Sunday, November 24, 2013

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி வணங்கும் திருவருள்மிகு திருவெண்காடு சித்தி விநாயகர்

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி வணங்கும் தெய்வம் விநாயகர். எந்த நல்ல காரியத்தையும் விநாயகரை வணங்கியபின் தொடங்கினால்தான்அக்காரியம் விக்னமின்றி நல்ல முறை யில் நடக்கும். தேவர்களும் வணங்கும் தெய்வம் இவர். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திதான் விநாயகரின் அவதார தினமாகும்.

நம் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நமது வினைகள். இந்த வினைப் பயனைத் தீர்ப்பவர்தான் மகாகணபதி. இவர் 18 கணங்களுக்கும் அதிபதி. இவரை மனதால் நினைக்க, வாக்கினால் பாட, உடம்பால் வணங்க வினைகள் யாவும் தீரும். கருணை புரிவதில் இவர் இணையற்றவர். மிகவும் எளிமையானவர். அதிக செலவும் அதிக சிரமமுமின்றி எளிமையாக வணங்கி மிகுந்த பலனடையலாம்.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். இந்தியாவில் சிறு கோவில்கூட இல்லாத கிராமத்தைக் காணமுடியாது. ஈடிணையற்ற தெய்வங் களான ஈசன், பெருமாள் இவர்களுக்கு எல்லா இடங்க ளிலும் கோவில் அமைத்துவிட முடியாது. ஆனால் பிள்ளையார் விஷயம் அப்படியல்ல.
தெருக்கோடி, முச்சந்தி, மரத்தடி, குளக்கரை- ஏன் வீட்டில் விளக்கு மாடம் போன்ற சிறு இடத்திலேயேகூட பிள்ளையாரை நிறுவி வழிபடலாம். இதுவன்றி பசுஞ்சாணம், மஞ்சள் பொடி யில்கூட பிள்ளையாரை உருவாக்கிவிடலாம். பிடித்து வைத்தால் பிள்ளையார் தான்.

திதிக்குரிய கணபதிகள்
பொதுவாக விநாயக ருக்கு சதுர்த்தி திதிதான் உகந்தது. என்றாலும் திதி ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய கணபதிகள் உள்ளனர். அந்தந்த நாளுக்குரிய கணபதியை வழிபடுவ தால் சிறந்த நற்பயன்கள் பெறலாம்.
பிரதமை- பால கணபதி, துவிதியை- தருண கணபதி, திரிதியை- பக்தி கணபதி, சதுர்த்தி- வீர கணபதி, பஞ்சமி- சக்தி கணபதி, சஷ்டி- துவிஜ கணபதி, சப்தமி- சித்தி கணபதி, அஷ்டமி- உச்சிஷ்ட கணபதி, நவமி- விக்ன கணபதி, தசமி- க்ஷிப்ர கணபதி, ஏகாதசி- ஹேரம்ப கணபதி, துவாதசி- லட்சுமி கணபதி, திரயோதசி- மகா கணபதி, சதுர்த்தசி- விஜய கணபதி, அமாவாசை, பவுர்ணமி- நித்ய கணபதி. ஒவ்வொரு நாளிலும் அந்தந்த திதிக்குரிய கணபதியின் நாமத்தை 21 முறையோ, 108 முறையோ ஜெபித்து பக்தியுடன் வழிபட் டால் விக்னங்கள் யாவும் விலகி, சகல வளங்களும் கைகூடும்.
நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் விநாயகரைப் போற்று கின்றன. மனிதர்கள் மட்டுமல்ல; தேவர்களும் இவரை வழிபட்ட  பின்பே எச்செயலையும் தொடங்குவார்கள்.
தேவர்கள் பாற்கடல் கடையும்போது கணபதியை வணங்காமல் செய்ததால் முதலில் வெளிப்பட்டது ஆலகால விஷம். அதன்பின் தவறை உணர்ந்த தேவர்கள் உடனடியாக அங்குள்ள கடல் நுரையால் விநாயகர் உருவம் செய்து வணங்கியபின் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றனர். கடல் நுரை விநாயகரை திருவலஞ்சுழி தலத்தில் காணலாம்.
சிவபெருமான் திரிபுரம் எரிக்க தேரில் விரைவாகச் சென்றார். வழியில் தேரின் அச்சு முறிந்தது. கணபதியை வழிபடாததால்தான் இப்படியானது என்று, கணபதி வழிபாடு செய்து அதன்பின் திரிபுரத்தை எரித்து முடித்தார் சிவன். அச்சு முறிந்த இடம்தான் சென்னை அருகே யுள்ள அச்சிறுபாக்கம்.
பஞ்சபூத விநாயகர்கள்
திருவண்ணாமலை விநாயகர் நெருப்பையும்; திருவானைக்கா விநாயகர் நீரையும்; சிதம்பரத்திலுள்ள விநாயகர் ஆகாயத்தையும்; திருக்காளத்தி விநாயகர் வாயுவையும்; காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலய விநாயகர் நிலத்தையும் குறிக்கின்றனர். இவர்களை வணங்கினால் பஞ்சபூதங்களால் ஏற்படும் அல்லல் நீங்கும் என்பர்.

