Thursday, May 1, 2014

திருவெண்காட்டில் புண்ணியம் சேர்க்கும் அட்சய திரிதியை ! ! ! (02.05.2014)


பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பின் வரும் மூன்றாம் நாளை திரிதியை அட்சய  திதி என்பர். சித்திரை மாதம் வரும் திரிதியை திதியை அட்சய திரிதியை என சிறப்பித்துக் கூறுவதுடன் விழாவாகவும் கொண்டாடுகிறோம். சயம் என்றால் தேய்தல் என்று பொருள் அட்சய என்றால் வளர்வது. குறையாதது என்று பொருள்.


அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் அட்சய திரிதியை அன்று செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத் தரும் என்பர். இந்த நன்னாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் தங்கம் வாங்க ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லாராலும் வாங்க முடியாதே.


அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. உப்பு (கண்டிப்பாக), அரிசி மற்றும் ஓரிரு ஆடைகள், சிறிய பாத்திரம் வாங்கலாம். எப்படியும் மாதா மாதம் மளிகை வாங்கியே ஆகவேண்டும். சித்திரை மாத மளிகையை அட்சய திரிதியை அன்று வாங்கிப் பயனடையலாமே.

ஏனெனில் குபேரன் தான் இழந்த சங்கநிதி, பதுமநிதிகளை திரும்பவும் அட்சய திரிதியையில்தான் பெற்றான். குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாளும் இதுவே. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான்.

மணிமேலையும் இப்பாத்திரம் பெற்றுள்ளாள். பிட்சாடனரான சிவன் தன் கையில் ஒட்டியிருந்த கபாலத்தில் காசி அன்னபூரணியிடமிருந்து உணவு பெற்று, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட நாளும் இதுதான். கெளரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும் போது, ‘அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான்.

பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான். மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். கேரள சொர்ணத்து மனையில் பாலசந்நியாசியான ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே.


ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லட்சுமியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும் விளங்குகிறாள். பசுக்களில் கோமாதா, யாகங்களில் தட்சிணை, தாமரையில் கமலை, அவிர்பாகத்தில் ஸ்வாகா தேவி என சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் நாராயணனின் இணை பிரியாத தேவியான லட்சுமியை நாம் அட்சய திரிதியை நாளில் சாஸ்திரப்படி பூஜித்தால் லட்சுமி கடாட்சம் கிட்டும்.

இதனை தானத் திருவிழா என்றும் கூறுவர். அட்சய திரிதியையில் செய்யும் எல்லா வகை தான தர்மங்களும் அளவில்லாத பயன்களைத் தரும். அன்னதானம் செய்தால் விபத்து நீக்கி உடல்நலம் தரும்.

கல்விக்கு உதவினால் நம் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு கிட்டும். அன்று குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கலாம். புத்தகம் வெளியிடலாம், வீடு, மனை, கிணறு புதுப்பிக்கலாம், எந்த ஒரு புதிய செயலையும், புண்ணிய செயலையும் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக கடன் மட்டும் வாங்கவே கூடாது.அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்:

இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ, நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.

அட்சய திருதின்று என்ன செய்ய வேண்டும்: 

இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதனால், அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும்.

திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும்  ஸ்ரீ மஹாலட்சுமி


தானம் செய்தால் கிடைக்கும் பலன்கள்:

அன்று செய்யும் தான-தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.

அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்: 

அட்சய திருதியை நாளில், பூஜையறையில் வழிபடும் போது, தொழில் ஆவணங்கள், பணம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும், வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!

* அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாள், குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.

* காசியில் ஒருமுறை கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்து அட்சய பாத்திரதிலிருந்து உணவை கொடுத்து பசியைப் போக்கினார். மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள்தான் அட்சய திருதியை. எனவே, அட்சய திருதியை தினத்தன்று ஓம் நமச்சிவாய சொல்லி பரமேஸ்வரனின் அருளைப் பெறுவோம்.

* அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோயில்களிலிருந்தும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.