Friday, April 3, 2015

திருவெண்காட்டில் அனைத்து நலன்களும் தரவல்ல பங்குனி உத்தர திருவிழா ! ! ! 03.04.2015


மிழ்மாதத்தில் நிறைவான மாதமாக வருவது பங்குனி மாதம்.

இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் நட்சத்திரத்தால் பவுர்ணமியின் பலன் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது."திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிபால மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும்  ஸ்ரீ வள்ளி தெய்வனை சேனாதிபதி"

ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி பவுர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் ‘பங்குனி உத்திரம்’ தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.


முருகப் பெருமானின் அவதார நோக்கமான சூரனை சம்ஹாரம் செய்ததற்கான பரிசாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்துத்தந்த நாள் பங்குனி உத்திரம் அன்றுதான் என்பதால் இத்திருமணம் நடந்த திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் தனித்தன்மை பெற்றதாக அமைகின்றது.

பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனின் திருமணத்தை கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு வெகுவிரைவில் திருமண வரம் கிடைப்பதாக நம்பிக்கை. திருமணமானவர்கள் வாழ்வில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியான நிலை பெற பங்குனி உத்திரநாளில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.

ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்க மன்னரை கரம்பிடித்ததும், ராமர், சீதாதேவியை மணம் செய்ததும், ரதியின் வேண்டுதலுக்கு இணங்கி மன்மதனை சிவபெருமான் எழுப்பித்தந்ததும் ஆகிய அனைத்துமே பங்குனி உத்திரநாளில் தான் நடந்துள்ளது.


அத்துடன் இந்தநாளில் மஹாபாரத அர்ச்சுனன் பிறந்த தினம் என்பதுடன், அர்ச்சுனனுக்காக அவன் மூலம் உலகுக்கு கீதை கிடைத்ததை போற்றும் நாளாகவும் பங்குனி உத்திரம் சிறப்பு பெறுகின்றது.

சிவன், சக்திதேவியை கரம் பிடித்த நாள் பங்குனி உத்திர நன்னாள் என ஆகமங்கள் தெரிவிக்கின்றது. எனவே பல சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவங்கள் சிவன் பார்வதிக்கு நடத்தப்படும் உற்சவங்களாக அமைகின்றது.


கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.

சபரிமலை சாஸ்தா அய்யப்பன் அவதார தினம் பங்குனி உத்திரம் என்பதால் சபரிமலையில் ஆராட்டு விழா என்னும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.


பங்குனி உத்திரம் பல குடும்பங்களின் குல தெய்வங்களை தேடிச்சென்று வழிபடும் நன்நாளாக அமைகின்றது. பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபடுவதன் மூலம் நம்முடைய மூதாதையரின் ஆசியும் நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம்முடைய குலம் சிறக்கவும், வாழ்வு சிறப்பாக அமையவும் செய்கிறது.

பங்குனியில் சூரியன் தன் நட்பு வீடான குருவின் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் குருவின் அருளையும் நமக்கு பெற்று தரும்.


பங்குனி உத்திர சிந்தனை

இறைவன் திருக்கல்யாணத்தைக் காண்கின்றபோது இறைவன் தன் திருவருளுடன் இணைந்து உலகமும் உயிர்களும் வாழ அருள்புரிவதைப் போன்று திருமணமான அன்பர்கள் தங்கள் திருமணவாழ்வில் இல்லறத்தார்க்குத் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ள ஐந்து கடமைகளைச் செவ்வன செய்கின்றோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அதாவது தென்புலத்தார், தெய்வம், ஒக்கல், விருந்து, தான் என்ற ஐந்து பிரிவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வன செய்கின்றோமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.  இறைவன் எதையும் எதிர்பார்க்காமல் உலகினுக்கும் உயிர்களுக்கும் செய்யும் உதவியினை எண்ணி நன்றியினால் வழிபட வேண்டும்.  


பங்குனி உத்திரத்தன்று ஆண்டுதோறும் தவறாமல் அடியார்களுக்கு உணவளித்தத் தொண்டினைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அவர் மனைவி பரவை நாச்சியாரும் செய்வதைப் போன்று இதுபோன்ற நாட்களிலாவது ஏழை எளியவர்க்கு நம்மால் இயன்ற உதவிகளையோ, உணவையோ இறையுணர்வோடு கொடுத்து மகிழ வேண்டும்.


பங்குனி உத்திரத் திருவிழாவைக் காணவேண்டும், இறைவனை வழிபட வேண்டும் என்ற பேராவலில் சங்கிலி நாச்சியாரைப் பிரியமாட்டேன் என்று உறுதி கூறியிருந்த சுந்தரர் அதை மீறி சென்றதைப் போன்று பேராவலுடன் குடும்பத்தோடு திருநாட்காலங்களிலாவது கோவிலுக்குச் சென்று நம் எதிர்கால தலைமுறையினருக்கு நம் சமயத்தையும் பண்பாட்டையும் புகட்ட வேண்டும். எனவேதான் சம்பந்தரும் சிறு வயதிலேயே பூநாகம் தீண்டி இறந்துவிட்டப் பூம்பாவையைப் பார்த்து, “பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள், ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்” என்று பரிவோடுபாடி அவளை உயிர்பிக்கின்றார். அதாவது திருமுறைகள் ஒலிக்க, இசைக் கருவிகள் முழங்க உள்ளத்தில் பக்திக் கிளர்ச்சியூட்டும் பங்குனி உத்திரப் பெருவிழாவைக் காணாமல் போய்விடுவாயோ என்று பொருள்படுகின்றது. அடியார்கள் சிறப்பித்துக் கூறியுள்ள பெருவிழா பங்குனி உத்திரப் பெருவிழா. தமிழ்நாட்டில் காஞ்சி ஏகம்பநாதர் கோயிலிலும் திருவாரூரிலும், திருப்பரங்குன்றத்திலும் இவ்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. வாழ்விற்குத் தேவையான பல உண்மைகளை மறைமுகமாக உணர்ந்திடும் நம் சமயவிழாக்களை அறிந்து உண்மைச் சைவர்களாக வாழ்வோமாக! இன்பமே எந்நாளும் துன்பமில்லை!ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

 "திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'