Tuesday, December 16, 2014

மார்கழி மாத விரதங்களின் மகிமையும் சிறப்புக்களும் ! ! !


மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும்.

இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம்.

இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்'' என்று வட மொழியில் சொல்வர். "மார்கம்'' என்றால், வழி- "சீர்ஷம்'' என்றால், உயர்ந்த- "வழிகளுக்குள் தலைசிறந்தது'' என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது.
இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. "உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், நீ வந்து என்னை ஆட்கொள்...'' என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள். முப்பது நாள் கடுமையான நோன்பிருந்தாள். எண்ணியபடியே இறைவனையும் துணைவனாக அடைந்து விட்டாள்.

பூமியில் பிறந்தவர்கள், ஹரிநாமம் சொல்வதன் மூலம், நிச்சயம் அவனை அடைய முடியும் என்று, இந்த கலியுகத்திலும் வாழ்ந்து காட்டியவள் ஆண்டாள். அவள் தியாகச்செம்மலும் கூட, திருமாலின் துணைவியான பூமாதேவியே, ஆண்டாளாக அவதரித்தாள். கலியுகத்தில், இறைவனை அடைய, நாமசங்கீர்த்தனமே உயர்ந்தது என்பதை உலகத்தாருக்கு எடுத்துரைக்க, பூலோகத்துக்கு செல்லும்படி லட்சுமியிடம் சொன்னார் திருமால்.
அவள் மறுத்து விட்டாள். "ஏற்கனவே சீதையாக பிறந்து, என் மேல் சந்தேகப்பட்டு, என்னைப்படுத்தியது போதாதா? இன்னொரு முறை பூலோகம் சொல்லவே மாட்டேன்...'' என்றாள். பூமாதேவியை திரும்பிப் பார்த்தார் திருமால். பூலோகம் சென்றால் கஷ்டப்படுவோம் என்று தெரிந்தே, உலக நன்மைக்காக அவள் இங்கு வர சம்மதித்தாள்.

ஸ்ரீ ஆண்டாள் 


ஆண்டாள் என்னும் பெயருடன், ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற புண்ணிய ஷேத்திரத்தில், பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள். இறைவனை அடையும் வழியை எடுத்துக் காட்டிய பிறகு, அவரோடு கலந்தாள். திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகப் பெருமானும், தியாகச் செம்மலாகத் திகழ்ந்தார். அவர், மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தார்.
சிறந்த அறிஞரான அவரை, பாண்டிய மன்னன் தன் அமைச்சராக்கி, அழகு பார்த்தான். அரசாங்கப் பணியை விட, ஆண்டவன் பணியே உயர்ந்ததெனக் கருதி, அதை உதறியவர், சிவபெருமானின் குரு வடிவ தரிசனம் பெற்றார். ஆவுடையார் கோவில் திருப்பணியை திறம்பட நடத்தினார். திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி என்னும் தலைப்பில் தித்திக்கும் பாடல்களை எழுதினார்.

ஸ்ரீ மாணிக்கவாசகர்


இந்தப் பாடல்களைப் பாடி, நோன்பிருந்த பெண்கள், சிவ பக்தர்களை கணவனாக அடையும் பாக்கியம் தரும்படி சிவபெருமானிடம் வேண்டினர். மார்கழி விரதம்..... மார்கழி மாத நோன்பு, மிகவும் சிறந்தது. மார்கழி மாத வழிபாடு வழி வழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.
சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம்  குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும். "இறைவா... என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து...'' என வணங்குங்கள், இறைவன் நல்லருள் தருவான்.
பலன்கள்
மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.
மார்கழியின் சிறப்பு
மார்கழி மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை. திருவெம்பாவை விரத காலத்தில் சைவர்கள் வீதி தோறும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடிக்கொண்டும், ஒவ்வொரு பாடல் முடிவிலும் சங்கு ஊதிக்கொண்டும் கோவில்களுக்கு செல்வர். விஷ்ணு கோவில்களில் மார்கழி முழுவதும் திருப்பாவை பாடுவர். இம்மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் மற்றும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்.
திருப்பாவை
திருப்பாவை 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவ சக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவை பாடல்கள் ஆகும். தமிழகத்தில் மார்கழி மாதத்தில்தான் கன்னிப்பெண்கள் பாவை நோன்பு இருக்கின்றனர். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டு முன்பு கோலம் போட்டு இறைவனை வழிபடுகின்றனர்.
மார்கழி கோலம்
மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீர லுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மனம் தூய்மையாகும். கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும். கோலத்திற்கு அரிசி மாசு பொடி பயன்படுத்துவது நல்லது. சாதாரண கோலப் பொடிகளை பயன்படுத்தக் கூடாது.

ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''