Sunday, December 20, 2020

மண்டைதீவு திருவெண்காட்டில் மார்கழி திருவாதிரை ஆருத்திரா தரிசனம் 21.12.2020 சிறப்பு கட்டுரை



மார்கழி மாதத்தின் சிறப்பு

ஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலம் தை மாதம் ஆகும் .. தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம் ஆகும்.. தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.


சிவகுடும்பம் திருவெண்காடு மண்டைதீவு 




திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு  ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை  அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான்  ஸ்ரீ பாலமுருகன்  ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் 

மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சைவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.



திருவாதிரை நட்சத்திரம்




மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகின்றது.திருவாதிரைக்கு முந்திய பத்து தினங்கள் திருவெம்பாவையாகும்.அனைத்துசைவாலயங்களிலும் 10 நாட்களும் தினமும் உதயத்தின் முன் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை ஓதப்படும்.சிவபெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை, அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருழுகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் அன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. நட்சத்திரங்கள் மொத்தம் 27, இவற்றுள் இரண்டு நட்சத்திரத்திற்கு மட்டுமே நாம் திரு என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றோம், அவை திருவாதிரை மற்றும் திருவோணம் ஆகும்..



ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான சிவபெருமான் பிறப்பு, இறப்பு அற்றவர். எக்காலத்திலும் கருவிலே பிறவாத பெருமையுடையவர்..ஓருருவம், ஓர் நாமம் இல்லாதவர்.ஆனால் நாமோ அவருக்கு ஆயிரம் நாமம் இட்டு அழைத்தும், பல்வேறு மூர்த்தங்களாக அமைத்தும் வழிபடுகின்றோம். மேலும் மானிட இயல்பினால் அந்த எல்லையில்லாத பரம்பொருளை இரவு பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணியும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பியும் மகிழ்ச்சி கொள்கின்றோம்.




அவ்வாறே அவருக்கு ஒரு நட்சத்திரத்தையும் உரியதாக்கினோம். ஆம் இறைவன் சிவன் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்று அழைத்தும், அந்த திருவாதிரையன்று ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடவும் செய்கின்றோம். இதைவிட ஆதிரை நட்சத்திரம் தோன்றிய வரலாறும் உண்டு. ஆதிரை என்ற பெண்மணி முதலிரவில் தன் கணவனை இழந்தாள். அவள் சிவபெருமானிடம் இரந்து வழிபட்டு, அருள்பெற்று தன் கணவனை மீட்டாள். மேலும், வான மண்டலத்தில் நட்சத்திர அந்தஸ்து பெறும் வரமும் பெற்றாள்.




எம்பெருமான் சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன.இவற்றுள் ஆருத்ரா தரிசன நாள் சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியான அஷ்ட மஹா விரத நாள் ஆகும்.

தில்லை சிதம்பரம் ஸ்ரீ நடரஐர் திருக்கோவிலில் 

ஆருத்ரா தரிசனம்


மானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அவர்கள் சிவபெருமானிற்கு செய்கின்ற ஆறு கால பூசையே அம்பலவாணருக்கு வருடத்தில் நடைபெறுகின்ற ஆறு திருமுழுக்குகள் ஆகும். தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான (அதிகாலை), மாதங்களில் சிறந்ததான மார்கழியின் மதி நிறைந்த நன்னாளம் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் இந்த நாளில் வரும் திருவாதிரை தினம் தான் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களூம் அலங்காரங்களும் திருவிழாக்களும் நடைபெறும் தினமாகும். 

அன்று தான் சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண விரும்பிய பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து நடராஜ பெருமானாக தனது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளினார் என்பது வரலாறு. 

தில்லை அம்பல ஆனந்த தாண்டவ நடராஜர்


எம்பெருமானின் பஞ்ச சபைகளுள் முதலாவதான கனக சபையாம் தில்லை சிற்றம்பலத்தில் இத்திருவிழா பத்து நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது இரவிலே அம்மையும் அப்பனும் தங்க மற்றும் வெள்ளி மஞ்சங்களிலே திருவீதி உலா வருகின்றனர். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடை பெறுகின்றது.

ஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர, ஐயன் (சிவன்-ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தி) 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும், 3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும், 4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும், 6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும், 7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார். 8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்திய எழில் மிகு மூர்த்தியாக தங்க ரதத்தில் வெட்டுங்குதிரை எழிற் கோலம் காட்டுகின்றார்..


