Saturday, April 26, 2014

திருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம் (26.04.2014)

பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய சிறப்பான வழிபாடாகும். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
 

பிரதோச காலமென்பது மாலை 4 மணி – 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமைப் பிரதோசம் சோமவாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமைப் பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும்.




சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.



பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.



  பிரதோசத்தில் பல  வகையுண்டு:

 மகா பிரதோசம்.:-           ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.
அபய பிரதோசம்:            ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது
தீபப் பிரதோசம்:-            திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது. பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது நல்லது .



மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோமாக!


“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”