Saturday, April 12, 2014

திருவெண்காட்டில் மகா பிரதோஷ வழிபாடு!!! 12.04.2014


பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வறுமை, பயம், பாவம், மரணவேதனை போன்ற தொல்லைகள் நீங்கி, நன்மைகள் பல கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்பது புராணக் கருத்தாகும். எனவே பக்தர்கள் அனைவரும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நன்மைகள் பெற வேண்டும்.



பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடும் பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சனிக்கிழமை பிரதோஷம் வந்தால் மிகச் சிறப்பு. சனிப்பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்குமாம். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் நலம்.


சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.

மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும்.

எனவே, பிரதோஷ பூஜை மேற்கொள்ளும் போது அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்குகிறது. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து பசுவின் கறந்த பாலைக் கொண்டு ஈசனை அபிஷேகம் செய்து, வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.



சிறப்பு இணைப்புக்கள்