Thursday, November 27, 2014

திருவெண்காட்டில் வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம் (26/11/2014)

http://www.thiruvenkadumandaitivu.com/2014/11/27112014.html


எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் படைத்து வணங்குகிறோம்.

கனி:

விநாயகருக்கு கனி படைப்பதின் காரணம், மனிதா! நீ இறைவனால் படைக்கப்பட்டவன். என்றேனும் ஒருநாள் அந்த இறைவனை அடைந்துதான் ஆக வேண்டும். பொருள்தேடி 24 மணி நேரமும் உழைப்பதிலோ எந்த தவறும் கிடையாது. ஆனால், அந்த உழைப்பின் பலனை நீ உனது மனைவி, குழந்தைகள் அனைவருக்கும் அந்த சொத்துக்களை எழுதி வைத்திருக்கலாம். ஆனால், இந்த உலகத்திற்காக நீ ஏதாவது செய்ய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறான். குறைந்தபட்சம் ஒரு அன்னதானமாவது செய்தாயா என யோசித்துப்பார். ஏனெனில் நீயும் ஒருநாள் எனக்கு படைக்கப்பட்ட கனி போல பழுத்துவிடுவாய். பழுத்தகனி மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். அதாவது, உன் வாழ்க்கை அழிந்துபோகும். அதற்கு முன்னதாக நீ காய் பருவத்திலேயே (வாழும்போதே) நல்லதைச் செய்துவிடு, என்பதைக் குறிப்பால் காட்டுவதற்கு ஆகும்.

அவல்:

விநாயகருக்கு அவல் படைக்கப்படுகிறது. அவலை அரிசியிலிருந்து தயாரிக்கிறோம். அது உரலில் எந்த அளவுக்கு இடிபடுகிறதோ அந்த அளவுக்கு சுவையான அவல் கிடைக்கிறது. அரிசி உரலுக்குள் இடிபடுவதுபோல, மனிதனாகப் பிறந்தவனும் பசி, பட்டினி, வறுமை, நோய் நொடி என வாழ்க்கைச் சூழலில் சிக்கி இடிபட்டுத்தான் ஆகவேண்டும். இந்த துன்பங்களுக்கு காரணம் அவரவர் வினைகளே. எறும்பை நீங்கள் நசுக்கக்கூடாது, கடிக்க வந்தாலும் தூர தள்ளி விட்டால் போதும். மீறி அடித்தால் அடுத்த பிறவியில் இதே துன்பத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டி வரும். எனவே துன்பங்களுக்கு காரணம் அவரவர் செய்த பாவங்களே என்று குறிப்பிடுவதே அவல் படைப்பதின் தத்துவமாகும்.

அப்பம்:

அப்பம் மாவிலிருந்து தயார் செய்யப்படுகிறது. மாவு முதலில் பக்குவப்படாமல் இருக்கிறது. அதை உருட்டி, இலையில் வைத்து தட்டையாக்கி, எண்ணெய்ச்சட்டியில் போட்டு எடுக்கிறோம். பச்சை மாவு உருண்டை எண்ணெய்ச்சட்டிக்குள் விழுந்ததும் சடசடவென கொதிக்கும். பாவம் செய்த மனமும்  இதுபோல்தான் பதறித் துடிக்கும். எதற்கும் பயப்படும். பரபரப்பு அடையும். சற்று வெந்ததும் மாவின் சத்தம் அடங்கி போகும். வாழ்க்கையிலும் அனுபவப்பட்டுவிட்டால் வெந்த அப்பத்தைப் போல மனம் பக்குவப்பட்டுவிடும். பக்குவப்பட்ட மனமுடையவனுக்கு இறையருள் எளிதில் கிடைத்து விடும்.

பொரி:

விநாயகருக்கு பொரி படைப்பதன் நோக்கம் மீண்டும் பிறவி எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான். பொரிக்கு எப்படி வளரும் சக்தி கிடையாதோ அதுபோல் மறுபிறவி என்ற சொல்லையே மறந்துவிட்டு இறைவனுடன் ஐக்கியமாகிவிடு, என்பதே இதன் பொருள்.



இரட்டைப் பிள்ளையார்:

சில கோயில்களில் இரட்டைப்பிள்ளையாரை பார்க்க முடியும். விநாயகர் முழுமுதற் கடவுள் என்பதால் சிவன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் அவரை வணங்கிய பிறகே எந்த காரியத்தையும் தொடங்குவார்கள். விநாயகரே ஒரு காரியத்தை தொடங்க வேண்டும் என்றாலும் கூட தன் அருகில் மற்றொரு விநாயகரைப் படைத்து வணங்கியபிறகே செயலைத் தொடங்க வேண்டும் என்பதற்காக இரட்டைப்பிள்ளையார் சன்னதிகள் சில கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. மகாபாரதத்தை விநாயகர் எழுதத் துவங்கும் போது தன்னைத்தானே வணங்கி எழுதத் துவங்கினார் என்றும் சொல்வதுண்டு.

