Tuesday, October 21, 2014

திருவெண்காட்டில் தீபாவளித்திருநாள் வழிபாடு ! ! ! 22.10.2014 (சிறப்புக்கட்டுரை)


தீபம்’ என்றால் ஒளி விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். 

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம்.

இந்த தீபாவளி திருநாளில் நமக்கு கிடைக்க முதற்காரணம் நரகாசுரன் தான். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் இந்நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இந்த நாள் தான் தீபாவளி…


இதன் வரலாறை காண்போம்…

பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பூமாதேவிக்கும் மகானாக பிறந்தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆக ஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான்.

பெரிய மகரிஷி குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் படித்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.


இதற்கு நடுவில் அவன் பிரும்மாவை நோக்கி கடுந்தவ்ம் செய்யலானான். பிரும்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, “அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், ஏதாவது வரம் கேள்” என்றார். “நான் சாகக்கூடாது ,எனக்கு சாகா வரம் அருளுங்கள்”
உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும் அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்”

ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது என்று வரம் கேட்டான். நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய் என்று பிரம்மா வரம் அளித்தார்.

சாகா வரம் கிடைத்த நரகாசுரனின் அட்டகாசம். எல்லா லோகத்தையும் ஜயிக்க ஆவல் கொண்டு முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட்டான்.

பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டனர்.

கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன் என்றார் கிருஷ்ணர். கிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது.


கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார்.

சத்தியபாம ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் கடாயுத்தை வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர்,


ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்?

சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள், “என் கண்ணனுக்கா இந்த நிலை” என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் கீழே சாய்ந்தான்.


அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். பின் அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான் வரனைக் கொடுப்பதாகச் சொன்னார்.

நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.


இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். தீப ஒளி நாம் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றி வைப்போம்.

தீபாவளி வந்தாலே மனதில் ஒரு குதூகலம், தீபஒளி, தீபங்களின் வரிசை, புது உடைகள், இனிப்புகள், கூடவே பட்டாசுகள் என்று நம் மனக் கண் முன்னால் பல காட்சிகள் வந்து விடுகின்றன.

குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை முதலிலிருந்தே சுத்தப்படுத்தி, வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயார் செய்து கொள்கிறார்கள். மாவிலைகள் கட்டப்படுகின்றன, கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர, பூஜை செய்யப்படுகிறது.

வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்றனர், அன்று கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை, பல இனிப்புக்கள் இலட்சுமிக்குப் படைக்கிறார்கள் அவளை வரவேற்க இரவு முழுவதும் கதவை அடைக்காமல் திறந்தே வைக்கின்றனர், 

மஹாராஷ்ட்ராவில் இதை “பலிபாத்யாமா என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. தீபாவளியின் ஒரு வாரம் முன்பே “ரங்கோலி” என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது.

இதிலே போட்டிகளும் வைத்துப் பரிசுகளும் தரப்படுகின்றன. தீபாவளிஅன்று கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அத்னுள் விளக்குகள் பொருத்துகின்ற்னர்.

அதைத் தன் வீட்டு வாசல், பால்கனியில் எரியவிடுகின்றனர். நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர். தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்க்கின்றனர்.

இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா, அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்ற்னர்.

பின் “பாவுபீஜ்” என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கின்றனர், சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர்.


ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது. கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தது நம் அனைவருக்கும் தெரியும் இதைக் குறித்து “அன்னகுட்” என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள்.

கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள் பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள். சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் “பாய் போலே” என்ற பெயரில் நடக்கிறது.

சீக்கியர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார்.

அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை “பந்தி சோர்ரா” என்று கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்களின் “கால்ஸா” என்ற கூட்டமும் உருவானது அத்துடன் குரு கிரந்த சாஹேப் என்ற புத்தகமும் சிறிது மாற்றங்களுடன் சீக்கியர்களின் குருவானது. ஜைனர்களுக்கும் இது மிக முக்கியமான நாள்.

ஜைனமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள்.

இன்று தீபங்கள் ஏற்றி “உத்தராத்த்யாயன் சூத்ரா”வைப் படிக்கின்றனர்.

இதில் மகாவீரரின் ஐந்துபிரவசங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் அக்ஞான இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும். உங்கள் யாவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை,

புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.

