Friday, February 14, 2014

திருவெண்காட்டில் மாசி மகம் ! ! ! (15.02.2014)


வல்லமை மிகுந்த மாசிமக சிறப்புக்கட்டுரை . . . .


மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.


பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.


 தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.



தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.



மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரத்தில் சிங்கராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்கராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்,



இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.



கர்ண பரம்பரைக்கதை :


முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருள்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.




முன்பு ஒருகாலத்தில் பார்வதி சமேதராகக் கைலையில் எழுந்தருளி இருந்தார். அப்பொழுது உமாதேவியார் அரனாரை அஞ்சலி செய்து எம்பெருமானின் தத்துவநிலையைச் சாற்றியருளும் படி கேட்டார். அதற்குப் பரமசிவன் "தேவி, பேரும், குணமும், உருவமும், செயலும் இல்லாத நாம் சக்தியால் அருவுருவங்கொண்டு செயற்படுகின்றோம்" என்றார். இதனைக் கேட்ட பார்வதி தன்னால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்று பெருமைப்பட்டாள். அதனால் சிவபெருமான் தான் இன்றி ஏதும் ஏதும் இயங்காது என்று கூறித் தனித்து நின்றார்.




இதனால் உலகம் இயக்கமின்றி ஜடமாகியது. அம்பிகை அரனடியை வணங்கி எம்பெருமானே எல்லாம் நீரே என்று உணரப்பெற்றேன், கருணை புரிந்தருளுக என்று இறைஞ்சினார். அப்பொழுது சிவபெருமான் தான் தக்கனுகுக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற திருவுளங்கொண்டார். தேவியைப் பார்த்து உலகம் இயக்கமற்று இருந்த பாவம் உன்னையே சேரும் அப்பாவம் நீங்க நீயே யமுனை நதியில் வலம்புரிச் சங்குவடிவில் தவஞ்செய்யும்படி கட்டளையிட்டருளினார். அரனாரின் கட்டளைப்படி பார்வதி தேவியார் யமுனை நதியில் ஓர் தாமரை மலரில் வலம்புரிச் சங்கு வடிவில் தவஞ்செய்து கொண்டுருந்தார்.

ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் கொடுத்து தம் அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது.

மாசி மகம் பற்றிய தகவல்கள் :


1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.



2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம்    இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

5. மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

6. குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7. அன்னதானத்தில் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8. மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப் பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9. பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் துவங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11. அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசிமாதத்தில் தான்.

12. காரடையான் நோன்பும் சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள். மாசி மகத்தன்றுதான் காமதகன் விழா நடைபெறுகிறது.

13. மாசி மாதத்தில் வீடு குடி போனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.

14. இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.

15. மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வர் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம் மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16. மாசிமகம் ஸ்தானம் செய்வேருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். அன்று புண்ணிய நதியில் ஒருமுறை மூழ்கி எழுவோருக்கு பாவங்களை விலக்குவார்கள். இரண்டாம் முறை மூழ்கி எழும் போது சொர்க்கப் பேறு தருவார். மூன்றாம் முறை மூழ்கி எழும் போது அவர்கள் புண்ணியத்திற்கு ஈடான பலனாக எதைக் கொடுக் கலாம் என ஈசனே திணறுவாராம்.

17. மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம். அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

18. மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

19. மாசிமகத்தன்று கடல் நீராடலாம். அப்போது பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். அச்சமயத்தில் நீராடுவோர் மனமும் உடலும் ஆரோக்கியமாகும்.

20. ராமநாதபுரம் எமனேஸ்வர சிவாலய சிவன், எமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவ்வாலய எமதீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப விழா நடக்கும் சிவ அம்சமாக முருகன் தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார்.

21. திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகேயுள்ளது சின்ன ஓம்காளி ஆலயம். இங்கு மாசி மாதம் 16 நாட்கள் குண்டவிழா நடைபெறுகிறது.

22. மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண் டத்தில் இடம் கிடைக்கும்.

23. மாசிமக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

24. மாதத்தின் சுக்ல பஞ்சமியில் ஸ்ரீசரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

25. கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, வெள்ளிக் கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானதாகும்.