Friday, January 24, 2014

திருவெண்காட்டில் உறையும் சித்திவிநாயகரை வழிபட வாழ்வு மிகுந்து வரும் ! ! !


விநாயகர் மிக எளிமையானவர். அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது.


விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம்.

அருணகிரியார் கந்தரனுபூதியில், “ஆசாநிகளம் (மாயை) துகள் ஆயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே’ என்கிறார்.

கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?

சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.

பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு.

கணபதிக்கு சித்தி, புத்தி என்னும் இரு மனைவியர் உள்ளதாகச் சொல்வர். இவர்கள் பிரம்மபுத்திரிகள்- சக்திகள்.

கணபதியை வணங்கினால் புத்திக்கூர்மை அதிகரிக்கும்; எடுத்த காரியங்கள் எல்லாம் சித்திக்கும்- வெற்றியாகும் என்பதே இதன் தத்துவம்.


பல தெய்வங்களுக்குப் புராணங்கள் எழுதியவர் வியாசர். ஆனால் அவர் விநாயக புராணம் எழுதவில்லை. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதினார் விநாயகர். வினோதம்தானே. (விநாயக புராணத்தை முத்கலர் என்ற முனிவர் இயற்றினார்.)

வியாசர் கந்தபுராணத்தை எழுதத் தொடங் கும்முன் கீழ்க்கண்ட பதினாறு பெயர்களால் கணபதியைத் துதிக்கிறார்.

ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.

ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர். (மற்றொன்றை ஒடித்துதான் மகாபாரதம் எழுதினார்.)

கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.

கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.

லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.

விகடன்- குள்ளமாக இருப்பவர்.

விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.

விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.

தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.

கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.

பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.

கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.

வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.

கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.

ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.

ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.

இந்தப் பதினாறு பெயர்களைத் துதித்துத் தொடங்கினால் எக்காரியமும் வெற்றிபெறும்; எல்லா தடைகளும் விலகும்.