தோப்புக்கரணம்:

விநாயகருக்கு தினமும் 30 தோப்புக்கரணம் போடுவது சிறப்பானதாக அமைகிறது. இவ்வாறு செய்தால் பக்கவாதம் வராது. அறிவுச்சுடரை தூண்டுவதற்காகத் தான் தலையில் குட்டிக்கொண்டே தோப்புக்கரணம் போடுகிறோம். அது மட்டுமின்றி தாழ்வு, உயர்வு மனப்பான்மையை நீக்கி, சம உணர்வை உண்டாக்குகிறது.

http://www.thiruvenkadumandaitivu.com/2014/11/27112014.html


வயிறு:

விநாயகருக்கு வயிறு பெரிதாக இருக்கிறது. இதற்கு காரணம், மனித உறுப்புகளிலேயே வயிறுதான் சிறப்பான குணமுடையது. வயிற்றுக்குள் செல்லும் உணவு ஜீரணிக்கப்பட்டு ரத்தமாக மாறி உடல் முழுக்க செல்கிறது. மனிதனும் வயிறைப் போலவே இருந்து தனக்கென மட்டும் வைத்துக்கொள்ளாமல், பிறருக்கும் உதவ வேண்டும் என்ற தத்துவத்தை எடுத்து சொல்கிறது.

ஒடிந்த கொம்பு:

விநாயகருக்கு ஒரு கொம்பு ஒடிந்ததற்கு புராணக்கதை அனைவருக்குமே தெரியும். அவர் வியாசர் சொல்லச்சொல்ல பாரதத்தை முதலில் எழுத்தாணி கொண்டுதான் எழுதினார். ஒரு கட்டத்தில் எழுத்தாணி தேய்ந்து விட்டது. தன் பணியைத் தடையில்லாமல் செய்ய தனது தந்தத்தை உடைத்து எழுத ஆரம்பித்தார். எல்லா மனிதர்களுக்குமே ஒரு காரியத்தை செய்யும் போது தடை வருகிறது, எந்தத் தடையையும் கண்டு நீங்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது. என்ன வசதி இருக்கிறதோ அதைக்கொண்டு காரியத்தை தொடர்ந்து நடத்தி வெற்றிபெற வேண்டும் என்பதையே உடைந்த கொம்பு எடுத்துக்காட்டுகிறது.

பெருச்சாளி வாகனம்:

விநாயகர் யானை வடிவத்தை கொண்டவர். ஆனால், பெருச்சாளியின் மீது அமர்ந்திருக்கிறார். இதற்கு என்ன பொருள் தெரியுமா? இறைவனைப் பொறுத்தவரை எளியதும் வலியதும் ஒன்று தான். அவர் எல்லாருக்கும் ஒரே மாதிரியாகத் தான் அருள் செய்வார். எல்லாரையும் சமமாகவே பாவிப்பார் என்ற தத்துவம் தான்.

http://www.thiruvenkadumandaitivu.com/2014/11/27112014.html


அரசமரம்:

விநாயக பெருமான் அரசமரத்தடியில் வீற்றிருக்கிறார். கண்ணபரமாத்மா கீதையில் மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன் என சொல்கிறார். அரசமரம் அதிகமாக ஆக்சிஜனை அவை வெளிவிடும் என்பதால்தான். அரசமரத்திற்கு 95 சதவீதமும், வேப்பமரத்திற்கு 90 சதவீதமும் ஆக்சிஜனை வெளியிடும் சக்தி இருக்கிறது. எனவேதான் அரசும் வேம்பும் இணைந்த நிலையில் விநாயகர் சிலைகளை அதன் அடியில் வைப்பதுண்டு. மேலும் அரசமர பட்டையில் செனட்டோனியம் என்ற ரசாயனப் பொருள் உள்ளது. இப்பொருள் கர்ப்பம் தரிக்கும் ஆற்றலை வளர்க்கும். இதன் காரணமாகத்தான் குழந்தை இல்லாத பெண்களை அரசமரத்தை சுற்றிவரச் சொல்கிறார்கள்.

மாவிலைத் தோரணம்:

விநாயகர் சதுர்த்தி மற்றும் வீட்டு விசேஷங்களில் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள். மாமரத்திற்கு கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் உண்டு. ஒரு கோயிலுக்குள் கூட்டமாக மக்கள் நிற்கும்போது சுவாசத்தின் காரணமாக கார்பன்டை ஆக்சைடை அதிகமாக வெளியிடுவார்கள். இதையே திரும்பத்திரும்ப சுவாசிப்பதால் உடலுக்கு கேடு உண்டாகும். மாவிலைகள் கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி விடும். மங்களகரமான வீடுகளில் மட்டுமின்றி, துக்கவீட்டிலும் மாவிலை தோரணம் கட்டுவதுண்டு. அடையாளம் தெரிவதற்காக மாவிலையின் நுனியை துக்கவீடுகளில் மேல்நோக்கி கட்டுவார்கள். சுபகாரியம் நடக்கும் வீடுகளில் கீழ்நோக்கி கட்டுவார்கள்.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''