பகவான் நாராயணனின், ஸ்ரீ தேவி, பூதேவி என்னும் இரு மனைவியருள் பூமாதேவிக்குப் பிறந்த நரகாசுரன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவன் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ கிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்தபோது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க நாம் தீபாவளி என்னும் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறோம்.


இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக கருதப்படுகிறது.

கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார விரதம் முடிவுற்ற இத்தினத்தில் தான் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுத்தார். ஆகவே இத்தினத்தை தீபாவளி என்று கொண்டாடுகின்றனர்.

நல்லவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் பல புரிந்து அவர்களைத் துன்புறுத்திய நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த இந்த நாளைத் தான் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.

இந்த நன்நாளில் விடியற்காலையில் எழுந்து கங்காஸ்நானம் செய்து, புத்தாடைகள் அணிந்து, மனதில் மகிழ்ச்சியுடன் இனி வரும் நாளெல்லாம் நமக்கு வாழ்வில் ஓளியேற்றப்போகும் நாட்களே என்னும் நல்ல எண்ணத்துடன் இறைவனை நமஸ்காரம் செய்து, பெரியவர்களின் ஆசியோடு நாம் இருளை அகற்றும் ஒளியை நம் இல்லங்களில் விளக்காய் ஏற்றி, ஒளியை அளிக்கக் கூடிய மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம், தரைசக்கரம், போன்ற ஓளிகூட்டும் பட்டாசுகளை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோம்.

தீபாவளி அன்று அனைவரும் பிரும்ம முகூர்த்தமாகிய அதிகாலையில் எழுந்து மணைகள் போட்டு அதில் அனைவரையும் அமரச் செய்து மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவையை நலங்காக இட்டு மகிழ்வர். இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

ஒவ்வொரு தம்பதியரும் கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் நலங்கு இட்டு வெற்றிலையில் சற்றே சுண்ணாம்பும், பாக்கும் வைத்து மெல்லக் கொடுப்பர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சி தலையில் தடவி விடுவர், அனைவரும் அதன் பிறகு எண்ணெய்க் குளியல் செய்வர். அன்றைய தினத்தில் கங்கையில் ஸ்நானம் செய்தால் புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம். குளித்து முடித்து அனைவரும் புத்தாடைகள் அணிந்துகொண்டு விளக்கேற்றி தெய்வங்களை நமஸ்கரித்துவிட்டு, வீட்டிலிருக்கும் பெரியோர்களையும் வணங்கி ஆசி பெறுதல் வழக்கம். அதன் பிறகு பட்டாசுகள் வெடித்துவிட்டு இனிப்பு பலகாரங்களை உண்டு மகிழ்வதும், நல்ல அறு சுவை உணவு வகைகளை உண்டு மகிழ்வதும், உறவுக்காரர்களின் வீடுகளுக்கு சென்று உறவுகளை பலப்படுத்தி மகிழ்வதும் வழக்கம். 

ஒருவருக்கொருவர் பரிசுகள் தந்து மகிழ்வர்.


உணவுகளை செறிமானம் செய்ய, நம் வயிற்றை சுத்தம் செய்யத் தேவையான அத்துணை மூலிகைகளும் கலந்து ’தீபாவளி லேகியம்’ என்று ஒரு லேகியம் செய்வர்.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

அந்த நீராடலைத்தான் “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் “கங்கா தேவி” வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.


தீபாவளிப் பண்டிகையின் சிறப்பினைப் பற்றி விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், சேஷ தர்மம், ஸ்மிருதி முக்தாபலம் முதலிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.

நித்யான்னிகம் என்ற நூலிலும் தீபாவளி மகிமை கூறப்பட்டுள்ளது. கண்ணனிடம் நரகாசுரன் மரண சமயத்தில் வரம் கேட்டதால் ஏற்பட்டது தீபாவளித் திருநாள் என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும்.

இந்த புண்ணிய தினத்தில்தான் திருமால் திரு மகளைத் திருமணம் புரிந்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால் தீபாவளியை “லக்ஷ்மீ பரிணயதினம்’ என்றே அழைப்பதுண்டு.

இப்படி விவாக கோலத் தில் இருந்த லக்ஷ்மி நாராயண னைத் தேவர்கள் ஒவ்வொரு வராக வந்து வணங்கினர். அப்போது யமதர்மனும் பணிந்து வணங்கினான்.


