விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக
ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத்தின் பொருளைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இதை விநாயகரின் முன் பக்தியோடு சொல்லி வழிபடுவோருக்கு தொடங்கும் செயல்கள்
யாவும் இனிதே நிறைவேறும்.
கணேச பஞ்சரத்தினத்தின் பொருள்
* தனக்கு மேல் வேறு ஒரு தலைவன் இல்லை என்ற ஒப்பற்ற தனிப்பெருந்தலைவனே! கஜமுகாசுரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துபவனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவனே! உயிர்களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன்னை நம்பும் அடியவர்களின் தீவினைகளைப் போக்கி கருணை காட்டும் கணபதியே! உம்மை வணங்குகிறேன்.
* தேவாதிதேவனே! பாமரர்களின் அறியாமையைப் போக்குபவனே! வல்லமை நிறைந்தவனே! ஆனைமுகனே! கருணை மிக்க இதயம் கொண்டவனே! அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் பரம்பொருளே! எப்போதும் உன் திருவடியை சரணடைந்து வழிபடும் பாக்கியத்தை அருள்வாயாக.
* ஓங்கார வடிவினனே! கருணாமூர்த்தியே! பொறுமை, மகிழ்ச்சி, புகழ் மிக்கவனே! எல்லா உயிர்களும் மகிழும்படி நன்மை அருள்பவனே! பணியும் அன்பர்களின் பிழை பொறுப்பவனே! அடியார் வேண்டும் வரம் தந்தருள்பவனே! நித்ய வடிவினே! உன்னை வணங்குகிறேன்.
* கன்னத்தில் மதநீர் பொழியும் கஜமுகப்பெருமானே! சிரிப்பாலே திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானின் புதல்வனே! பக்தர்களின் துயர் களைபவனே! ஊழிக் காலத்தில் உலகத்தைக் காத்தருள்பவனே! செய்யும் செயல்களின் வெற்றிக்குத் துணைநிற்கும் ஆதிபரம்பொருளே! உன்னை சரணடைந்து போற்றுகின்றேன்.
* ஒற்றைக் கொம்பனே! கணபதீஸ்வரா! சிவபெருமானின் பிள்ளையே! ஆதி அந்தமில்லாதவனே! துன்பம் துடைப்பவனே! யோகியர் உள்ளத்தில் குடிகொண்டவனே! உன் திருவடிகளை எப்போதும் திருவடியில் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கும் இச்சிறியேனையும் காத்தருள்வாயாக.
விநாயகப்பெருமானின் இத்துதியை அதிகாலையில் பாராயணம் செய்வோருக்கு நோய்நொடிகள் அனைத்தும் விலகும். தோஷம் யாவும் நீங்கும். வாழ்வில் உண்டாகும் துன்பம், தொல்லை யாவும் அடியோடு அகலும். குலம் தழைக்க மழலைச் செல்வம் கிடைக்கும். நற்புகழும், மேம்பாடும் உண்டாகும்.