தேசிய விழா
ஆதிகாலம் முதலே விநாயகர் சதுர்த்தி விழா இருந்து வந்தாலும், அதை மக்கள் அனைவரும் கொண்டாடும் தேசிய விழா வாகப் பிரபலப்படுத்தியவர் தேசபக்தரும், தியாகியுமான பால கங்காதர திலகர்தான். 1893-ல் விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் விழாவாகக் கொண்டாட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பூனாவில் உள்ள தகடுசேத் கணபதி கோவிலில் தான் முதன்முதலில் விநாயகர் சதுர்த்தி விழாவை தேசிய விழாவாகக் கொண்டாடினர். இவ்விழா பத்து நாட்கள் நடந்தன.  இதையே ஆண்டுதோறும் பற்பல இடங் களில் பொதுவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

கணபதி பட்டம்
ஒருசமயம் சிவனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. திருக் கயிலாயத்தில் தன்னை வணங்கி வழிபடும் கணங்கள் அனைத் திற்கும் அதிபதியாக தன் பிள்ளை கள் இருவரில் ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். யாரை நியமிப்பது என்று யோசித்த வர், முன்பு செய்த ஞானப்பழ திருவிளையாடல் போல் மற்றுமோர் திருவிளையாடலை நடத்த திட்டமிட்டார்.
மகன்கள் இருவரையும் அழைத்து, “”யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறாரோ அவரே கணங்களின் தலைவர்” எனக் கூறினார். ஏற்கெனவே ஏமாந்த கந்தன் இம்முறை உடனே தாய்- தந்தையரை சுற்றிவர ஆரம்பித்தார்.
பிரபஞ்சமே “ராம’ நாமத்தில் அடங்கியுள்ளது என்ற ரகசியம் அறிந்த பிள்ளையார் தரையில் “ராம’ என எழுதி உடனடியாக அதைச் சுற்றிவந்து முருகனை முந்திவிட்டார்; வெற்றியும் பெற்றார்.
விநாயகரின் புத்திசாலித்தனத்தையும், சமயோசித புத்தியையும் வியந்த ஈசன் கணங் களுக்கு அதிபதி பதவியைக் கொடுத்து, “”விநாயகா, இனி கணபதி என்ற திருநாமத்துடன் விளங்கு வாய்” என்றார்.
கணபதி ஞானத்தின் உருவம். வேதங்களில் உள்ளதுபோல யோக அடிப்படையில் வேதாந்த பூர்வமாக உள்ளவர். மூலாதாரமானவர். 

விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம்
அதிகாலை வீட்டை தூய்மைப்படுத்தி நீராடிவிட்டு, மூஷிக வாகனனை நினைத்து கடைக்குச் சென்று வலம்புரியாகவுள்ள மண் பிள்ளையாரை வாங்கி வரவேண்டும். அலங் காரம் செய்தபின் தொப்பையில் காசு வைத்து, விநாயகருக்கு குடை வைக்கவேண்டும்.
பின் இவரை பூஜையறையில் மனையில் அமர்த்தி, இருபுறமும் விளக்கேற்றி, முன்புறம் இலை யில் 21 வகையான நைவேத்திய பண்டங்களை வைக்கவேண்டும். இதில் மோதகம், சுண்டல் கண்டிப்பாக இருக்கவேண்டும். எத்தனை மலர்மாலை இட்டா லும் அறுகு மாலையும், எருக் கம்பூ மாலையும் கண்டிப்பாக சூட்டவேண்டும்.
“ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா’ 
என்ற கணபதி மூல மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அத்துடன், 
“ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே’
என்ற விநாயகர் சித்தி மந்திரத்தையும் கூறலாம். முடிந்தால் 21 முறை அல்லது 108 முறைகூட ஜெபிக்கலாம். பின் தூப தீப நைவேத்தியம் முடிந்ததும், பட்சணங்களை மற்றவருக்கு கொடுத்தபின் நாம் உண்ணவேண்டும். விநாயகர் சிலை பின்னப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்று முதல் 1, 3, 5, 7-ஆம்  நாட்கள் ஒன்றில் விநாயகரை ஆறு, ஏரி, கிணறு, சமுத்திரம் எங்காவது நீரில் கரைக்க வேண்டும். இதை ஆண்கள்தான் செய்ய வேண்டும். 1, 3, 5, 7 நாட்களில் வெள்ளி, செவ்வாய்க்கிழமை வந்தால் அன்று செய்யாமல் மற்றொரு ஒற்றைப் படை நாளில் கரைக்கலாம். அப்போது விநாய கரைப் பார்த்து, “பிள்ளையாரப்பா! இன்று போய் அடுத்த வருடம் வா’ எனக் கூறவேண்டும்.
கணபதியின் அறுபடை வீடுகள்
முருகனுக்கு உள்ளதுபோல் அண்ணன் கணபதிக் கும் ஆறுபடை வீடுகள் உள்ளன. திருவண்ணா மலை செந்தூர விநாயகர், விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார், திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார், மதுரை முக்குறுணிப் பிள்ளை யார், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திரு நரையூர் பொள்ளாப் பிள்ளையார்.