9ம் நாள் காலை எம் கோனும் (சிவன்-மூலமூர்த்தி-நடராஜர்) எங்கள் பிராட்டியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கண்டருளுகின்றார்.

மூல மூர்த்தியாக உள்ள இறைவனே உற்சவ மூர்த்தியாக வீதி உலா காண்பது சிதம்பரம் ஆலயத்தின் தனி சிறப்பு. மூலவரை தரிசிக்க முடியாதபடி உடல்குறை உள்ளவர்களும் அல்லது வயோதிகம் கொண்டவர்களும் உற்சவர் பிரம்மோற்சவ காலங்களிலும் மற்ற திருவிழாக்க்காலங்களிலும் தம் வீடு இருக்கும் தெருவழியே செல்லும் போது உற்சவரை கண்டு களிப்பது வழக்கம். அதாவது உற்சவர் கோலத்தில் மூலவரை தமது இல்லத்தில் இருந்தே கண்டு தரிசிப்பர். ஆனால் சிதம்பரத்தில் அத்தகைய பக்தர்களுக்கு மூலவரையே தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது பெரும் பேறுதானே.


தினமும் மாலையில் தேவ சபையிலிருந்து மாணிக்க வாசகர் சித்சபைக்கு எழுந்தருளி திருவெம்பாவை பதிகங்களை விண்ணப்பித்து அருளுகின்றார். அப்போது ஓதுவார்கள் பாராயணம் செய்ய அனைத்து பக்தர்களும்(சுமார் 100) கூடவே திருவெம்பாவையை பாராயணம் செய்கின்றனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அண்டர் நாயகனுக்கு தீபாராதனை காட்டப்படுகின்றது. பின் மாணிக்கவாசகர் தேவ சபைக்கு திரும்புகிறார். காலை உற்சவத்தில் மாணிக்க வாசகரும் எழுந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன் மாணிக்க வாசகருக்கும் தீபாராதாணை காட்டப்படுகின்றது. சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் முடிந்தத்ற்கு அடுத்த நாள் மாணிக்கவாசகருக்கு விடையாற்றி விழா நடைபெறுகின்றது.

திருகேதீஸ்வரபெருமானும் கௌரியம்பாளும்


பத்தாம் நாள் திருவாதிரையன்று அருணோதய காலத்தில், பிரம்ம முகூர்த்தத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது, பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் அனைத்தும் நதியாகவே பாய்கின்றன அய்யனுக்கும் அம்மைக்கும்...அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி. அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலே போதும் நம் துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும். பின்னர் சர்வ அலங்காரத்துடன், எம்பெருமான் ராஜ சபையிலே ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் சிற்றம்பலவனார். சித்சபையிலே ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது.


பின் தீர்த்தவாரி கண்டருளிய பஞ்ச மூர்த்திகளுடன் ஆருத்ரா மஹா தரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார். 11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது. ஆனி உத்திரமும் பத்து நாள் பெருவிழா என்றாலும் மாணிக்க வாசகர் திருவெம்பாவை பாராயணமும், பின்னர் சித்சபைக்கு திரும்பும் போது கோவிலுக்குள் சிறப்பு நடனமும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே நடைபெறுகின்றது.

"ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் 
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் 
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து 
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே".. 

ஈழத்துச் சிதம்பரத்தில் திருவெம்பாவை பாடப்படுதலும், சுவாமி மஹா ரதோற்சவத்திற்கு தயாரயிருத்தலும்.

திருவாதிரை விரதத்தின் பெருமை, அனுஷ்டிக்கும் முறை, ஆனந்த நடராஜபெருமானின் 6 அபிடேக தினங்கள் :


இதற்கு முந்தைய பதிவில் மார்கழி மாதத்தின் பெருமையையும், பிறப்பிலியாகிய சிவபெருமான் எவ்வாறு திருவாதிரை நட்சத்திரத்திட்கு உரியவராகி திருவாதிரையான் ஆனார் என்பதையும் பார்த்தோம்., படிக்காதவர்கள் படிக்க!!.. இன்றைய பதிவில் நடராஜப் பெருமானின் ஏனைய அபிசேக தினங்களையும் , திருவாதிரையில் அருள் பெற்ற பதஞ்சலி, வியாக்ரக பாதர் ஆகியோரது வரலாற்றையும் பார்ப்போம். 

ஸ்ரீ நடராஜபெருமானின் 6 அபிடேக தினங்கள்.


