Saturday, April 12, 2014

திருவெண்காட்டில் பங்குனி உத்திரம் !!! (13.04.2014)


பங்குனி மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. மரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கி விளங்கும் மாதம் இதுவாகும். வசந்த காலம் என்று போற்றப்படும் இளவேனிற் காலத்தை வரவேற்று நிற்கும் மாதமாகும். உலகத்தை வாழவைக்கும் உழவர் பெருமக்கள் அறுவடை முடிந்து சற்று ஓய்வு கொள்ளும் மாதம் இந்த பங்குனியே ஆகும். இவ்விதம் ஓய்வு கொள்ளும் காலத்தில் பலவிதமான விழாக்களைக் கொண்டாடி மகிழ்வார்கள். அவற்றில் முதல் விழாவாகப் பங்குனி உத்திரத்தைக் கொள்ளலாம்.


சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் செய்து வைத்து மகிழும் விழா தான் பங்குனி உத்திர விழா ஆகும். மாதங்களில் பன்னிரண்டவதாக விளங்குவது பங்குனியாகும். இதைப்போன்று நட்சத்திரங்களில் பன்னிரண்டவதாகத் திகழ்வது உத்திரமாகும். இந்த நாளில் முழு நிலவுகாயும் நாளில் பங்குனி உத்திரவிழா நடைபெறுகின்றது. சென்னை மாநகரில் மயிலாப்பூரிலும் அண்மையிலுள்ள காஞ்சிபுரத்திலும் இவ்விழா நடைபெறுவதைப் போலத் தமிழகத்திலும் முக்கியமான சிவன் கோவில்களில் இவ்விழா சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

இந்தப் பங்குனி உத்திரத்தன்று விரதம் மேற்கொண்டு சிவப்பெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கி வருபவர்களுக்குவாழ்வில் எல்லா நன்மைகளும் வந்தடையும் என்று கூறப்படுகிறது. துன்பத்தில் உழலுபவர்கள் யாராக இருந்தாலும் பங்குனி உத்திரத்தில் விரதம் மேற்கொண்டு இறைவனையும் இறைவியையும் வணங்கி வருபவர்களுக்கு நிச்சயம் துன்பம் நீங்கும் என்று கூறப்படுகிறது. சிவன் வேறு சக்தி வேறு அல்ல என்பதை அறிவோம். இருவரையும் சேர்த்து அம்மையப்பராக வணங்கி வருவோர் குறைவற்ற முறையில் நன்மைகள் அனைத்தையும் நிச்சயம் பெறுவார்கள்.


முனிவராக இருந்தாலும் வாரிசு இருந்தால்தான் புண்ணிய லோகம் அடைய முடியும் என்ற எண்ணத்தில் அகஸ்திய முனிவரும் கல்யாண விரதத்தை அனுசரித்தார். அதன் பயனாக லோபா முத்திரையை தன் மனைவியாக அடைந்தார். இப்படி எத்தனையோ பேர் பங்குனி உத்திர விரதத்தை, அதாவது கல்யாண விரதத்தை கடைபிடித்ததால் இனிமையாக திருமணம் வாழ்க்கை அமைந்தது
.
அதேபோல கல்யாண விரதத்தின் பயனால் ரதிதேவி மறுபடியும் மன்மதனை கணவனாக அடைந்தாள். இதேபோல் சீதையும் இந்த விரதத்தை கடைபிடித்தாள். அதன் பயனாக ஸ்ரீராமரை மணந்தாள். முருகனுக்கும் – தெய்வானைக்கும் திருமணம் நடந்ததும் பங்குனி உத்திர நாளில்தான். அதேபோல இந்திரனுக்கும், இந்திராணிக்கும், கற்பகம்பாளுக்கும் – கபாலீஸ்வரருக்கும் இந்த தினத்தில்தான் திருமணம் நடந்தது. ஆண்டாளுக்கும் இந்த தினத்தில்தான் திருமணம் நடந்தது. சத்தியவான் சாவித்திரிக்கும் இந்த தினத்தில்தான் திருமணம் நடந்தது. பிரம்மா – சரஸ்வதிக்கும் திருமணம் நடந்தது இந்த பங்குனி உத்திர திருநாளில்தான்.

பங்குனி உத்திரத்தில்தான் ஐயப்பர் பிறந்தார். அதனால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசிப்பார்கள். அதேபோல வில்லுக்கு விஜயன் என போற்றபடும் அர்ஜுனனும் இந்த நன்நாளில்தான் பிறந்தார். மணவாழ்க்கையில் பிரச்சனை இருந்தாலோ அல்லது பிரிந்த கணவனோ – மனைவியோ பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம், பௌர்ணமியும் சேரும் பங்குனி உத்திரம் என்று அழைக்கும் இந்த நன்நாளில் இறைவனின் ஆலயத்திற்கு சென்று வணங்கினால் வாழ்க்கையில் நல்ல மாற்றமும், குடும்பம் ஒன்று சேரும் காலமும் வரும்.

மக்களின் காதல் வாழ்வு சிறப்படைவதற்கும் இறைவன் இறைவியின் திருமணம் நடைபெறும் பங்குனி உத்திரம் என்ற விழா அமைந்துள்ளது எனலாம். பங்குனி உத்திரத்தின் சிறப்புப் பற்றி ஞானசம்பந்தர் தேவாரத்தில் கூறுகிறார். பங்குனி உத்திரம் என்ற இந்தப் பண்டிகை நன்மைகள் அனைத்தையும் மக்கள் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அனைவரும் நோய் நொடியின்றி வாழ உதவும் பண்டிகை இதுவாகும். மக்கள் அனைவரின் உள்ளம் மகிழ்ச்சியால் திளைப்பதற்கு உதவும் பண்டிகை இது என்றால் மிகையில்லை.

தமிழகத்தில் மட்டுமின்றி இப்பண்டிகை வடநாட்டிலும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை என்ற பெயரில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. குங்குமக் கரைசலை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழும் இன்பத் திருநாளாகக் கொண்டாடுகின்றார்கள். தொடர்ந்தாற் போன்று நாற்பத்தெட்டு வருடங்கள் இந்தப் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நாளில் விரதமிருந்து வணங்கி வந்தால் நினைத்தவை அனைத்தும் கைக்கூடும் என்று நம்பப்படுகிறது.

என்னதான் பாவங்கள் செய்திருந்தாலும் பங்குனி உத்திரத்தில் விரதம் மேற்கொண்டால் அனைத்துப் பாவங்களும் தொலைந்து விடும் என்று கூறப்படுகின்றது. ஆக, எல்லா வழிகளிலும் பங்குனி உத்திர விரதம் மக்களுக்கு நன்மைகளையே தருகின்றது எனலாம். பிறவிப்பெரும் பயனைப் பெற்றுச் சிறப்பதற்கு இந்தப் பங்குனி உத்திரம் நமக்குப் பெரிதும் உதவுகின்றது என்பது பெரியோர்களின் வாக்காகும்.