Friday, May 30, 2014

விக்கினங்களை தீர்க்க வல்ல விநாயகப்பெருமானின் சிறப்பு செய்திகள் ! ! !


* க்ர துண்டர், மகோத்ரதர், கஜானனர், லம்போதரர், விகடர்,விக்னராஜர், தூமரவர்ணர், சூர்ப்பகர்ணர் என்னும் எட்டு அவதாரங்கள் விநாயகர் எடுத்ததாக விநாயகர்புராணம் கூறுகிறது.

* சாணம், களிமண், மஞ்சள், வெல்லம், சந்தனம், அரிசிமா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பிடித்து விநாயகரை வழிபடலாம். இதனையே “பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று சொலவடையாகக் கூறுவர்.


*முக்கனிகளும், கரும்பும் ஆகிய நான்கையும் நான்கு கரங்களில் ஏந்தி, ஐந்தாவது கையில் மோதகத்தை வைத்துக் கொண்டு இருப்பவர் பாலகணபதியாவார். சோடச விநாயகர் என்னும் பதினாறு விநாயகர்களில் இவரே முதலாமவர்.

*திங்கட்கிழமை வரும் சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டால் குழப்பம் நீங்கி மனத்தெளிவு உண்டாகும். புதனன்று வரும் சதுர்த்தியில் வழிபட்டால் கல்வித்தடை நீங்கும். வெள்ளியன்று சதுர்த்தி வழிபாடு செய்ய காரிய விக்னம் நீங்குவதோடு பாவம் அகலும்.

* லால்குடிக்கு அருகில் உள்ள அன்பில் தலத்தில் திருஞானசம்பந்தரின் தேவாரத்தை ரசித்துக் கேட்ட செவிசாய்த்த விநாயகர் அருள்புரிகிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் முக்குறுணிவிநாயகராக வீற்றிருக்கிறார்.

முக்குறுணிவிநாயகர்
* வளர்ந்து முற்றிய வெள்ளெருக்கு வேரில் விநாயகர் உருவம் இயல்பாகத் தோன்றிவிடும். சுயம்பு விநாயகரான இவரை வழிபடுவது சிறப்பாகும். சித்தர்கள் இதனை வழிபட்டு அஷ்டமாசித்திகளை அடைந்ததாகக் கூறுவர்.

* யானைமுகம் இல்லாமல் மனிதமுகத்தோடு இருக்கும் நரமுக கணபதி பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள சிதலைப்பதியில் கோயில் கொண்டிருக்கிறார். விநாயகருக்கு யானைமுகம் வருவதற்கு முன் இருந்த நிலையில் இங்கு அருள்பாலிக்கிறார்.

* முருகப்பெருமானுக்கு வள்ளியை திருமணம் செய்வதில் துணைபுரிந்தவர் விநாயகரே. இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் “அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே’ என்று பாடியுள்ளார்.

* விநாயகப்பெருமானை முழுமுதல் கடவுளாகப் போற்றும் முறைக்கு “காணாபத்யம்’ என்று பெயர். இதன்படி, விநாயகரே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துதொழில்களை நடத்தி பிரபஞ்ச இயக்கத்தை நடத்துவதாகச் சொல்வர்.

* பரம்பொருள் பெரியவராக இருந்தாலும் அவரைத் தாங்கும் சக்தி நம் இதயத்திற்கு உண்டு என்பதைக் காட்டுவதற்காகவே பெரிய உருவம் கொண்ட விநாயகப்பெருமானுக்கு சிறிய மூஞ்சுறுவை வாகனமாக அமைத்தனர்.

* விநாயகர் சதுர்த்தியை ஒருநாள் விரதமாக கொண்டாடுகிறோம். ஆவணி சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி வளர்பிறை சதுர்த்திவரை ஒருமாத விரதமாக மேற்கொள்ள வேண்டும் என்று விநாயகர் புராணம் கூறுகிறது.

* விநாயகரை வழிபட்டால் பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பர். குழந்தைக் கடவுள் என்பதால், வேண்டும் வரத்தை அருள்வதில் ஈடுஇணையற்றவர். “கணபதிபூஜை கைமேல் பலன்’ என்று இதனைச் சொல்வதுண்டு.

வித்தியாசமான விநாயகர்கள் உள்ள கோவில்கள்

* திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி உக்ரதேவதையாக விளங்கியபோது, ஆதிசங்கரர் அம்பிகையின் நேர் எதிரில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்தார். அவ்விநாயகருக்கு உக்கிரம் தணித்த விநாயகர் என்றே பெயர். இவரை வழிபட மனசாந்தி கிடைக்கும்.

* நடனக்கலையில் வல்லவராக சிவபெருமான் விளங்குகிறார். அவருடைய பிள்ளையான விநாயகரும் நாட்டியம் ஆடுவதில் விருப்பம் கொண்டவர். இந்த நர்த்தனவிநாயகரை வழிபட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

திருவெண்காடு மண்டைதீவு
ஆனந்த  நர்த்தனவிநாயகர்
www.thiruvenkadumandaitivu.com
* ஜப்பானில் விநாயகர் காங்கி டெக் என்னும் புத்தமதக் கடவுளுடன் இணைந்து காட்சி தருகிறார். அங்கு இவருக்கு கவான்வின் ஷேர் விநாயக்ஷா என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். யோகப்பயிற்சியாளர்கள் இவரை விரும்பி வழிபடுவர்.

* மூலாதாரமாக ஆதிக்கு காரணமாக இருப்பவர் விநாயகப்பெருமான். எதையும் மங்களகரமாக முடித்து வைப்பவர் ஆஞ்சநேயர். இவ்விருவரும் இணைந்த கோலமே ஆதியந்தப்பிரபு. இவரை வழிபட்டால் தொடங்கும் செயல்கள் மங்கலமாய் நிறைவேறும்.

* இலங்கை கதிர்காமத்தில் விநாயகப்பெருமான் முறிவண்டி விநாயகர் என்ற பெயருடன் திகழ்கிறார். இவரை வழிபடாவிட்டால், வாகனத்தின் அச்சு முறிந்துவிடும் என்று நம்புகின்றனர். வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இவ்விநாயகரை வழிபட்டுச் செல்வர்.