குளித்து தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து சுவாமிக்கு வேண்டிய பால், பழங்கள், மலர்கள் இவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக்கொண்டும் அகசுத்தியுடனும் செல்லுதல் வேண்டும்.
கோயிலை அன்மித்தவுடன் கோபுரத்தை வணங்கி (கோபுரதரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள்) கோவிலுக்குள் செல்வதற்கு முன்பாக தங்களின் பாதணிகளை கழற்றி கால்களை சுத்தம் செய்து கோயிலுக்குள் பிரவேசிக்கும் போது கோபுர வாயிலின் படியைத் தொட்டு வணங்குதல் வேண்டும்.
பின்னர் கொடிமரத்திற்கு முன்னால் நின்று ஆணவம், கன்மம், மாயை என்கின்ற துற்குணங்களை நீக்கி வலம் சென்று கன்னிமூலையில் வீற்றிருக்கும் கணபதியை வணங்கிய
பின்பாக கற்பக்கிரகத்திங்கு முன்பாக வந்து மூலஸ்தானத்தில் வீ்ற்றிருக்கும் மூலவரை வழிபட்டு இரண்டாவது வலத்தில் பரிவார தெய்வங்களை வழிபட்டு. மூன்றாவது வலத்தில் சண்டேஸ்வரரை வழிபடுவதே சாலச்சிறந்ததாகும். சண்டேஸ்வரரை வணங்கும் போது மிக அமைதியாக மூன்று முறை கைகளைத்தட்டி அன்றைய வழிபாட்டின்' பலனை பெறவேண்டும். முக்கியாமாக சண்டேஸ்வரர் வழிபாட்டின் போது பலமாக கைதட்டுதல் மற்றும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையின் நூல் இழையை அறுத்துப் போடுதல் போன்ற செயல்களை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
சண்டேஸ்வர வழிபாட்டின் பின்பாக மீண்டும் கொடிமரத்திற்கு முன்பாக வந்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.
நமஸ்காரம் செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை.
1. எமக்கு பக்கத்தில் பெரியவர்கள் யாராவது நிற்கிறார்களா? என்று பார்க்க வேண்டும் காரணம் நாம் வீழ்ந்து வணங்கும் போது அவர்கள் மீது எமது பாதமோ, கைகளோ படக்கூடாது.
2. மற்றவர்களின் வழிபாட்டுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
3. கால்கள் தெற்கு நீட்டி தலை வடக்கு நோக்கி வணங்குவதே உத்தமமாகும்.
4. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், சாஸ்டாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
இவ்வாறு வழிபாடுகள் செய்த பின் வீடு செல்வதற்கு முன்பாக சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்து எல்லாச் சுவாமிகளையும் தியானம் செய்து பின் எழுந்து ஆலயத்தால் வழங்கப்படும் பிரசாதங்களை பரிசாதகர்களிடம் கைகூப்பி வணங்கி பிரசாதத்தை வாங்கி கீழே சிந்தாமல் சாப்பிடுதல் மகா புண்ணியத்தைச் சேர்க்கும்.