத்து ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தார். பிறகு உமாதேவியை விட்டுவிட்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கினர். கோபமுற்ற உமாதேவி தன்னை பிருங்கி முனிவரின் உடலிலிருந்த சக்தியை எடுத்துக் கொண்டார். அதனால் சபையிலே சோர்ந்து வீழ்ந்தார் அம்முனிவர். சிவபெருமான் பிருங்கி முனிவரிடம் தடியொன்றைக் கொடுத்து அதனை ஊன்றுகோலாகக் கொண்டு நடக்க வழி செய்தார். மீண்டும் உமாதேவிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே சிவபெருமானிடம் கோபித்துக்கொண்டு பூவுலகுக்கு வந்து, ஒரு வில்வ மரத்தடியில் வீற்றிருந்தார். தேவியின் வருகையால் அந்த வனமே புதுப்பொலிவு பெற்றது. அங்கு வசித்த கௌதம முனிவர் இத்திடீர் மாற்றம் ஏன் அறிய முனைந்தார். உமாதேவியைக் கண்டவுடன் விஷயமங்களைத் தெரிந்து கொண்டார்.

புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் தீபாவளி அமாவாசை வரையுள்ள கேதரேசுரர் விரத மகிமை பற்றி விளக்கினார். உமை அம்மையும் விரதம் மேற்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் வடிவமானார்.
ஆண்-பெண் சமத்துவம் அறியப்படாத காலத்தில் உமாதேவி பெண்ணுக்கு சம உரிமை கேட்டு வாதாடி அவ்வுரிமையை பெற்றுத்தந்திருக்கிறார். ஆணின் உடலின் பாதியும் பெண்ணின் உடலின் பாதியும் அறுவைசிகிச்சை வாயிலாகப் பொருத்தலாம் என்ற நவீன விஞ்ஞான விந்தையும் இந்நிகழ்வு காட்டுகிறது. எதிர்காலத்தில் விஞ்ஞானத்தில் ரோபோக்களைப்போல அர்த்தநாரீஸ்வரர்கள் உருவாக்கப்பட்டால் ஆச்சர்யமேதுமில்லை!
கேதார கெளரி விரதம் 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது.
·         வீட்டில் / பூஜையறையில் / வில்வ மரத்தடியில் / ஆலயங்களில் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.
· எள்ளுருண்டை, மஞ்சளுருண்டை, அதிரசம், வாழைப்பழம், தேங்காய், பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை நிவேதனமாக்கி, ஒருவேளை உணவாக உண்டு 20 நாள் நோன்பிருப்பது பழங்கால வழக்கம்.
· 21 நாட்களும் விரதம் மேற்கொள்ள முடியாரதோர் 9 அல்லது 7 அல்லது குறைந்தபட்சம் 3 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கலாம்.
· கெளரி கேதார விரதத்தை 21 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும் என்பது சாஸ்திரம். இயலாதோர் ஏழு ஆண்டுகளாவது கடைபிடிக்க வேண்டும்.
· கெளரி கேதார விரதம் கடைபிடிப்பதால் அருளும் பொருளும் சேரும், அன்பு, அடக்கம், அமைதி உண்டாகும் மரணத்தையும் துச்சமாக மதிக்கின்ற சக்தி சேரும்.
கல்வியறிவு, பதவி பட்டம், பரிசு, பதக்கம் என பல வளமும் சேரும். வெற்றிகள் தொடரும். குழந்தை பாக்யம் உண்டாகும். மனை, வீடு, வாகனம் வந்து சேரும்.
சக்தியெனும் உமையாள் நமக்குக் காட்டிய வழியில் கெளரி கேதார விரதம் இருந்து வளமான வாழ்வு பெறுவோமாக!