எமது ஒருவருடமே தேவர்களின் ஒருநாளாகும். எமக்கு எவ்வாறு சிவாலயங்களில் 6 கால பூஜை ஆகமங்களில் விதிக்கப்பட்டதோ அவ்வாறே தேவர்களும் சிவபெருமானை 6 காலங்களும் பூஜித்து அருள் பெறுகின்றனர். ((இன்று நாம் தினமும் ஒருகாலமாமது சிவபெருமானை வழிபடுவதை மறந்துவிட்டோம் என்பது குறிப்பிடத்தக்கது)). அந்த 6 காலங்களுமே ஆனந்த நடராஜ மூர்த்தியின் 6 அபிடேக தினங்களாகும். இந்தத் தினம் தவிர வேறு எந்த நாட்களிலும் நடராஜருக்கு அபிடேகம் நடப்பதே இல்லை. அவையாவன…


1, ***மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்,- தேவர்களின் அதிகாலை பூஜை, (தனுர்மாத பூஜை),- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்

2, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் காலை சந்தி பூஜை,-அபிசேகம் மட்டும்.

3, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம் – தேவர்களின் உச்சிக்கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

4, ***ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் – தேவர்களின் சாயங்கால பூஜை.- சிறப்பு அபிசேகம் , நடராஜர் உற்சவம்.



5, ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் இரண்டாம் கால பூஜை,- அபிசேகம் மட்டும்.

6, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி – தேவர்களின் அர்த்தஜாம பூஜை.- அபிசேகம் மட்டும்.

***திருவாதிரை விரதித்தின் பெருமை***


ஸ்கந்த புராணத்தில் ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை, முழுப் பௌர்ணமி கூடிய தினத்தன்று தான் நடராஜப்பெருமான் மாமுனி பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் தனது ஆனந்த தாண்டவ திருக்கோலத்தை தில்லையில் காட்டியதாக வரலாறு., வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகியோர் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

மாமுனி பதஞ்சலி :-

பதஞ்சலி முனிவர் பூர்வ ஜன்மத்தில் வைகுந்தத்தில் ஆதிசேடனாக இருந்து திருமாலை தாங்கியவர். பாற்கடலில் பரந்தாமன் பள்ளிகொள்ளும் போது ஒருமுறை ஆதி சேடன் என்கிற நாகம் திருமாலின் பாரம் கூடிகொண்டுபோவதாக உணர்ந்தார். இதற்கான காரணத்தையும் திருமாலிடம் வினாவினார். அதற்கு திருமால் கூறினார் தாம் யோக நித்திரையில் இருந்தபடி பரமேஸ்வரரின் திருநடனத்தை மீட்டு ரசித்துக்கொண்டிருப்பதாகவும், அதனால் தன் உடலில் சக்தி பெருக, உடல் நிறை கூடிக்கொண்டு சென்றது என்று காரணம் கூறினார்.-( இதனால் தான் தில்லையில் ஆனந்த நடராஜ மூர்த்தியை நோக்கியவாறே திருமால் பள்ளிகொண்டவராக, மூலஸ்தானதிட்கு எதிரே தனி சன்னதியுடன் வேறெந்த சிவாலயத்திலும் இல்லாதவகையில் இங்கு மட்டும் எழுந்தருளியுள்ளார் ).-


இதை கேள்வியுற்ற ஆதிசேடனிட்கு தாமும் அந்த திருநடனத்தை காணவேண்டுமென்று ஆவல் பெருக, அதற்கு வழிகாட்டுமாறு திருமாலிடம் இரந்தார். திருமாலும் அதற்கியைந்து பின்வருமாறு கூறலானார். பூலோகத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த சிதம்பரம் என்கின்ற தில்லை வனத்தில் வியாக்ரகபாதர் என்கின்ற புலிக்கால் முனிவர் சிவபெருமானின் திருநடனத்தை காண தவம் செய்வதாகவும், அவருடன் சேர்ந்து தவத்தை தில்லையில் தொடர்ந்தால் இலகுவில் ஆதிசேடனின் எண்ணம் நிறைவேறுமெனவும் கூறினார்.