உடனே தேவி யமனிடம், “இன்றைய தினம் பண்டிகையை முறைப்படி கடைப்பிடிப்பவர்களது வீட்டில், என் உத்தரவின்றி நீ உயிர்களைக் கவர்ந்து செல்லக்கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்தாள். தர்மராஜனும் ஸ்ரீதேவியின் ஆணைப்படியே நடப்பதாக வாக்களித்தான்.

இதனால் மகிழ்ந்த அலைமகள் யமனிடம், “இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்து டன் சோபனாட்சதைகளால் பதினான்கு தர்ப்பணங்கள் செய்து திருப்தி செய்விக்கட்டும்’ என்று வரம் அளித்தாள். இதுவே யம தர்ப்பணமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தவிர தீபாவளியன்று பகவான் நரகாசுரனை வதம் செய்யச் சென்றபோது, அரக்கர்கள் லக்ஷ்மி தேவியைக் கவர்ந்து செல்ல முயற்சித்தனர்.

உடனே திருமகள் சூட்சும ரூபம் தரித்து எண்ணெயில் எரிந்து கொண்டிருந்த தீபத்தில் மறைந்துவிட்டாள்; நரகனை வதைத்துத் திரும்பிய பகவான் அரக்கர்களைக் கொன்று தேவியை மீட்டார் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

இதனால் தான் அன்று தீபத்தையும் தலத்தையும் லக்ஷ்மி ஸ்வரூபமாகக் கொண்டாடுகிறோம். தீப பூஜையும் வட இந்தியாவில் செய்யப்படுகிறது.

தீபாவளிப் பண்டிகையைக் கடைப்பிடிப்பதற்கான விதிமுறைகள் சாஸ்திரங்களில் கூறப்படுகின்றன. ஐப்பசி மாதம் தேய்பிறை யில், அமாவாசைக்கு முன் தினமான சதுர்த்தசியின் பின் இரவில், அதிகாலை மூன்று மணியளவில் துயில் எழ வேண்டும். தீபாவளிக்கு முன் தினம் இரவே வீடு முழுதும் மெழுகிக் கோலமிட்டு அலங்கரிக்க வேண்டும்.

அதிகாலையில் எழுந்ததும் சுத்த மான தண்ணீரை எடுத்துக் குடத்தில் நிரப்பி, சந்தன, குங்கும அட்சதைகளாலும் மலர் களாலும் அலங்கரிக்க வேண்டும்.

பிறகு ஆல், அரசு, புரசு, அத்தி, மாவலிங்கம் ஆகிய ஐந்து மரங்களின் பட்டைகளையும் தண்ணீரில் சேர்த்துக் கலந்து வெந்நீர் தயார் செய்ய வேண்டும். வெந்நீரைத் தயாரித்த பிறகு எண்ணெய்க் குளியலுக்கு முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் நாயுருவிச் செடியினால் தங்களது தலையை மூன்று முறை சுற்றி, பிறரது காலடி படாத இடத் தில் அந்தச் செடியினை எறிந்துவிட வேண்டும்.

இவ்விதம் செய்வதால் நமக்கு ஆத்ம ரக்ஷையும் ஐஸ்வர்யமும் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இதற்குக் காரணம் என்ன வென்றால், ஒரு சமயம் வேத புருஷனான பிரம்ம தேவனிடம் இருந்து அரக்கர்கள் வேதத்தைத் திருடிச் செல்ல எண்ணினார்கள்.

உடனே நான்முகன் “அபாமார்க்கம்’ என்று அழைக்கப்படும் நாயுருவிச் செடிகளாக மாறித் தன்னை மறைத்துக் கொண்டார்.

ஹரி நாராயணன் தோன்றி அரக்கர்களைக் கபடமாக வதம் செய்தார்.

தீபாவளி புண்ணிய தினத்தில்தான் மேற்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது. வேத புருஷனையே ரட்சித்த காரணத்தால்தான் நாயுருவிச் செடியை தீபாவளியன்று அதிகாலையில் நாமும் நமது ரட்சையாகப் பயன்படுத்துகிறோம்.


