Monday, September 29, 2014

திருவெண்காட்டில் விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் 21 பேறுகள் ! 28.09.2014


திருவெண்காடு  மண்டைதீவு 
www.thiruvenkadumandaitivu.com

அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய் வியாபித்திருக்கும் ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்குபவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர். மிகவும் எளிமையான கடவுள் கணபதி. 

வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர். வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும்அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். விநாயகரே முழு முதற்கடவுள் என்று வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும். 


எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார். 

ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும், தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் இணைந்து "உ'' எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு. 

எந்த ஒரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும்.


திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான்  யானை  வாகனத்தில் திருவீதிவுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும்  காட்சி  

இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது, யோக சாஸ்திரங்களின்படி, நம் தலையின் இரு பக்கமிருக்கும் அமிர்தமானது சுண்டிவிடப்பட்டு, சுரந்து சுழுமுனாநாடி வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிஷேகமாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. 

அன்னை தந்தையான சிவ பார்வதியை வலம் (சுற்றி) வந்ததாலேயே உலகம் முழுமையும் சுற்றிய பெருமை கிடைத்ததால் ஞானப் பழத்தினை மிக சுலபமாகப் பெற்றவர் ஸ்ரீ விநாயகப் பெருமான். அந்த விநாயகரையே வலம் வந்தால், ஞானம் எனும் கல்வியறிவு, பழம் எனும் முயற்சியில் வெற்றி பெறலாம். 

விநாயகப் பெருமானுடைய சிறப்பினை உணர்த்த, விநாயகர் புராணம் உள்ளது. சிவபெருமான் வாயிலாகத் தாம் உணர்ந்த விநாயக புராணத்தை பிரம்மன் வியாசருக்கு உபதேசிக்க, அவர் பிருகு முனிவருக்கு உபதேசிக்க அவர் இப்புராணத்தை 250 பிரிவுகளையுடைய உபாசனா காண்டம், லீலா காண்டம் என இரு காண்டங்களாக அமைத்துப் பன்னிரெண்டாயிரம் சுலோகங்களாக "ஸ்ரீ விநாயகர் புராணம்" பாடினார்.

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தல் எழுந்தருளி மூர்த்திகளாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானும்  ஸ்ரீ பாலமுருகனும்.

விநாயகர் புராணத்தில் இரண்டாம் காண்டமாகிய லீலா காண்டத்தில் விநாயகப் பெருமான் எடுத்த பன்னிரண்டு அவதாரங்களும் கூறப்பட்டுள்ளன. 

அந்த அவதாரங்களில் அவர், வக்கிரதுண்டர், சிந்தாமணி விநாயகர், கஜநாதர், விக்கினராஜர், மïரேசர், பாலசந்திரர், தூமகேது, கணேசர், கணபதி, மகோத்சுதர், முண்டி விநாயகர் மற்றும் வல்லபை கணேசர் என்ற பெயர்களோடு விளங்கியதாக அப்புராணம் கூறுகிறது. 

பார்வதி தேவி மண்ணால் ஒரு உருவம் செய்து அதற்கு உயிர் கொடுத்து ஸ்ரீ விநாயகராக அவதாரம் செய்வித்தது ஆவணி மாதத்து சதுர்த்தி தினத்தில் தான். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபாடு செய்தல் வேண்டும். 

விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. 

சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம் ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும். விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது. 

அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையே காப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே. 

இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்திவரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது. விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.

                                       ஓம் கம் கணபதயே நமஹ...!!