அதன்படி அத்திரி மகரிஷி- அனுசுயா தேவி தம்பதியரின் மகனாக ஆதிசேடன் அவதரித்தார். அவருக்கு பதஞ்சலி என்ற பெயர் வைக்கப்பட்டது. பதஞ்சலி முனிவர், தன்னுடைய ஏழு நண்பர்களுடன் இணைந்து நந்திதேவரிடம் இருந்து இறைவழிபாட்டுடன் இணைந்த, மனம், வாக்கு, உடல் சுத்தம் என்னும் வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தேர்ந்தார். இவரே இன்று உலகம் முழுதும் அரிய பொக்கிசமாகபோற்றும் யோக கலையை உலகிற்கு இலகு வடிவில் யோக சூத்திரமாக அறிமுகப்படுத்தியவர்.


அதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல ஊர்களுக்கும் சென்றார். அதன் ஒரு பகுதியாக தன் பிறப்புக்கு காரணமான நடராஜ பெருமானின் ஆனந்த தாண்டவம் காணும் விருப்பதின் அடிப்படையில் சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு நெடுங்காலம் தங்கி திருமூலட்டானர் என்னும் நாமத்துடன் விளங்கிய சுஜம்பு மூர்த்தியாகிய சிவலிங்க பெருமானை தரிசித்து தவமியற்றினார். நற்றவத்தின் பயனாக சிவபெருமானின் திருனடனத்தினை பௌர்ணமியுடன் கூடிய மார்கழித் திருவாதிரை நாளில் காணும் பேறும் பெற்றார் .

மாமுனிவர் விஜாக்ரகபாதர்.

பதஞ்சலி முனிவருடன் தில்லையில் நடனம் கண்ட மற்ற முனிவர் வியாக்ரகபாத முனிவராவார். இதனால் தான் இவர்கள் இருவரின் திருவுருவங்கள் அனேகமாக நடராஜரிட்கு முன்னே ஸ்தாபிக்க பட்டிருக்கும். இவர் பதஞ்சலி முனிவரின் பிறப்பிற்கு முன்பிருந்தே தில்லை வனத்தில் தவமியற்றிக் கொண்டிருந்தவராவார். மத்யந்தின முனிவரது மகனே புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படுகிறார். தமது தந்தையைப் போலே சிவபெருமானை அர்ச்சித்து வழிபட ஆசைக்கொண்ட அவர், தினமும் தில்லை வனத்தில் இருந்த சிவலிங்கத்திற்கு அங்குள்ள வனத்தில் பூப்பறித்து வழிபட்டு வரலானார்.


அடர்ந்த காடு, வழ வழப்பான மரங்கள், பழுத்துக் கிடக்கும் பூக்கள், வண்டு தேன் எடுத்த மலர்கள்.... இவையெல்லாம் அவரது பூஜைக்கு இடையூறாய் இருக்க...அவர் வேறு யாரிடம் வேண்டுவார்!? சிவனாரிடமே வேண்டினார்.!! என்னவென்று!? " ஐயா... ஸ்வாமி.... எனக்கு புலிகளுக்கு இருப்பது போல கால்களைக் கொடு.... அந்த கால்களில் உள்ள நகங்கள் இடையூறின்றி மரமேறவும், நல்ல பூக்களைப் பறிக்கவும் எனக்கு அருள் புரிவாய்! மேலும் உடல் முழுவதும் கண்களை கொடு சிறந்த பூக்களைத் தேடித் பறித்து சிவபூஜை செய்ய. . உன் பூஜைக்கு இடையூறு அளிக்காதே! என்ன ஒரு அற்புதமான வேண்டுதல் பாருங்கள்.!! இவரும் பதஞ்சலி முனிவருடன் சிவபெருமானின் திருனடனத்தினை பௌர்ணமியுடன் கூடிய மார்கழித் திருவாதிரை நாளில் காணும் பேறும் பெற்றார்..



திருவாதிரை விரதத்தினை அனுஷ்டிக்கும் முறை

பரமனிடம் பாற்கடலையே பெற்ற உபமன்யு முனிவரை வியாக்ர பாதர் மகனாக பெற்றது இவ்விரத மகிமையால்தான். விபுலர் என்னும் பிராம்மணர் இவ்விரத மகிமையால் பூத உடலுடன் திவ்ய வாகனத்தில் திருக்கயிலாயம் சென்று திரும்பி வந்தார், பின்னர் பலகாலம் பூவுலகில் இனிது வாழ்ந்து முக்தியும் பெற்றார். திருவாதிரையன்று எம்பெருமான் ஆனந்த நடமாடி களித்திருப்பதால் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் அவரை எளிதில் திருப்திபடுத்தலாம்.


