Friday, November 29, 2013

ஐயப்ப வழிபாடும் அதன் விதிமுறைகளும் . . . ( சுருக்கம்)


தர்மசாஸ்தா எழுந்தருளி இருக்கும் சபரிமலை, வனப்பகுதி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அங்கே சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளுக்கு பஞ்சமில்லை. ஐயப்பனை வணங்கச் செல்லும் பக்தர்கள் தூய்மையை கடைப்பிடித்தால்தான் பாதுகாப்பாக சென்று வர முடியும். மனம், வாக்கு, சரீரம் இவற்றை சுத்தமாய் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஐயப்பன் வடிவை உள்ளத்தில் பதித்து, விரதமிருக்க வேண்டும்.


ஐயனை தரிசிக்க செல்பவர்கள் முறையாக விரதமிருந்து ருத்திராட்ச மாலை அணிய வேண்டும். மாலையணிந்த நாள் முதல் நெறிமுறைகளை சரிவரக் கடைப்பிடிப்பது முக்கியம்.



சனிக்கிழமையும், கார்த்திகை முதல் தேதியும் மாலை அணிய உத்தமம். மாலை அணிந்த பின்பு ஆலயத்தை வலம் வந்து தேங்காய் உடைக்க வேண்டும். விரதம் ஒரு மண்டலம் (நாற்பத்தியொரு நாட்கள்). விரதநாள் நெடுகவும் வண்ண ஆடை அணிந்திருக்க வேண்டும். ஆடை கறுப்பு அல்லது காவி அல்லது நீல வண்ணத்தில் இருக்கலாம். சபரிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் குருசாமியிடம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். கார்த்திகை முதல் நாள் அல்லது சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திரம் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு. விரதம் தொடங்கும் நாளில் காலையில் உபவாசம் இருந்து, ஆலய வழிபாடு செய்து, ஐயனின் திருமுன்பாக மூன்று முறை சரணம் சொல்லவும். 


குருசாமி மாலையை கழுத்தில் அணிவிப்பார். பின்னர் குருசாமியை வழிபட்டு அவருக்கு தட்சணை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் ஆலயத்தை வலம் வந்து, தேங்காய் உடைத்து இறைவனை வணங்கி வீட்டுக்கு செல்ல வேண்டும். விரதகாலம் முழுவதும் காலில் செருப்பு அணியக் கூடாது. கட்டிலில், மெத்தையில் படுத்துறங்கக் கூடாது. புலால், மதுபான வகைகளை உட்கொள்ளக் கூடாது. விரதமிருப்பவர் புலனடக்கத்தோடு இருந்தாக வேண்டும். யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. பொய் சொல்வது, ஆசை வைப்பது கூடாது. நல்லதை நினைத்து, நல்லதை சொல்லி, நல்லதையே செய்து வரவேண்டும்.


மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு செல்லக் கூடாது. துக்கம் விசாரிக்க கூடாது. விரத காலத்தில் ஒருநாள் ஐயப்ப பூஜை நடத்துவது விசேஷம். அருகில் உள்ள ஐயப்ப பக்தர்களை அழைத்து, அனைவரும் பக்திப் பாடல்கள் பாடி பரவசத்துடன் சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும். இயன்ற அளவில் அன்னதானம் செய்ய வேண்டும். சபரிமலைக்கு முதல் முறையாக பயணம் செய்யும் பக்தரை கன்னி ஐயப்பன் என்பார்கள். தினமும் ஐயப்பன் தோத்திரப் பாடல்களைப் பாடி, இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். சதா ஐயப்ப நாமஸ்மரணையாய் இருந்து வருவது முக்கியம். நாற்பத்தியொரு நாள் விரதத்தையும் நல்லமுறையில் பூர்த்தி செய்ய இது உதவும். சபரிமலைக்குப் பயணிக்கிறவர் மார்கழி மாத இறுதிக்குள் புறப்பட்டு விட வேண்டும்.


ஐயப்ப பக்தர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது ‘ஐயப்ப சரணம்! சுவாமியே சரணம்‘ சொல்லி வணங்க வேண்டும். ‘என்னில் இருப்பவனை உன்னிலும் காண்கிறேன்’ என்று ஐயப்பனை எங்கும் எதிலும் காணும் மனப்பக்குவம் இதன் மூலம் வளர்கிறது, வெளிப்படுகிறது.