Tuesday, September 23, 2014

திருவெண்காட்டில் நம் முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற ''மகாளய அமாவாசை'' விரத அனுஷ்டானங்கள் ஆரம்பம் (23.09.2014)

http://www.thiruvenkadumandaitivu.com/2014/09/2309.html
திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ   காசிவிசாலாட்சியம்மை  சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதப் பெருமான்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' எனப்படுகிறது.

 மகாளய பட்சம் எப்போது ஆரம்பம் ஆகுமென்றால், ஆவணி மாதத்தில் பெளர்ணமி முடிந்த மறுநாள் மகாளய பட்சம் ஆரம்பமாகும். அதில் தொடங்கி, புரட்டாசி மாதத்தில் அமாவாசை வரை - அதாவது பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரையிலான இரு வார காலம் (14 நாட்கள்) இந்த மகாளய பட்சம் ஆகும். இந்த மாதம் முழுவதும் முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்தம் என்று கூறுவார்கள் அல்லவா, அதுபோல் திதி கொடுப்பது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்யும் காலம்தான் இந்த மகாளய பட்சம். இதன் உச்சம் தான் மகாளய அமாவாசை ஆகும்.


மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த நடராஐமூர்த்தி.

மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் தனங்களைச் செய்வதால் பன்னிரண்டு மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.


பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.


இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.


யாழ்ப்பாணம் கிரிமலை புனித  தீர்த்தக்கேணி 

மகாளய ஆமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற இடமாக நம் முன்னோர்கள் வகுத்திருப்பது... கங்கை நதிக்கரை, ராமேஸ்வரம், ராமர் தர்பணம் செய்த ராம்காட், பம்பை நதிக்கரை உள்ளிட்ட நதிக்கரைகள் மற்றும் குளங்கள் போன்றவை ஆகும். அங்கு செல்ல இயலாதவர்கள் கோயிலில் வைக்கபட்ட கங்கா தேவியை ஆவாகம் செய்யப்பட்ட பாத்திரத்தில் செய்யலாம்.


மகாளய அமாவாசையில் நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.


மகாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களது அருளையும், ஆசியையும் பெறுவோம்.