ஸ்கந்த புராணத்தில் கூறியுள்ளபடி மார்கழிமாத திருவாதிரை அன்று காலை எழுந்து ஆனந்தக் கூத்தாடும் அம்பல வாணரையும் அம்மை சிவானந்த வல்லியையும் ஆத்மார்த்தமாக வணங்கி உடல் சுத்தி செய்து, திருநீறந்து பஞ்சாக்ஷர மந்திரம் ஓதிக் கொண்டு சிவாலயம் சென்று எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, அமுது படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு, நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து அந்த எம்பெருமானையே நினைத்துக் கொண்டிருந்து, ”பொன்னம்பலம் நீடூழி வாழ்க”, சித் சபேசா, ஆனந்த தாண்டவ நடராஜா, சிற்றம்பலா, அம்பலவாணா என்று பல் வேறு நாமங்களால் போற்றி வணங்கி மறு நாள் காலை எழுந்து முக்கண் முதல்வரை வணங்கி அவரின் அடியவர்களுக்கு அமுது செய்வித்து, பின் தானும் பிரசாதம் புசித்து விரதத்தை முடிக்க வேண்டும்.


தில்லை சிதம்பரத்தில் ஆதிரைத் திருநாள் (திருவாதிரைக் களி தோன்றிய சுவையான வரலாறு):



சேந்தனார் பட்டினத்தாரிடம் கணக்கராகப் பணி புரிந்த அருளாளர். அம்பலத்தாடும் இறைவனிடம் பேரன்பு பூண்டவர். பட்டினத்து அடிகள் துறவு பூண்ட பின்னர் சேந்தனார் துணைவியாருடன் தில்லைத் தலம் சென்று தங்கி வருகிறார். அங்கு விறகு வெட்டி அதன் மூலம் கிடைக்கும் சிறு வருவாயில் சிவனடியார்க்கு அமுது செய்விக்கும் திருத்தொண்டினையும் புரிந்து வருகிறார்.



ஒரு சமயம் கடுமையான மழையின் காரணமாக விறகு விற்பது தடை படுகிறது....சிறிதும் மனம் தளராத சேந்தனார் கேழ்வரகில் களி செய்து அடியவருக்காகக் காத்திருக்கிறார். திருநடத்தால் ஐந்தொழிலும் புரிந்து அருளும் ஸ்ரீநடராஜப் பெருமான் சேந்தனாரின் அடியவர் பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் பற்றுகிறார்.



அடியவர் உருக் கொண்டு சேந்தனாரின் இல்லத்துக்கு எழுந்தருளுகிறார். அகமகழும் சேந்தனார் அடியவரைப் பணிந்துப் போற்றி திருவமுது செய்விக்கிறார். ஆலகால நஞ்சினை உண்டருளும் பெற்றி கொண்ட பெருமான் சேந்தனார் அன்பு மீதுர அளித்த களியுணவினை இனிது உண்டு அருள்கிறார்.



செல்லும் முன் எஞ்சி இருந்த களியையும் தமக்கு அளிக்குமாறு வேண்டிப் பெற்றுச் செல்கிறார். பின்னர் சிற்சபையில் மேவி அருள்கிறார். அதிகாலையில் கருவறையைத் திறக்கும் அர்ச்சகர்கள் பெருமானைச் சுற்றிலும் களி அமுதின் சிதறல்களைக் கண்டு பெரிதும் வியக்கின்றனர்.



மன்னனின் கனவில் அம்பலவாணர் நடந்தேறிய நிகழ்வினை உணர்த்தி அருளுகிறார். அனைவரும் சேந்தானரின் திருவடி பணிந்துப் போற்றுகின்றனர். சிவகாமி அம்மையை பாகமாகக் கொண்டருளும் பொன்னம்பலத்து இறைவனும் அடியவர் சிறப்பிக்கப் படுவதைக் கண்ணுற்று திருவுளம் மகிழ்ந்துத் திருவருள் புரிந்தருளுகிறார்.



இவ்வற்புத நிகழ்வு நிகழ்ந்தேரியது ஒரு திருவாதிரைத் திருநாளில். இதனை நினைவு கூறும் பொருட்டே ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரைத் திருநாளில் களியமுது செய்வித்து ஆதிரை நாயகனான பரமனுக்கு நிவேதிக்கும் மரபு தோன்றியது.



சேந்தனார் ஒன்பதாம் திருமுறை - திருவிசைப்பாவில் சில பாடல் தொகுப்புகளையும், திருப்பல்லாண்டையும் அருளிச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது (சிவாய நம)

"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க

அன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே"


ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'