Monday, April 28, 2014

தெய்வங்களும் வணங்கும் தெய்வம் திருவெண்காட்டில் உறையும் தெய்வம் ! ! !

கணபதியை வணங்காது எந்தச் செயலை செய்யத் தொடங்கினாலும் அது முழுமை அடையாது; பலன் தராது என்பது சிவபெருமான் வாக்கு.
வரம் தந்த சிவனே கணபதியை வணங்காது திரிபுராசுரனை வதைக்கச் சென்றதால், அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தது. இதனை அருணகிரியார்,
“முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா!’

என்று பாடுகிறார்.




கணபதி இல்லாவிட்டால் அகஸ்தியர் தமது கமண்டத்தில் எடுத்துச் சென்ற காவிரி மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்குமா? காகரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை வெளிப்படுத்தினாரே!
கணபதி இல்லாவிட்டால் ஸ்ரீரங்கநாதர் நமக்குக் கிடைத்திருப்பாரா? அவரது விக்ரகம் இலங்கைக்கல்லவா போயிருந்திருக்கும். கீழே வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன், ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்கநாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்தபோது மாலை நேரமாகிவிட்டது. மாலைச் சந்தி கர்மங்களைச் செய்யவேண்டுமே என விபீஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந்தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென்றான். அவன் திரும்பிவந்து பெற்றுக்கொள்வதற்குள் அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலைகொண்டுவிட்டது. விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் விபீஷணன். ஆனால் இயலவில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். பின்னர் உண்மையறிந்து வணங்கிச் சென்றான். அவ்வாறு கோவில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். திருச்சி மலைமீதிருக்கும் உச்சிப்பிள்ளையாரே இந்தத் திருவிளையாடல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.

இதேபோன்ற ஒரு நிகழ்வை இராவணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார். இராவணன் தவம் பல புரிந்து சிவனிடம் வரம்பெற்று, அவரிடமிருந்து ஆத்மலிங் கத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான். அவனும் சிறுவன் வடிவில் வந்த விநாயகரிடம் ஆத்மலிங்கத்தைத் தர, அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அதுவே கர்நாடக மாநிலத்திலுள்ள கோகர்ணம். அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவைக் காணலாம்.
பராசக்தி தேவி பண்டாசுர வதத்திற்குக் கிளம்பினாள். ஆனால் விக்ன யந்திரம் அதற்கு இடையூறாக இருந்தது. சக்திதேவி சிவனையும் கணபதி யையும் நினைக்க, கணபதி அந்த விக்ன யந்திரத்தைத் தூளாக்கினார். அதன் பிறகே பராசக்தியால் பண்டாசுர வதம் செய்ய முடிந்தது. இதனை லலிதா ஸஹஸ்ர நாமம்,

“காமேஸ்வர முக ஆலோக
கல்பீத கணேஸ்வரா
மஹாகணேச நிர்பின்ன
விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா’

என்று கூறுகிறது.
கணேச அவதாரமும் ஒரு விசித்ரம். பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, “யாரையும் உள்ளே விடாதே’ என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பா ளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, “”உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன்” என்றார்.
விக்னத்தை ஏற்படுத்து பவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன். ஆகவேதான் ஒரு விநாயகர் துதி,
“ஸர்வ விக்னஹரம் தேவம்
ஸர்வ விக்ன விவர்ஜிதம்
ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்
வந்தே அஹம் கணநாயகம்’

என்று போற்றுகிறது.

அவரது தந்தை, தாயான சிவ- பராசக்தி வணங்கு வதால் அவரது பெயர் “ஜ்யேஷ்டராஜன்’ ஆயிற்று.
ஒருசமயம் மகாவிஷ்ணு வும் கணபதியும் விளையாடி னர். அச்சமயம், கணபதி மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை வாயில் போட் டுக் கொண்டு விட்டார். எவ்வாறு அதைத் திரும்பப் பெறுவது என்று யோசித்த மகாவிஷ்ணு, மேலும் விளையாடுவதுபோல், இரண்டு காதுகளையும் மாறித்தொட்டுக் கொண்டு, உட்கார்ந்து எழுந்தார். 12 முறை இவ்வாறு செய்யவே, கணபதி மகிழ்ந்து சிரிக்க, சக்கரம் வெளிவந்ததாம். விஷ்ணு அதைப் பெற்றுக்கொண்டார். அதுதான் தோர்பிக் கரணம்- தோப்புக் கரணம் என்று ஆயிற்று. நாம் கணபதி முன்பு அவர் மகிழ- அருள தோப்புக் கரணம் போடுகிறோம்.
மதுரை மீனாட்சி சந்நிதியை அடையுமுன் பிராகாரத்தில் ஒரு பெரிய கணபதியைப் பார்க்கலாம். முக்குறுணிப் பிள்ளையார் என்று பெயர். கோவில் கட்டும்போது “கிடைத்த’ பிள்ளையார் என்பர். சிற்பி செதுக்காத பிள்ளையார் இவர். விநாயக சதுர்த்தி நாளில் முக்குறுணி அரிசி மாவில் பெரிய கொழுக் கட்டை செய்து இவருக்கு நிவேதிப்பர்.
கணபதி இல்லாவிட்டால் நமக்கு வியாசரின் உன்னத இதிகாசமான “மகாபாரதம்’ கிடைத் திருக்குமா என்ன? வியாசர் கூற எழுதியவர் கணபதிதானே!
தம்பி முருகனுக்கு வள்ளியை மணம் முடித்து வைத்தவரும் கணபதியல்லவா!
ஆதிசங்கரர் தனது ஷண்மதத்தின் உருவ வழி பாட்டில் “காணாபத்தியம்’ என்று கணபதி வழி பாட்டை வகுத்தார். புரா ணங்கள் பல எழுதிய வியாசர், கணேச புராணம் என்று தனியாக எழுத வில்லை. காரணம் என்ன? முத்கலர் என்ற மகரிஷி, திருவெண்காட்டில் கணபதி உபாசகராக இருந்து “முத்கல புராணம் அல்லது விநாயக புராணம்’ என்னும் நூலை விரிவாக எழுதியுள்ளார். கணபதி யின் அவதார காரணம் கஜமுகாசுரன் என்கிற அசுரனை அழிப்பதற்காக. இறுதியில் கஜமுகாசுரன் எலி வாகனமாகி கணபதி யைத் தாங்கினான்.
கணபதியை எல்லா தெய்வங்களும் வணங்கினாலும் பிள்ளையார்பட்டி கணபதி கையில் சிவலிங்கம் இருக்கும். அந்த கணபதி சிவனை பூஜிக்கிறா ராம்.
கண்ணன் அர்ஜுனனுக்கு பகவத்கீதையில், “பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யாப்ரயச்சதி’ என்று கூறுகிறார். “இலையோ, பூவோ, பழமோ, நீரோ யார் ஒருவன் பக்தியுடன் அளிக்கிறானோ அதனை மகிழ்வுடன் ஏற்று வரமளிப்பேன்’ என்று சொல்கிறார்.