இவ்விதம் ரட்சை செய்துகொண்ட பிறகு, தீபம் ஏற்றி, தைலம், வாசனாதி திரவியப் பொடிகள், லேகியம், புத்தாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். கண்ணனுக்குப் பூமாலை சார்த்தி நிவேதனம், கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு எண்ணெய் தேய்த்துக்கொண்டு, வெந்நீர் கலசத்தை ஒரு பலகையில் வைத்து, மலர்களை சமர்ப்பித்து கைகளைக் கூப்பியபடி கீழ்க்கண்ட சுலோகத் தைக் கூறவேண்டும்.

“விஷ்ணோ: பாத ப்ரஸ_தாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத் ஆஜன்ம மரணாந்திகாத்
திஸ்ர: கோட்யோர்த்த கோடீச தீர்த்தானாம் வாயுரப்ரவீத்
திவி புவ்யந்தரிக்ஷே ச தானிமே ஸந்து ஜாஹ்னவி’.

இதன் பொருளாவது, “ஹே மாதா! கங்கா தேவி! நீ விஷ்ணுவின் பாதத்தில் தோன்றியதால் வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதிதேவதை யாக உடையவளாகவும் இருக்கிறாய். பிறப்பு முதல் மரணம் வரை உள்ள பாவங்களிலிருந்து எங்களைக் காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, அந்தரிக்ஷம் ஆகிய எல்லாவற்றிலுமாக மூன்றரை கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக வாயு பகவான் கூறியுள்ளார்.

அவை எல்லாம் தங்கள் கருணையால் எனக்காக இங்கு வந்து அருள வேண்டும்’ என்பதாம்.

மேற்கண்டவாறு பிரார்த்தித்து நீராடிய பிறகு, புத்தாடைகள், ஆபரணங்கள் பூண்டு, லக்ஷ்மி நாராயணனை மலர் களால் அர்ச்சிக்க வேண்டும். பலவகை இனிப்புகள், தின்பண்டங்கள், பழங்கள், தாம்பூலம் முதலியவற்றை நிவேதனம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். பகவானையும் பெரியோர்களையும் வணங்கி, வாணவேடிக்கை களாலும் தீபங்களாலும் எங்கும் ஒளிரச் செய்ய வேண்டும். குழந்தைகளை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.
தீபாவளியை வடஇந்தியாவில் மகாபலி தீபம், நரக சதுர்த்தசி, லக்ஷ்மி குபேர பூஜை என்று மூன்று தினங்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்த நரக சதுர்த்தசியன்று உஷத் காலத்தில் சூரியன், சந்திரன் இருவரும் பெரும்பாலும் சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் இது மிகவும் புனிதமான தினம் என்றும்; இந்த நன்னாளில் எண்ணெய் நீராடல், லக்ஷ்மி பூஜை, புத்தாடை உடுத்தல் முதலிய சுபகாரியங்களை அவசியம் செய்யும் படியும் விதிக்கப்பட்டுள்ளது.


இதனை விஷ்ணு புராணம்,

“ஸ்வாதி ஸ்திதே ரவாவிந்துர் யதிஸ்துôதி கதோ பவேத்
பஞ்சத்வ குதகஸ்தாயீ க்ருதாப்யங்க விதிர் நர:’ என்று கூறுகிறது.

தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,

“நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன் ச்ரியமச்னுதே
தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதி ஸ்ம்ருதா’
என்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

மேலும் தீபாவளியில் எண்ணெய்யில் லக்ஷ்மி தேவியும், நீரில் கங்காதேவியும் வசிக்கி றார்கள் என்பதை,

“தைலே லக்ஷ்மீர் ஜலேகங்கா தீபாவளிதினே வஸேத்’
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இத்தகைய தீபாவளி தினத்தில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணனை வழிபட்டு பண்டிகையை மங்களகரமாக அனுஷ்டித்தால் எல்லா நலமும் பெறுவோம் என்பது திண்ணம்.
“கங்காதீர்த்தே மலின மனஸ: பாதகம் க்ஷாலயந்தி’

என்றபடி, சிவதியானத்தில் எப்போதும் ஈடுபட்ட மனத்தினளும், தாயுமானவளுமான கங்காதேவியானவள், இத்தீபாவளித் திரு நாளில் நம் அனைவரது இல்லங்களிலும் எழுந்தருளி நமது மூவினைகளையும் அழித் துப் பன்னலங்களையும் அருளப் பிரார்த்திப் போமாக.

“கங்காதேவி நமஸ்துப்யம் சிவ சூட விராசிதே
சரண்யே ஸர்வ பூதானாம் த்ராஹிமாம் சரணாகதம்.